எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நாளையமனிதன் பாவலர் கருமலைத்தமிழாழன் அக்கம் பக்கம் அறிந்தவனாய் அன்பு...

நாளையமனிதன்
பாவலர் கருமலைத்தமிழாழன்

அக்கம் பக்கம் அறிந்தவனாய்
அன்பு நெஞ்சில் நிறைந்தவனாய்
துக்கம் தோய்ந்த உறவுகளின்
துயரில் பங்கு கொண்டவனாய்
தக்க உதவி கேட்காமல்
தமராய் எண்ணிச் செய்பவனாய்
மிக்க நேயம் உடையவனாய்
மிளிர்ந்தான் நேற்று மனிதனிங்கே !

பொருளே வாழ்வின் குறிக்கோளாய்ப்
பொறுப்பே சிறிதும் இல்லானாய்
அருளை மறந்த மனத்தவனாய்
அடுத்தவர் வீழக் காண்பவனாய்
இருளின் செயலைச் செய்பவனாய்
இன்னல் விளைத்து மகிழ்பவனாய்
உருவில் மட்டும் மனிதனாக
உலவு கின்றான் இன்றிங்கே !

குண்டுகள் நிறைந்த உடலாகக்
குருதி யெல்லாம் நஞ்சாகக்
கண்ணோ கணினிப் பொறியாகக்
காட்சி யெல்லாம் எந்திரமாய்
விண்ணை வாழும் வீடாக்கி
விரிந்த கோள்கள் தனதாக்கி
மண்ணை மறந்த மனிதனாக
மாறி நாளைப் போவானோ !

வரவாய் அறிவு வளர்ந்தாலும்
வானே கைக்குள் விழுந்தாலும்
உரமாய்ப் புதுமை மலர்ந்தாலும்
உலகே கடுகாய்ச் சிறுத்தாலும்
மரத்தைத் தாங்கும் வேராக
மனத்துள் அன்பு இல்லையென்றால்
சிரமே இல்லா உடலாகச்
சிதைந்தே மனிதன் அழிவானே !

நாள் : 2-Oct-14, 12:33 pm

மேலே