எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தந்தை.... ======== கண்கண்ட கடவுளாம் நம் பிரம்மன் தந்தை...

  தந்தை.... 
======== 
கண்கண்ட கடவுளாம் நம் பிரம்மன் தந்தை 
நித்தமே வணங்கட்டும் அக்கடவுளை நம் சிந்தை 
உயிரோட்டம் கொண்டுள்ள நகலிதான் அவரும் 
உயிருடன் அவர் வடித்த பிரதிகள்தான் நாமும்..! 

வாழ்க்கைப் பயணத்தின் திசை காட்டி தந்தை 
அவர்வழி நம்வழிஎனில் உயர்வதும் உண்மை 
வித்திட்டு வளர்த்தாரவர் வியர்வையில் நம்மை 
அவரையிறுதிவரை காப்பதே என்றும் நம் கடமை..!! 

நன்மையும் தீமையும் அறியாத பருவம் 
எல்லாமும்தெளி வாக்கிய தந்தைதான் குருவும் 
பள்ளியில் புகட்டாத பாடங்கள் யாவும் - தந்தை 
அறிவுரையில் கண்டிட வந்திடும் உயர்வும் ! 

தாயவள் சுமப்பதோ ஈரைந்து மாதம் 
தாயு மானவன்சுமத்தலோ தீராது நாளும் 
நிழல்தந்து விருட்சமாய் நின்றவன் பார்வை - நம்மை 
விருட்சமாய் காண்கையில் உள்ளதவன் பெருமை..! 

பிறையுமாய் நரையுமாய் தந்தையவர் அருகில் 
அமைச்சராய் கொண்டவரின் வாழ்க்கையது மெருகில் 
தந்தைக்கு நாம் செய்யும் பணிவிடை யாவும் 
நம் பிள்ளை கற்றிட அநாதை இல்லங்கள் சாகும்..!! 

துன்பங்கள் யாவையும் தன்னோடு வைப்பான் - தந்தை 
இன்பங்கள் நமக்களித்து ஓடாகித் தேய்வான் 
தெய்வங்கள் தேடித்தெரு கோவில் செல்லல் வீணே 
இல்லத்து கடவுளாம் தந்தை வணங்கினால் வாழ்வே..! 

============================================================== 
12-06-2016 அன்று :இலக்கிய சோலை: பத்திரிக்கை தந்தையர் தின 
சிறப்பிதழை வெளியிட்டது. அதில் வெளியான எனது கவிதை. 
தலைப்பினை அளித்து எழுத பணித்த திரு சோலைத் தமிழினியன் 
அவர்களுக்கு எனது நன்றிகள். கவி அரங்கில் கவிதையை வாசிக்க 
இயலாது போனாலும் பிரசுரமானதில் மகிழ்ச்சி.. 
=========================================================== 

அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்களுடன், 
-சொ.சாந்தி-

பதிவு : C. SHANTHI
நாள் : 17-Jun-16, 8:44 am

மேலே