எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திரும்பிப் பார்க்கிறேன் . தளத்தில் (25.08.2015) அன்று இணைந்து...

திரும்பிப் பார்க்கிறேன்.


தளத்தில் (25.08.2015) அன்று இணைந்து நேற்றோடு (25.10.2015) இரண்டு மாதங்கள் முடிந்து விட்டது. இந்த இரண்டு மாதங்களில் 93 படைப்புகள் (அவற்றின் தரம் என்னவென்று உங்களுக்கே தெரியும்)

இந்த இரண்டு மாதத்தில் 93 படைப்புகள் என்பது அதிகம் படித்தவர்களுக்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால்  என்னைப் போன்ற கடைக்கோடி கிராம மனிதனுக்கு அது மிகப்பெரிய விசயம்.

கிராமத்து மூலையில் விவசாயக் குடும்பத்தில் இருந்தாலும், தமிழ் மீது நேசம் கொண்டு, நான் எழுத்து விவசாயத்தில் பயந்தபடி நுழைந்த அந்த நாட்களை திரும்பிப் பார்க்கிறேன்.

தளத்தில் முதல் படைப்புக்கு அன்பு நண்பர் திரு சர்பான் அவர்களின் முதல் கருத்தோடு ஆரம்பித்த என்  அக முக மகிழ்ச்சி, அடுத்து, தைரியமாக அந்த சமயத்தில் அறிவித்திருந்த ”திருமணமான ஆண் பெண் தோழிகள் நட்பு” என்ற போட்டியில் கலந்து கொண்டது என ஒவ்வொன்றாக நினைவில் வந்து போகிறது.

அப்போதெல்லாம் ஒரு கலக்கம்.அதிகம் படிக்காத கிராமியத்தான் என் படைப்பைப் பற்றி கற்றறிந்த மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற புரியாத தாழ்வு மனப்பான்மை எனக்குள் கலந்திருந்தது. பிறகு தளத்தோழர்களின் வார்த்தைகளில் அவை மறைந்து போக, என் தன்னம்பிக்கையோடு என் படைப்புகளும் துளிரெடுத்தன. அவைதான் மற்றவர்களிடம் என்னையும் அடையாளப்படுத்தின.

இப்போது ஓரளவு தேறியிருக்கிறேன் என்பதை உணர்கிறேன்.

அமைதியான கிராமத்தவன் என்றாலும், தமிழை சுவாசிப்பதால், பிழையான கவிதைகளை ”சிறந்த கவிதை” என்று தளம் காட்டும்போதெல்லாம் அதைக் கண்டு பொங்கிப் பொருமி, தளத்துக்கு மடல் அனுப்பி வெளிப்படுத்திய அந்த சம்பவங்களும் இப்போது வந்துபோகிறது.

காதல்மட்டுமே கவிதை என்றாகி விட்டாலும் என் படைப்புகளில் தாய் தந்தை உறவுப்பாசம், மனித நேயம், கிராமிய இதயங்களின் நிலைமை, விவசாயிகளின் நிலை, மத ஒற்றுமை, வரதட்சணைக்கொடுமை, தன்னம்பிக்கை, நடவுப்பாடல், கிராமிய இசை,சாதிக்கொடுமைகள் என பல்வேறுபட்ட கோணங்களில் தந்து வருகிறேன்.
 
தமிழ் பாடும் தளத்தில் குழந்தைகளுக்காக பாடல்கள்  இந்த இரண்டு மாதத்தில் எதுவும்  இடம் பெறாத ஆதங்கம் வந்த போது அதைப் போக்க நிலாப் பாடல், பட்டாம்பூச்சிப் பாடல், குருவிப் பாடல் என குழந்தைகள் மனதில் பதியும்படி  நல்ல கருத்துக்களை இழைத்து  சந்தத்தோடு பாடி மகிழ குழந்தைப் படைப்புகளையும் இந்த இரண்டு மாத இடைவெளியில் தந்திருக்கிறேன்.

விதவிதமாய், வகை வகையாய் இன்னும் படைப்பேன்.உங்கள் அன்பு மழையில் நனைந்து கொண்டே இதயம் தொடும் படைப்புகள் இன்னும் பலவற்றைப் படைப்பேன்.


நன்றியுடன்
க.அர.இராசேந்திரன்.

நாள் : 26-Oct-15, 1:22 am

மேலே