எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்தியா முழுவதும் திருவள்ளுவர் விழா: தமிழர்களின் உணர்வுகளுக்கு கிடைத்த...

இந்தியா முழுவதும் திருவள்ளுவர் விழா: தமிழர்களின் உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி - வைரமுத்து

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. தருண் விஜய் தமிழின் மேன்மை குறித்து பேசி வருகிறார்.

அவர் நேற்று டெல்லி மேல்–சபையில் ‘திருவள்ளுவரின் பிறந்த நாளை வட இந்திய பள்ளிகளில் கொண்டாடுவதற்கும், திருக்குறளின் சிறப்புகளை பள்ளி குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றார்.

அவரது கோரிக்கையை ஏற்று அடுத்த ஆண்டு (2015) முதல் இந்தியாவின் அனைத்து பள்ளிகளிலும் திருவள்ளுவர் பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய மந்திரி ஸ்ருதி இரானி தெரிவித்தார்.

இதுபற்றி கவிஞர் வைரமுத்துவிடம் கருத்து கேட்ட போது அவர் கூறியதாவது:–

ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கும் கிடைத்த வெற்றி இது. திருக்குறளை உயர்த்தி பிடிக்க பாடுபட்ட, போராடிய அனைத்து தமிழர்களுக்கும், அனைத்து கட்சிகளுக்கும் கிடைத்த பெருமை.

பாராளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்கள் சொல்வதை விட தருண் விஜய் சொல்வதில் அழுத்தம் அதிகம்.

வெற்றித்தமிழர் பேரவை சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தியபோது நான் சொன்னேன். ‘காளிதாசனையும், வால்மீகியையும், தாகூரையும் நாங்கள் கொண்டாடுகிறோம். இளங்கோவடிகளையும், கம்பரையும் திருவள்ளுவரையும் நீங்கள் கொண்டாடலாமே’ என்றேன்.

இது முதற்கட்ட வெற்றி தான். நான் தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தேன். அப்போது ஒட்டுமொத்த தமிழுலகும் நன்றி சொல்லும் என்றேன். அப்போது அமைச்சர் அவரை தனது அறைக்கு வரவழைத்து பேசி ஒப்புக்கொண்ட விபரத்தை தெரிவித்தார்.

இது ஒரு தொடக்கம்தான். இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய உண்டு. எங்களோடு நீங்கள் தோள் கொடுங்கள். நாங்கள் கொண்டாடுவோம்.

திருவள்ளுவர் விழாவை கொண்டாடுவது அவரது படத்தை கொண்டாடுவதல்ல. திருக்குறளை கொண்டாடுவது, திருக்குறளை மொழி பெயர்த்து வடமாநில பள்ளிகளில் கற்பித்து கொடுக்க வேண்டும். திருக்குறளின் கருத்துக்களை பிள்ளைகள் அறிந்து கொள்ள செய்ய வேண்டும். தமிழன் உலகுக்கு கொடுத்த கொடை என்ன? என்பதை திருவள்ளுவர் மூலம் வட நாட்டு பிள்ளைகள் உணர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாள் : 29-Nov-14, 11:51 am

மேலே