எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நோட்டா எனும் எதிர்ப்பு குரல். 'நோட்டா' (NOTA-None Of...

  நோட்டா எனும் எதிர்ப்பு குரல். 

 'நோட்டா' (NOTA-None Of The Above)  பட்டன், வாக்குப்பதிவு எந்திரத்தில், கடைசி வேட்பாளர் பெயருக்குக் கீழே பொருத்தப்பட்டிருக்கும்.அதாவது வாக்களிக்கும் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை நான் வெறுக்கிறேன் என பொருள்படக்கூடிய பொத்தானை அழுத்தி.. வாக்கு பதிவு செய்து.. வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற தேர்தல் ஆணையம் வழங்கிய உரிமை.
ஒரு தொகுதிக்கு உட்பட்ட வேட்பாளர்களை மட்டுமல்ல.. ஒரு மாநில தேர்தல் களத்திலிருக்கும் எந்த ஒரு கட்சிகளையும் அதன் கொள்கை மற்றும் செயல்களை விரும்பாத ஒருவர் தனது எதிர்ப்புக் குரலை ஜனநாயக ரீதியாக.. சட்ட ரீதியாக  பதிவு செய்ய கிடைத்திருக்கும் வாய்ப்பு. இந்த வாய்ப்பு எவ்வாறு  தேவையற்றதாக கருத முடியும்.நோட்டா-விற்கு வாக்களிப்பது எவ்வாறு பொறுப்பற்ற செயலாக இருக்கும். ? 

நோட்டா வாக்குகளை விட குறைந்த அளவு வாக்குகளை பெறும் வேட்பாளர்களில் எவர் அதிக வாக்குகளை பெற்றாரோ அவர் வெற்றி பெறுவதாக தேர்தல் ஆணையத்தின் விதி சொல்லப்பட்டாலும். எதிர்காலத்தில் தன்னெழுச்சியாக மக்கள்  நோட்டா வாக்கு மூலம் 100 சதவீதம் நோட்டா வாக்குகளை பதிவு செய்யும் புரட்சி நிகழ்ந்தால்...? ஏன் நிகழக்கூடாது. தற்போது இருக்கும் அரசியல் வாதிகளின் அராஜகம் , கொள்கையற்ற கூட்டணி, சந்தர்ப்பவாதம்.. போன்றவற்றால் வெறுப்புணர்ச்சி அடையும் மக்களின் மனநிலை தொடந்தால் நிச்சயம் நடக்கும் ஒருநாள். 
நோட்டா அறிமுகப்படுத்திய போதே... வாக்காளர்கள் தங்களது எதிர்ப்புக்குரலை வாக்கு எந்திரத்தின் மூலம் காட்டினார்கள்.  சமீபத்திய உதாரணமாக குறிப்பிட வேண்டுமென்றால் 2014 ம் ஆண்டு நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில்.., தமிழ்நாட்டில் 39 தொகுதிகளின் மொத்த வாக்குகளில் 1.4 சதவீதம் (5,82,062) நோட்டா வாக்குகள் பதிவாகியது. தற்போது நடைப்பெறும் சட்டசபை தேர்தலுக்கான கருத்து கணிப்புகளிலும் நோட்டா வாக்குகள் 5  முதல் 19 சதவீதத்தில் பதிவாகும் என்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது. இது  ஒரு மாநில அல்லது தேசிய கட்சிக்கு கிடைக்ககூடிய வாக்கு எண்ணிக்கை.  இந்த சதவீதங்களை  கண்டு.. அரசியல் கட்சிகள் அச்சமடைய வேண்டும். இந்த நோட்டா வாக்கு சதவீதங்கள் தங்கள் கட்சிக்கு கிடைக்க  வேண்டுமெனில்.. நேர்மையான.. ஊழலற்ற ஆட்சியை கொடுக்க வேண்டுமெனும் பொறுப்பும் கடமையுணர்வும் வளரும். இந்த நோட்டா சதவீதங்களால் தோல்விப்பெறும் கட்சிகளும் சரி.. ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி.. தங்கள் தவறுகளை திருத்தி அல்லது முடியாத பட்சத்தில் அரசியலிருந்து ஒதுங்கி,... நல்லவர்களுக்கு , இளைஞர்களுக்கு அரசியலில் வழிவிட நிர்பந்திக்கப்படுவார்கள்.  ஆக நோட்டா வாக்கு என்பது ஜனநாயக ரீதியாக வாக்காளர்கள் கொடுக்கக்கூடிய எச்சரிக்கை மணி. 
நோட்டா வாக்கு பொறுப்பற்ற செயலாக இருப்பதாக எண்ணினால், எந்த வாக்காளனும் மெனக்கெட்டு வெயிலில்  காத்திருந்து வரிசையில் நின்று வாக்களிக்க முன்வரமாட்டார்கள் . பொறுப்போடு. தன் எதிர்ப்பை பதிவு செய்ய முன்வருகிறான். அரசியலில் மாற்றம் வரவேண்டும். பணநாயகம் மாண்டு.. ஜனநாயகம் புத்துணர்வு பெற வேண்டுமென. தேசப்பக்தியோடு... கடமையாற்றுகிறான். இது எவ்வாறு தேவையற்றதாக இருக்கமுடியும். 

நோட்டா என்பது வெறும் சொல் அல்ல. வெறும் வெறுப்புணர்வுக்கான பொத்தான் அல்ல.. ஆயுதம்.. வாக்காளனின் ஆயுதம்.. எதிர்ப்புக்குரல் பதிவு செய்ய கிடைத்த பொக்கிஷம். நோட்டாவினால் சாக்கடை அரசியல்.. புனித நதியாக மாறும். மாற்றம் நிகழக்கூடிய காலம் வெகுதூரம் இல்லை. வெகு அருகிலும் இல்லை. ஆனால் மாற்றத்தை நிகழ்த்தக்கூடிய சக்தி நோட்டாவிற்கு உண்டு.. உண்டு.... உண்டு..!

-இரா.சந்தோஷ் குமார்.  

நாள் : 14-May-16, 2:57 pm

மேலே