எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழர் திருநாள் அகபலமும் வயல்வளமும் எங்களது வாழ்வாதாரம் அறவழியும்...

தமிழர் திருநாள்


அகபலமும் வயல்வளமும் எங்களது வாழ்வாதாரம்
அறவழியும் தாய்மொழியும் எங்களது புகழ்கூறும்
உவமைக்கு வள்ளுவனுரைத்த உண்மைகளே போதும்
உலகிற்கு முப்பாலையூட்டிடும் அதுவொன்றே பொதுவேதம்

மார்கழி கடைநாள் மனப்பாரங்களை எரிப்போம்
மாற்றங்கள் கண்டிட நல்வழியில்தான் நடப்போம்
தைத்திங்கள் பிறந்தாலே நெய்பொங்கல் மணம்வீசும்
தமிழரது பொங்கலினை இத்தரணியே வியந்துபேசும்

ஆதவனின் முகத்தினில்தான் தினம் முழிப்போம்
ஆதியவன் அருளினில்தான் மனம் செழிப்போம்
மாகோலங்களில் நடை பாதைகளை மறைத்திடுவோம்
மாயிலை தோரணமிட்டு நல்வரவை கொடுத்திடுவோம்

சல்லிகட்டு விளையாட துள்ளிகிட்டு ஓடுவோம்
வில்லுகட்டி இலக்கியத்தை சொல்லிகிட்டு பாடுவோம்
கல்லெடுத்து அடுப்பமைத்து புதுப்பானையையதில் சூடுவோம்
நெல்லவிழ்த்து அரிசியாக்கி உலைப்பானையிலெய் போடுவோம்

புத்தரிசியில்தான் நாங்கள் பொங்கல் வைப்போம்
புத்துணர்ச்சியை அடிநெஞ்சில் தங்க வைப்போம்
ஆவினங்களை அலங்கரித்து ஊர்வலத்திற்கனுப்பி வைப்போம்
ஆனந்தமாய் ஆடிப்பாடி ஒற்றுமையை ஓதிவைப்போம்

அம்மியறைப்போம் கும்மியடிப்போம் உறியடிப்போம் பறையடிப்போம்
அனைவரும் ஒன்றாய்கூடி நேரங்களையதில் கழிப்போம்
கரும்பொடிப்போமதன் சார்குடிப்போம் கவலையின்றிதான் கிடப்போம்
கனிபண்ட்த்தையெல்லாம் ஒருபிடிப்பிடிப்போம் திருக்குறளைதான் தினம்படிப்போம்

பொங்கல் பொங்கும்போது குலவை சத்தமிடுவோம்
"பொங்கலோ பொங்கலென்று" கூடிகூவி விடுவோம்
உழவினில் உலகமென்ற உண்மையை உணர்ந்திடுவோம்
உயிருடலில் உழவினை உதிரமாக்கி கலந்திடுவோம்

பண்பாட்டினை படைத்திடுவோம் அதிலேன்றும் நிலைத்திடுவோம்
பகலவன்தான் படத்தவனென்பதால் அவனைதான் வணங்கிடுவோம்
மண்தேவியை மதித்திடுவோம் பயிர்விதைகளை விதைத்திடுவோம்
மறுஜென்மம் கிடைத்தாலும் தமிழராகதான் உதித்திடுவோம்

ஏரடித்துழவுச்செய்யும் உழவனின் உள்ளம் வெள்ளை
ஊர்முழுக்க முகர்ந்துபார் மலர்ந்திருக்குமெல்லாம் முல்லை
ஈரடிக்கு இணையாக இவ்வுலகில் எதுவுமில்லை
ஓரடியாவது படியுங்கள் வள்ளுவன் சொன்னச்சொல்லை
- ராஜ குமரன்
<<<<<<<பொங்கல் வாழ்த்துக்கள் >>>>>>>

பதிவு : குமரன்
நாள் : 17-Jan-15, 9:25 pm

மேலே