எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் ஒரு சிலருக்கு எப்போதும். என்...

வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் ஒரு சிலருக்கு எப்போதும். என் போன்றவர்களுக்கு எப்போதாவது நிகழும். கடந்த சில மாதங்களாகவே மகிழ்ச்சியான தருணங்கள் என் வாழ்க்கையில் நிறையவே. எல்லாவற்றிற்கும் நான் கடவுளுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

கடந்த சனிக்கிழமை அன்று வ.உ.சிதம்பரனார் அவர்களைப் பற்றிய கவிதை தொகுப்பினை சோலை பதிப்பகத்தார் வெளியிட்டனர். அந்த தொகுப்பிற்காக நானும் ஒரு கவிதை எழுதி இருந்தேன்.அதன் வெளியீட்டு விழாவிற்கு வரக் கூறி எனக்கு அழைப்பு வந்திருந்தது. திரைப் பட தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு எஸ்.பி. முத்துராமன் அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார்கள். நிறைய பேர்களுக்கு ஆசிரியச் சுடர் விருதும் அந்த நிகழ்ச்சியில் வழங்கப் பட்டது.

நான் எனது தோழி கவிஞர் சிவகாமி அருணன் அவர்களுடன் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்த தருணத்தில் மேடைக்கு வரும்படி எனது பெயர் அழைக்கப் பட்டது. புத்தகம் வழங்குவதற்காக என்று நினைத்து நான் மேடை ஏறியபோது நான் நினைத்துப் பார்க்காத ஒரு ஆச்சர்யம் எனக்கு காத்து கிடந்தது. எனக்கு "நங்கூரக் கவிஞர்" என்கிற விருதுக்கான சான்றிதழோடு ஒரு மெடலும் அணிவிக்கப் பட்டது. திரு எஸ்.பி. முத்துராமன் அவர்களால் இந்த விருது வழங்க பட்டபோது நான் மிகவும் மகிழ்ந்துதான் போனேன். என்னை போன்று இன்னும் பலருக்கும் இந்த விருது அந்த விழாவில் வழங்கப் பட்டது.

முதன் முதலில் எனக்கு இந்த எழுத்து தளத்தில் கருத்துக்களை பதிந்தமைக்காக விருதினை பெற்றேன். இப்போது கவிதை எழுதியமைக்காக நான் இரண்டாவது விருதினை பெற்றிருக்கிறேன். இதில் சிறு வருத்தம் எனக்கு. சான்றிதழில் எனது initial மாறிவிட்டது. மாற்றித் தருவதாக கூறி இருக்கிறார்கள். இந்த தளத்தினில் நிறைய பேர்களின் ஆசிர்வாதங்களும் வாழ்த்துக்களும் என்னை இந்த அளவிற்கு இட்டுச் சென்றிருக்கிறது என்பதில் நான் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். விருது பெற்றதை உங்கள் அனைவரிடத்திலும் பகிர்வதில் மகிழ்ச்சியே.

வ உ சிதம்பரனார் செக்கிழுத்த செம்மல் 143வது பிறந்த நாள் (கவிதை எண் 210657)
===========================================================================

ஓட்டப் பிடாரச் செம்மல் ஓங்கிய பேச்சினில்
கட்டைப் பிண மெழுந்து பேசிடுமே
பொந்தினில் வாழ்ந்திடும் கோழையினையும்
கட்டியிழுத்தே கோஷம் போடச் செய்திடுமே!!!

சட்டம் படித்திட்ட மாமேதை வ உ சியாம்
தென்னாட்டு திலகராய் வாழ்ந்தவராம்
ஏழை எளியோரின் நீதிக்கே வாதிட்டு
அவர் செய்திட்ட சேவைக்கு ஈடிணையுண்டோ??

ஓய்வின்றி உழைப்பினில் நாளும் களைத்திட்டு
உழைப்பாளி பாதி ஊதியமும் பார்க்கவில்லை
ஓய்வும் விடுப்பும் கூலிக்கில்லையில்லை
அடிமையான கூலி கண்டே வெகுண்டார் !!!

தொழிலாளி வர்கத்திற்கு ஓய்வு கிடைத்திட
உழைபிற்கேற்ற ஊதியம் பெற்றிட
போராட்டங்களாயிரம் செய்தவராம் - வ உ சி
பெற்றுத்தந்தார் விடுப்போடுநல் ஊதியந்தான்!!!

வாணிபம் என்கிற பேரினிலே நம் நாட்டினிலே
சூரையாடவந்த கொள்ளை வெள்ளையர்கள்
கண்டு எரிமலை பேச்சினில் கனல்கொண்டே
சுரண்டல் பேர்வழிகளை சுட்டெரித்தார்!!!

இட்டப்படி விலை பொருள் விற்பனைகள்
என்று இங்கிலீசுக்காரன் சட்ட திட்டங்களாம்
விலைகொடுத்திட இயலாத வேதனைகள்
திண்டாட்டதிலே மக்கள் அவதிகளாம்!!!

சுய வாணிபம் செய்திடும் எண்ணத்திலே
சுதேசி கப்பலொன்றை சொந்தமாக்கி வைத்தார்
அயல் வாணிபத்தை ஒடுக்கும் திட்டத்திலே
கப்பலோட்டியே வ உ சி வெற்றி கண்டார்!!!

தொல்லை தந்தவர்க்கு தொல்லை என்றானவர்
அண்டிப் பிழைக்க வந்தவனுக்கிது ஆகவில்லை
செம்மலை சிறைதள்ளி ஆயுள் கைதியாக்கி
செக்கிழுக்க வைத்தே பல கொடுமைகளாம்!!!

தன்னலப் பேய்கள் வாழும் நாட்டினிலே
நாட்டு நலம் பேணியவர் வாழ்வும் சிறையினிலே
உண்ட சோறுமது அரிசி சோறுமில்லே
புழுவோடு கல் மண் உண்டு வாழ்ந்திருந்தார்!!!

நாட்டுக்கு நன்மைகள் நாளும் புரிந்தவர்
ஆயுள் கைதி என சிறையில் வாடியவர்
பாரதமும் விடுதலையாகும் முன்னே
இம்மண்ணை விட்டேனோவிடு தலையானார்??

வீரம் செறிந்தவர் இன்றும் நம் நெஞ்சினில்
வாழுகின்றார் இன்னும் வாழ்ந்திடுவார்
கப்பலோட்டிய செம்மலை போலவே வாழ்ந்திட
இளைய சமுதாயமே புறப்படுவாய் புயலெனவே!!!

(குறிப்பு: தொகுப்பிற்காக கொடுக்கையில் இதனை சிறிது மாற்றி சில பத்திகளை நீக்கிவிட்டு கொடுத்தேன்)

பதிவு : C. SHANTHI
நாள் : 23-Oct-14, 10:19 pm

மேலே