எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மகளிர் மட்டும்.. அதிகாலை விடியலிலே இன்முகம் காட்டி தேநீர்...

மகளிர் மட்டும்.. 



Image result for சிரிக்கும் பெண் ஓவியம்


அதிகாலை விடியலிலே இன்முகம் காட்டி 
தேநீர் அளிப்பதிலே ஆரம்ப சேவை 
வகை வகையாய் உணவுடனே அன்பும் ஊட்டி 
எதிர்பாராமல் வாழ்வதெல்லாம் மகளிர் மட்டும்.! 

அஞ்சனத்தை பூசி தினம் மங்களம் சேர்த்து 
அஞ்சுகின்ற நடையினிலே மெட்டியிசைத்து 
சிதறிவிழும் சில்லறையின் நகைப்பின் ஒலியில் 
இல்லம் அழகூட்டி பார்ப்பதெல்லாம் மகளிர் மட்டும்..! 

கருவினிலே சுமந்திடுவாள் வாரிசதனை 
மகப் பேற்றில் கண்டிடுவாள் மரண வலியும் 
ஆடவரால் இயலாத அற்புதம் எல்லாம் 
அகிலத்தில் நடத்துகின்றார் மகளிர் மட்டும்..! 

கணவனென்றும் பிள்ளையென்றும் உறவுகளென்றும் 
உள்ளத்தினை உள்வாங்கும் உயிர் எந்திரம் 
கள்ளத்தனம் புகும் நெஞ்சம் கண்டால் அவரை 
நல்லவராய் அமைப்பதெல்லாம் மகளிர் மட்டும்..! 

இல்லத்தின் சுமைதாங்கி என்றென்றுமாகி 
எத்தனைதான் துயர் வரினும் அமைச்சருமாகி 
ஆலோசனை வழங்கிடுவாள் இடரும் ஓட 
இல்லம் ஒளிர வைப்பதெல்லாம் மகளிர் மட்டும்..! 

தாயாகி தாரமாகி தங்கையுமாகி - பெண் 
தியாகியாகி தான் தேய்வாள் நித்தம் வாழ்வில் 
உணர்ந்திடுங்கள் உத்தமரே ஆடவர் நீங்கள் 
உங்களன்பு கூட்டலில் பெண் வாழ்வு மிளிரட்டும்..!! 

                                                                                                                   Image result for சிரிக்கும் பெண் ஓவியம்

================================================= 
27-02-2016 அன்று இலக்கிய சோலை மாத இதழ் 
நடத்திய கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை. 
தலைப்பினை அளித்து வாசிக்க பணித்த பத்திரிக்கை 
ஆசிரியர் திரு சோலைத் தமிழினியன் அவர்களுக்கு 
என் நன்றிகள். 
================================================= 

மகளிர் தின வாழ்த்துக்களுடன், 
சொ. சாந்தி 



பதிவு : C. SHANTHI
நாள் : 7-Mar-16, 11:42 pm

மேலே