விவேக்பாரதி- கருத்துகள்

நல்ல முயற்சி...போட்டியில் பங்கேற்கும் எண்ணம் இல்லை என்றாலும் கொடுத்த தலைப்பு அற்புதம் ஆகையால் என் கவிதையை இங்கு பதிகின்றேன்.

களி மதுரம்

தொடுபேசியின் ஒளிநேர்முகம் விழியோகருந் துளைகள்
இடைநாடுறும் அரசாள்பவர் நினைவேயென வளைவு
திடலாய்வரு முயர்மாணவர் திரளேயெனக் குழலும்
அடடாவிவள் நடையோவயல் நடமாடிடும் பயிரே!

நிலவாய்நிறம் உளமேகொளும் நிழல்கூடவு மழகு
மலர்வாயெழில் நுனிநாசியி ளொளியாடுத தழகு
சிலைமேனியள் முலைமேலெழு மெழிலாடையு மழகு
உலைபோலிவள் நினைவேயுற மனமாகிடும் மெழுகு!

கன்னத்தெழும் கிண்ணக்குழி கன்னல்தரும் ரசமும்
சின்னக்கரம் அங்கத்துகிர் வண்ணத்தெழில் பரவும்
மென்மைப்பதம் தங்கத்திரள் கொஞ்சக்கலை அணிகள்
என்னைத்தொட நெஞ்சைச்சுட முன்னிற்கிற பருவம்!

அங்கத்திடை தங்கத்துணி சந்தத்திடை நளினம்
சங்கத்தமிழ் வர்ணித்திட வந்திப்பெணை எழுதும்
மங்கைக்குயர் மங்கைப்பர நங்கைக்குறும் வடிவம்
இங்குற்றவள் ரம்பைக்குயிர் வம்பைத்தரும் பதுமை!

கட்டித்தொழ முத்தக்கலை வித்திட்டிட மனதும்
முட்டித்துய ரெட்டுத்தினம் பித்துப்பிணி அடையும்
குட்டிச்சிலை மொட்டுக்கனி மொத்தக்களி மதுரம்
சொட்டுத்துளி கிட்டக்கதி பக்கத்துறும் நிசமே!!

-விவேக்பாரதி
01.01.2018

சபாஷ்! நல்ல கவிதை! அருமையான காட்சி அமைப்புகள்! நல்ல ஓசை நயம்! வாழ்த்துகள்

சபாஷ் அண்ணா...உங்கள் கவிதை என்னைக் கிளர்த்தியது...இப்படி....

ஒற்றைக்கால் தவம்செய்து மோட்சம் வாங்கி
உவகையுடன் இருக்கின்ற பூக்கள் போலக்
கற்றவரும் வாழ்தற்கிங் கிடமுண் டாமோ?
கவிஞர்க்கும் புலவர்க்கும் வழியுண் டாமோ?
உற்றவரை எண்ணாமல் மனமெண் ணாமல்
உறவின்றி பிரிவின்றி இருக்கும் பூக்கள்
மற்றவரை மனந்தன்னை எண்ணி எண்ணி
மலர்கொள்ளும் நாம்மட்டும் மயங்கு கின்றோம்!

ஒருநாளில் ஆயுள்தான் என்ற போதும்
ஒருபோதும் மலர்கவலை கொள்வ தில்லை!
இருக்கின்ற தொருநாளே என்று வீணாய்
இடருக்குள் வீழ்கின்ற எண்ணம் இல்லை
வருத்தங்கள் இல்லாமல் வனப்பை மட்டும்
வாரிக்கொ டுக்கின்ற தன்மை கொண்டு
இருந்தாலும் மலரைப்போல் இருக்க வேண்டும்!
இன்பத்தை மட்டும்நான் ரசிக்க வேண்டும்!

மலருக்கு வண்டுவந்தால் இன்பம் இல்லை
வாராது போனாலோ துன்பம் இல்லை
மலருக்கு மாலையாக ஆசை இல்லை
மாலையென ஆனாலும் கவலை இல்லை
மலருக்குக் கூந்தல்தொட விருப்பம் இல்லை
மணம்வீச அதுநேர்ந்தால் கலக்கம் இல்லை
உலகத்தில் மலர்போல வாழ வேண்டும்
ஒன்றிற்கும் எதிர்பார்க்காத் தன்மை வேண்டும்!!

சபாஷ் மணி அண்ணா....

காக்கிப்பை தபால்காரர் தடத்தைப் பார்த்தே
காலங்கள் கழிக்காதே அன்பே என்று
வாக்கைத்தான் சொல்லிடவே அவரும் வந்து
வாழ்வளித்துக் காப்பாரே கவலை வேண்டா!
சீக்கான பசலைநோய் இழுக்கும் சேற்றில்
செழுமையி ழக்காதே வாலைப் பெண்ணே
தாக்கிவரும் தனிமைக்கு முடிவும் உண்டு
தலையணையில் புரண்டழுகக் கனவும் உண்டு !!

ஆமாம் ! நன்றி ஸர்பான் !

உண்மை தான் ! மிக்க நன்றி தோழமையே !

இசைக்கும் இசையாய் இயல்பாய் அழகாய்
இறங்கிய தேதம் கருத்து
விசைக்கு விசையாய் அசைக்கும் அதுவோ
விவேக் எனக்கும் விருத்து (விருந்து)

மிக்க நன்றி ஐயா !!!

சபாஷ் ! உடனடிப் பின்னூட்டங்கள் ! அதே சந்தங்களில் ! பலே ! வாழ்க ! மிகக் நன்றி ஐயா !!

மரபினைப் பார்க்க மகிழ்வுடன் கேட்க
மனங்களும் கோடி உண்டு !
வருமிடம் கண்டு மழைபொழி வுற்றால்
வளங்களும் வாய்ப்ப துண்டு !
மரபிலும் பாக்கள் வனையுவீர் தோழ !
மாத்தமிழ் வாழ வேண்டும் !
தரமுடைப் பாக்கள் எளிமையும் வேண்டும் !
தருதல்நம் கடமை யன்றோ !!

அடடா!

நெடுநாட்கள் கழித்து நானும்
நெஞ்சினிக்கும் மரபுப் பாவில்
படுவழகு வாழ்த்தாம் இந்தப்
பாக்கண்டு சிலிர்த்து விட்டேன் !
உடனேதம் பக்கம் சென்றே
உலவினேனங் கிருப்ப தெல்லாம்
திடமான புதிதே யன்றி
திறன்மரபும் இல்லை ஏனோ ?

பேசா திருப்பதுபேச் சுக்கல்ல மிட்டாயைத்
தாரா திருப்பதற்கென் றோர் !

பேசா(து) இருப்பதுபேச் சுக்(கு)அல்ல மிட்டாயைய்
தாரா(து) இருப்பதற்(கு)என்(று) ஓர் !

இப்படி மாற்றினால் இலக்கணம் பிறழாத குறள் வெண்பா ஆகிவிடும் ! வாழ்த்துகள் !

நிச்சயமாக ! மிக்க நன்றி நட்பே !

பிறந்த கவியைப் பிரியத் துடனே
திறந்த எழுத்தில் திறமாய்ச் சுவைக்கச்
சிறந்த கவிதைச் சிந்தலைக் கண்டு
பறந்து நெஞ்சம் பரவசங் கொள்ள
மறந்து போன வழக்க மெல்லாம்
அறுந்து போன சொந்த மெல்லாம்
திரும்ப வந்து சேர
விரும்பும் நெஞ்சம் விசையுறப் பாடுமே !

நல்லதொரு வேண்டுதலை நாம்பாடத் தந்தீர்
. நற்றமிழின் திருப்புகழைப் போல்பாடல் தந்தீர்
சொல்வதெலாம் செந்திலவன் காதாறக் கேட்டு
. சோதித்து வழங்கிடுவான் நல்லதமிழ்ப் பாட்டு
கல்லால மரநிழலில் வசித்திருப்பான் தம்பி
. காளிதமைப் பெற்றெடுத்த பார்வதியின் செல்வன்
எல்லாமும் நமக்கீவான் ஏதுகுறை நெஞ்சே
. எழுதுங்கள் பாடுங்கள் மொழியுண்டு கொஞ்ச !

ஆஹா ஆஹா !

பாராமல் போனாலோ பாழ்படுவேன் அறியாயோ
சேராத பொழுதெல்லாம் செத்திடுவேன் தெளியாயோ
நீராடும் புனைமுழுதும் நின்னுருவங் கண்டேனே
ஓ!ராதா! கேளாயோ ! ஓர்ந்தருகே வாராயோ ?

விண்ணிடையே உன்பிம்பம் விசித்திரமாய் வளருதடீ
கண்ணிரண்டில் கவியமுதம் காட்டாறா யோடுதடீ
எண்ணத்தில் உனைச்சேரும் ஏகாந்தம் தெரியுதடீ
வண்ணப்பூக் காடெலாம் வாலைமுகம் காட்டுதடீ !

மையலெனும் நோய்வந்து மானத்தைத் தாக்குதடீ
தையலுனைத் தழுவிடவே தளிர்மனமும் ஏங்குதடீ
கையிலுன்றன் கைபிடிக்கக் காதலுளம் எண்ணுதடீ
வெய்யில்மழை போன்றவளே வேண்டுபொருள் நீயெனக்கு !

காலையிலே உன்முகத்தைக் காணவேண்டும் கண்மணியே
மாலையெலாம் நின்மடியில் மாளவேண்டும் மல்லிகையே
சோலையிலே நாமிருவர் சொல்லறுத்த உயர்நிலையில்
காலமெலாம் வாழுகின்ற கதைவேண்டும் பூங்குயிலே

உனைமறந்தால் வாழ்வில்லை உனையன்றி காப்பில்லை
நினைவெல்லாம் நீயாவாய் நிஜமெல்லாம் நீயாவாய்
கனவெல்லாம் வென்றாயே காதலியே என்றாயே
மனதெங்கும் நின்றாயே மகிழ்ச்சியென வந்தாயே !

ஹா ஹா ! அப்படி ஓரே அடியாக கூறமுடியாதல்லவா தோழமையே ! ஒவ்வொரு துறையிலும் நேரத்தை அழிக்கும் செயல்களும் உண்டே ! தங்கள் கருத்திற்கு நன்றி !

நொண்டிச் சிந்து இலக்கணம் சார் கவிதையே என்றாலும் அந்த இலக்கணம் நம் இயற்பாக்களுக்குக் காட்டும் இலக்கணமாய் அல்லாது இசைப்பாக்களுக்கே உரிய ஓசை நயத்தை இலக்கணமாகக் கொண்டு திகழுவது. இதனைக் குறித்த இருவேறு கருத்து இசைப்பாக்களைப் பற்றிய கட்டுரைகளில் இருந்து வருகின்றது. ஒன்று ஓசை நயங்கருதி வகுத்த "உயிர்" எனச் சொல்லப்படும் ஓசை இலக்கணம் (இரா.திருமுருகன் ஐயாவுடையது) மற்றொன்று இயல்பாகவே இவ்வகைப் பாக்களில் வெண்டளை பிறழாமல் வருவதால் வெண்டளை மட்டுமே போதுமென்று ஒரு இலக்கண விதிமுறையும் உள்ளது (புலவர் குழந்தையைத் துவங்கி பலர்) ஆனால் இரண்டுமே ஓரளவிற்குப் படித்த பாலகன் பாரதியின் பாஞ்சாலி சபதம் படித்த போதையிலிருந்து இன்னும் தெளியாத சிறியன் எழுதும் போதேஉரக்கப் படித்துக் காதுகளில் விழும் ஓசையை வைத்து எழுதுகிறேன் ! எல்லாம் அப்பன் பாரதியிடமிருந்து பெற்றதே !

நாள்தோறும் என்பது நாடோறும் என்று புணர்வதாகப் படித்துள்ளேன் ! அதே விதி தான் இந்த இடைக்குறைக்கும் என்று நினைத்து நாடொறும் என்றிட்டேன் சரியான விளக்கம் கேட்டு மீண்டும் எழுதுகிறேன். மிக்க நன்றி கவின் சாரலன் ஐயா !

நிச்சயமான உண்மை ! மிக்க நன்றி !


விவேக்பாரதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே