அண்மையில் படித்த புத்தகம் : தொட்டில் சூரியன் எழுதியவர் : தி.அமிர்த கணேசன் ஆங்கில மொழியாக்கம் : டி.ஜோசப் சூலியஸ் வெளியீடு : தருண் பதிப்பகம், சீர்காழி- சட்ட நாத புரம் முதல் பதிப்பு : 2013, பக்கங்கள் : 104, விலை ரூ 75. புதுச்சேரியின் முதல் பேரத் தமிழ் நூல் என்ற குறிப்போடு வெளி வந்திருக்கும் இந்த நூல் , பேரனைப் பற்றி தாத்தா எழுதிய நூல். புதுமையான முயற்சி. எதை எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்பது ஒரு எழுத்தாளரின் உரிமை. எப்படி இந்த நூல் புதுமை என்றால், தமிழ்க் கவிதை இடது புறத்தில், அதற்கு ஒரு அருமையான மொழி பெயர்ப்பை- ஆங்கிலத்தில் டி.ஜோசப் ஜீலியஸ் அவர்கள் கொடுத்திருக்கின்றார்கள். தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதையை ஒரே நேரத்தில் படிக்கலாம், 'தொட்டில் சூரியனுக்குத் தாத்தாவின் தாலாட்டு ' என்று அணிந்துரையை கவிஞர் ஈரோடு தமிழன்பன் கொடுத்திருக்கின்றார். அணிந்துரையும் கூட அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதையைப் போல துள்ளி விளையாடுகிறது " அமிர்தகணேசனுக்கும் அவர் வார்த்தைகளுக்கும் இடையே கவிதையும் தன்னை இழந்த இன்பமயக்கத்தில் கூத்தாடுகிறது; கொண்டாட்டம் போடுகிறது,வாழ்வின் பொருண்மைகள் வியப்புத் தளங்களைக் கைப்பற்றி வெளிச்சம் பாய்ச்சுகின்றன. கொண்டாட்டமான கவிதை-தொட்டில் உற்சவம் நடத்துகிறது, ஒளிக்கள் அருந்திய மதர்ப்பு விசித்திர வண்ணக் கோலங்களைப் படைத்துத் தள்ளுகிறது....." எழுதிக் கொண்டே போகலாம். கரந்தைப் புலவர் அய்யா ந.இராமநாதன் அவர்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களைப் பற்றிப் பாடம் எடுத்தது ஞாபகம் வருகிறது எனக்கு. அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்கள் அவ்வளவு ஈடுபாட்டோடு இந்த அணிந்துரையை அளித்துள்ளார்கள். " This is a pure literary creation in which the author having a comprehensive view of the world is trying to teach his grandson ,every thing under the sun " என்று ஆரம்பிக்கும் டி.ஜோசப் ஜீலியஸ் அவர்களின் அணிந்துரை தொட்டுச்செல்லும் தூரங்கள் அதிகம். வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், தங்களின் மொழிபெயர்ப்புக்கு என்று சொல்லும் அளவுக்கு மொழி பெயர்ப்பும் , ஆங்கில அணிந்துரையும். " உணர்வைக் கிளர்த்தி அதன் உட்பொருளைக் கிரகித்து கொள்ளச்செய்வதன்றி, ஒரு கவிதையின் செயல் வேறு எதுவும் இருக்காது என்றே கருதுகிறேன் . சூழல் இயல் குறித்தும், மொழி உணர்வு குறித்தும் ஒரு பேரனுக்குச்சொல்வதுதான் இன்றைய ஆகப்பெரும் தேவை. அதை அமிர்தகணேசன் வெகு செப்பமாகச் செய்திருக்கிறார்..." என்று சொல்லும் கவிஞர் யுகபாரதியின் ' தமிழ்த்தாத்தாவின் அமிர்தம்' எனும் அணிந்துரை, ஆங்கிலத்தில் டி.ஜோசப் ஜீலியஸ் அவர்கள் மொழிபெயர்த்தால் நான் மரபுக் கவிதையாக இப்புதுக் கவிதையை மாற்றுகிறேன் பார் என ' மடிக்குள் பெய்த மழை ....' என அய்யா எசேக்கியல் காளியப்பன், ' ஒற்றை மலருக்கல்ல , இது....மொத்தத் தோட்டத்திற்கும் 'என சரவணன் ஜெகன்நாதன் என அனைவரும் படைப்பாளி அகன் அவர்களின் படைப்பாக்கத்தை பல கோணங்களில் படம் பிடித்துக்காட்டுகின்றனர் . தி.அமிர்தகணேசன் அவர்களின் என்னுரை, இந்தப் படைப்பு எழுந்ததன் பின்னணியை, அதற்குக் கை கொடுத்தவர்களை பட்டியலிட்டுக் காட்டுகிறது,. இந்த நூலை மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம். " வணக்கம் என்றே வாய் மலர்ந்து வளர் தமிழில் சுணக்கமின்றிச்சொல்லிப் பழகு . சுகம் காண் ..." என்று தொடங்கும் முதல் பாகம் , இன்று நீ .... என்று "தங்கத் தொட்டிலிடப் பெருஞ்செல்வம் இல்லையாதலால் சந்த்த் தொட்டிலில் தாலாட்டுகிறேன் உறங்கடா நீ காணி நிலமில்லை கை நிறையப் பொருள் இல்லை மேனி முழுதும் வற்றா அன்புண்டு என்னிடம் காண் ' என்று அன்பை, பாசத்தைக் கொட்டும் கவிதைகளாக, ஆலம் கட்டி மழை போல அன்பு கொட்டும் பா துளிகளாக வாசிப்போரை பரவசப் படுத்துகிறது. வார்த்தைகள் இயல்பாய் வந்து விழும் வேகம் , "புல்லினம் பூவினம் வண்டினம்- பல் புள்ளினம் துள்ளிடும் மானினம் உன்னினம் நேசங்கொள் " - வியக்க வைக்கிற்து.உணர்ச்சிக் கொட்டலாய் பக்கம் 28 முதல் 63 வரை முதல் பாகம். இவர்களோடு நீ என அடுத்த பாகம். பேரனுக்கு அவன் யார் என்பதையும், அவனது உறவுகள் சாதி கடந்த, மதம் கடந்த தமிழ் உறவுகள் என்பதையும் படம் பிடித்துக் காட்டும் பாகமாக அமைந்துள்ளது. " பொய்ம்மையை அறிந்திட மெய்யாய இருந்திடப் -பா நெய்யும் நெசவாளி 'தமிழ்ன்பன் உன் உறவு காண்.... மண்ணில் நீயுமோர் மனிதன் மண்ணன்று என்று பண்ணில் பொழிந்த பாரதிதாசன் உன் நில உறவு " என்று பட்டியலிடும் கவிஞர் , பேரனுக்கு தாய் வழி உறவுகளையும், தந்தை வழி உறவுகளையும், தமிழ் வழி உறவுகளையும் கவிதையால் பட்டியலிடும் பகுதியாக இரண்டாம் பாகம் நாளை நீ என்னும் மூன்றாம் பாகம் தன் பேரன் எப்படி வரவேண்டும் என்பதையும் , எதை எதைக் கற்க வேண்டும், என்ன என்ன ஆற்றல் பெற வேண்டும் என்பதையும் பட்டியலிடுகின்றர்ர். " பாராடா உன்னுடன் பிறந்த பட்டாளம் " என்று புரட்சிக் கவிஞர் முழுங்குவதைப் போல ' விழி, கதிர் முன் நாளும் விரி பார்வை புவியெங்கும் மொழி, தமிழில் மட்டும் உயர் வளர்ச்சி காண்.... யாரோடும் நட்புக் கொள் க்ண்டம் மற ஊரோடும் சேர்ந்து வாழ் உயர்வுண்டு காண் " என முழுங்குகின்றார். அறிவுரைக் கொத்துக்களாய், கவிதை மூலம் பரப்ப விரும்பும் நல் முத்துக்களாய் இந்த மூன்றாம் பாகம் அமைந்துள்ளது. முடிவாக புதிய ஆத்திசூடி உனக்களிப்பேன் பூபாளப் புயலே " எனப் புதிய ஆத்தி சூடி பாடி முடிக்கின்றார் நான் கொள்கை அளவில் மாறுபடும் இடங்களும் இத் தொகுப்பில் உள்ளன. 'இறை உணர்வு இன்பம் ஏற்றிடு -அன்றியும் கறை அதில் மூட நம்பிக்கை தூற்றி எறிந்திடு " எனப் பக்கம் 92-ல் குறிப்பிடுகின்றார். இறை உணர்வு என்றாலே மூட நம்பிக்கை குவியல்தானே, அதில் எப்படி நீக்குவது எனும் கேள்வி எழுந்தது என்னுள். ஒரு மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தை, பல புதுமைகளைப் புகுத்தியுள்ள ஒரு நூலினை படித்தோம் என்னும் மன நிறைவை, மழலையின் குறும்புகளை, அசைவுகளை உங்கள் மனக்கண் முன்னால் நிறுத்தும் கவிதை மழலை ஓவியத்தை நீங்கள் காண் இயலும் , இந்த தொட்டில் சூரியன் நூலை வாசிப்பதால். வாசியுங்கள், நீங்களும் அந்த மழலை உலகத்திற்குள் சென்று வாருங்கள். .


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வைகள் : 67
3
Close (X)
புதிதாக இணைந்தவர்

மேலே