உயர்ந்த கருத்தும், எளிய வார்த்தைகளும், ஓசை நயத்துக்கும் சொந்தக்காரர் கவிஞர் அழ. வள்ளியப்பா. குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல்களை எழுதியவர். ’அம்மா இங்கே வா... வா... ஆசை முத்தம் தா... தா...’ ’மாம்பழமாம் மாம்பழம்... மல்கோவா மாம்பழம்...’ ‘கை வீசம்மா கை வீசு... கடைக்குப் போகலாம் கை வீசு...’ - தலைமுறைகள் தாண்டினாலும் மாறாத குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு இது போன்ற எண்ணற்ற எளிய பாடல்களை எழுதியவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. உயர்ந்த கருத்தும், எளிய வார்த்தைகளும், ஓசை நயமும் கவிஞரின் பாடல்களின் உயிர் நாடி. பிறப்பு: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரத்தின் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த அழகப்ப செட்டியார் - உமையாள் ஆச்சி தம்பதியருக்கு மகனாக 07.11.1922 பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் வள்ளியப்பன். கல்வி: இராயவரம் எஸ்.கே.டி.காந்தி ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் கடியப்பட்டியிலுள்ள உள்ள பூமீசுவரசுவாமி இலவச உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளிக்கு நான்கு கிலோமீட்டர் நடந்து செல்லும் போது தன் கற்பனைத் திறன் கொண்டு கவி பாடிச் சென்ற கவிஞர் ஒரு நாள் மாலையில் பள்ளி முடிந்தவுடன், நண்பர்களுடன் நடந்தே வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது அவ் வழியில் ஒரு டூரிங் டாக்கீஸ் ‘லாஸ்ட் ஜங்கிள்’ என்கிற ஆங்கிலப் படத்தை, ‘காணாத காடு’ என்று தமிழில் மொழிபெயர்த்துச் சுவரொட்டிகளில் அச்சிட்டிருந்தனர். அதைப் பார்த்தவுடன் வள்ளியப்பா ஆனந்தமாக... ‘காணாத காடு கண்டுவிட்டால் ஓடு ஒளிய இடம் தேடு ஏழைகள் படுவதோ அரும்பாடு டிக்கெட் விலையோ பெரும்பேடு’ என்று பாட நண்பர்களும் உரக்கப் பாடிக்கொண்டே வள்ளியப்பாவுடன் ஓடினார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் அதாவது தனது பதின்மூன்றாம் வயதிலேயே கவிதை இயற்றத் தொடங்கியுள்ளார் கவிஞர். எழுத்துப் பணி: தொடர்ந்து படிப்பை தொடர முடியாத நிலையில் வாழ்வாதாரம் தேடி 1940 ஆம் ஆண்டில் வை. கோவிந்தனின் சென்னை சக்தி பத்திரிகை அலுவலகத்தில் காசாளராக பணியில் சேர்ந்தார். அப்போது சக்தி ஆசிரியராக இருந்த தி.ஜ.ர.வின் ஊக்குவிப்பின் காரணமாக சக்தி இதழிலேயே எழுத ஆரம்பித்தார். சக்தியில் பணியாற்றும் காலத்திலேயே இலக்கிய நண்பர்கள் பலர் அறிமுகமானார்கள். "ஆளுக்குப் பாதி" என்னும் தலைப்பில் தன்னுடைய முதல் கதையை எழுதினார். திருமணம்: சக்தி இதழ் பணியாற்றிய போது வள்ளியம்மை என்பாரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும், நான்கு மகள்களும் உள்ளனர். வங்கி பணி: சக்தியில் இவர் பணி புரியும்போது, இந்தியன் வங்கி விடுத்த அழைப்பை ஏற்று 1941ல் வங்கியில் சேர்ந்தார். வங்கிப் பணியில் இருந்தவாறு கவிதையும் கட்டுரையும் எழுதத் தொடங்கியவர் 1982 -ல் வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை எழுதினார். வங்கி பணிக்கு ஓய்வு அளித்த கவிஞர் கவிதைப் பணிக்கு ஓய்வு அளிக்காமல் எழுதிக் கொண்டுதான் இருந்தார். வங்கிப் பணியில் இருக்கும்போதே பாவலர் மலர், டமாரம், சங்கு இதழ்களுக்குக் கெளரவ ஆசிரியராகப் பணியாற்றினார். இதழ் ஆசிரியர் பணி: 1951 முதல் 1954 வரை பூஞ்சோலை என்ற இதழுக்கும், ஒய்வு பெற்ற பின்பு 1983 முதல் 1987 வரை கல்கி வெளியீடான கோகுலம் இதழில் ஆசிரியராக பணியாற்றினார். குழந்தை எழுத்தாளர் சங்கம்: குழந்தை எழுத்தாளர்கள் பலரைத் திரட்டி 1950-ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். சக்தி வை. கோவிந்தன் இச்சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். அவரைத் தொடர்ந்து வள்ளியப்பா இந்த அமைப்பின் காரியதரிசியாகவும், தலைவராகவும், வழிகாட்டியாகவும் பல பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார். நூல்கள்: வள்ளியப்பாவின் 23 பாடல்கள் கொண்ட முதல் கவிதைத் தொகுதியான மலரும் உள்ளம், 1944 ஆம் ஆண்டு வெளிவந்ததது. 1957-ல் 135 பாடல்கள் கொண்ட தொகுதிகளையும், 1961 இல் மற்றொரு தொகுதியையும் வெளியிட்டார். குழந்தை கவிஞர்: சிரிக்கும் பூக்கள் என்ற தொகுதியை வெளியயீடுக்குப் பிறகுதான் குழந்தைக் கவிஞர் என்ற பெயரிட்டு அனைவரும் அழைக்கத் தொடங்கினார்கள். எழுதிய நூல்கள்: மலரும் உள்ளம் - 1 பாப்பாவுக்குப் பாட்டு சின்னஞ்சிறு பாடல்கள் சுதந்திரம் பிறந்த கதை ஈசாப் கதைப் பாடல்கள் ரோஜாச் செடி உமாவின் பூனைக் குட்டி அம்மாவும் அத்தையும் மணிக்குமணி மலரும் உள்ளம் - 2 கதை சொன்னவர் கதை மூன்று பரிசுகள் எங்கள் கதையைக் கேளுங்கள் நான்கு நண்பர்கள் பர்மாரமணி எங்கள் பாட்டி மிருகங்களுடன் மூன்று மணி நல்ல நண்பர்கள் பாட்டிலே காந்தி கதை (பாடல் தொகுதி) குதிரைச் சவாரி நேரு தந்த பொம்மை நீலாமாலா பாடிப் பணிவோம் (பாடல் தொகுதி) வாழ்க்கை விநோதம் சின்னஞ்சிறு வயதில் பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் அழ. வள்ளியப்பா 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், 1 நாடகம், 1 ஆய்வு நூல், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 1 தொகுப்பு நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இவற்றில், 2 நூல்கள் மத்திய அரசின் பரிசும், 6 நூல்கள் தமிழக அரசின் பரிசும் பெற்றுள்ளன. குழந்தைகளுக்காக இவர் ஐம்பதிற்கும் மேலான நூல்களையும், ஆயிரத்திற்கும் மேலான பாடல்களையும் எழுதியுள்ளார். நம் நதிகள் என்ற தலைப்புடன் தென்னாட்டு ஆறுகள் பற்றிய இவரது நூலை, தேசீய புத்தக டிரஸ்ட் பதினான்கு இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளது. சொற்பொழிவுகள்: 1979 -ல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் கல்கி அறக்கட்டளை நிகழ்வில் "வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். 1981 -ல் 5வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் "வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். பாராட்டும் விருதும்: குழந்தைகள் இலக்கிய முன்னோடி, பிள்ளைக் கவியரசு, மழலைக் கவிச் செம்மல் என்று சில அமைப்புகள் பாராட்டியுள்ளன. 1982 இல் மதுரை காமராசர் பல்கலைக்கழத்தினால் தமிழ் பேரவைச் செம்மல் என்ற விருது அளிக்கப்பட்டு பாராட்டப்பட்டார். திரைப்பட பாடல்: குழந்தை பாடல்கள் எழுதி வந்த கவிஞர் வள்ளியப்பா ‘வா ராஜா வா’ படத்தில், ‘கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா...’ என்ற பாடல் மூலம் திரையுலகிலும்தனது பங்கை பதியம் போட்டுயுள்ளார். மறைவு: பால்யத்தின் பசுமைப் பக்கங்களில் பதியம் போடப்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை படைத்த கவிஞர் மதுரைப் பல்கலைக்கழகத்தின் குழு உறுப்பினர் என்கிற முறையில், ‘குழந்தை இலக்கியத்தை பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக வைக்க வேண்டும்’ என்கிற தீர்மானத்தை வலியுறுத்திப் பேசிக் கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்தார். பின்னர், சிகிச்சை பலனின்றி அகவை 66ல் (16.03.1989) மறைந்தார்.


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வைகள் : 84
3
Close (X)
புதிதாக இணைந்தவர்

மேலே