எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புலர் பொழுதின் விரிபூவில் சிந்தும் பனித்துளி குளிர்ச்சி, விரிந்து...


புலர் பொழுதின் விரிபூவில்
சிந்தும் பனித்துளி குளிர்ச்சி,

விரிந்து பறந்து திளைக்கும்
பட்டாம்பூச்சியின் இறக்கையில்
வானவில் தெளித்த
வண்ணப் புள்ளிகளின் மலர்ச்சி,

ஒற்றைப் பூவின் கனம் தாங்காமல்
வளைந்த காம்பின் மென்மை வெம்பும்
தன்மை நம் நட்பு!

விரிந்தே இருக்கும் திசைகளை விட
பரந்து நின்றது நம் நட்பின் நிழல்!
நிழலின் நிஜம் நீயெனில்
நிஜத்தின் நிழல் நான்!

ஆசைத் தொட்டிலில்
ஓசை உண்டாக்கும்
நினைவுக் குழந்தைகள்
நம் தாலாட்டில் வளர்ந்தன ­
செயல் வீரர்களாய்!

பூங்காவிலும் புல்வெளியிலும்,
கடற்கரைப் பரப்பிலும்,
நீள் வீதி ஓரங்களிலும்,
கடிகார முள் தொலைந்து போக
நான்கு கால்கள் நான்கு கண்கள்
ஒரு பார்வை ஒரு நோக்கம்!

அப்போதெல்லாம்
ஒற்றைச் செடியின் ஒருமலரோடு
உரையாடியதில்லை நாம்­!!

மலர்க் கூட்டங்கள்
நம் உரை வீச்சு மகரந்தங்களால்
கர்ப்பமுற்றுச் செயல்கனிகளை
விளைவித்ததுண்டு!

ஒற்றை அலையின் நுரையோடு
நம் கால் நனைந்ததில்லை ­
நம் இருத்தலில்
-முழு கடலே நம்முள்!

வீதியின் மின் கம்பம்
ஒன்றோடு மட்டும்
நம் நிழல் வீழ்ந்ததில்லை ­
நமது செயல் நடைகளால்
வீதியே வெளிச்ச வெள்ளத்திற்குள்!

ஒற்றை விண்மீனோடு
நமது பார்வைக் கீற்றுகள்
பயணிக்கவில்லை ­
கற்றை விண்மீன் கூட்டமும்
கோடி நிலாக்களாய் ஒளிர்ந்தன ­
நமது பார்வையின் வீரியத்தால்!

… இப்படித்தானே
ஒருவர் ஒருவராய் வந்த இருவரும்
ஒற்றைச் சாதனை செய்ததில்லை ­
கோடிகளின் கூட்டமாய்க்
கொத்துச் சாதனைகளைப்
படைத்தோமே ...
நினைவில்லையா …?

பதிவு : agan
நாள் : 14-Mar-15, 3:50 pm

மேலே