எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அந்துமணி பா.கே.ப மார்ச் 26 ,2017 !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! மதுரை...

அந்துமணி  பா.கே.ப  மார்ச் 26 ,2017
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!




மதுரை அருகே உள்ள திருநகரில், லென்ஸ் மாமா உறவினர் வீட்டு விசேஷம்; என்னையும் அழைத்தார். மறுநாள் காலை மணி, 6:00 - 7:30க்கு விசேஷம்; இவர் அழைத்தது, முதல் நாள் மாலை, 6:00 மணி.
'இனி ரயில் டிக்கெட் எடுக்க முடியாது; பஸ்சில் பயணிப்பது உயிருக்கு, 100 சதவீதம் உத்திரவாதமில்லாதது; என் காரும் சர்வீசுக்கு சென்றுள்ளது; என்ன செய்யலாம்...' என, கேட்டார் மாமா.
'ஆபீஸ் காரை கேட்டுப் பாருங்க மாமா...' என, ஐடியா கொடுத்தேன். அங்கே, இங்கே பேசி, ஒரு பழைய காரை எடுத்துச் செல்ல, அனுமதி வாங்கி விட்டார்.
வண்டியை கிளப்பி, தேனாம்பேட்டை வருவதற்குள் மூன்றாவது கியர், 'ஸ்லிப்' ஆவது தெரிந்தது. சிட்டியில் வண்டி ஓட்டுவதற்கு, மூன்றாவது கியர் ரொம்ப அவசியம். இரண்டாவது கியரிலேயே வண்டியை செலுத்தினால், பெட்ரோல் அதிகம் செலவாகும். மேலும், மற்ற வண்டிகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்து செலுத்த முடியாது. இரண்டாவது கியரிலேயே மெதுவாகச் சென்றால், மற்ற வண்டிக்காரர்களின், 'சாவு கிராக்கி' என்ற, அர்ச்சனைக்கு ஆளாக வேண்டி வரும்.
'மணி... என்னால் சமாளிக்க முடியாது போல இருக்கு; இந்த, 'ஹெவி டிராபிக்' முடியும் வரை, செங்கல்பட்டு தாண்டும் வரை, நீயே வண்டியை ஓட்டு...' எனக் கூறி, பொறுப்பை, என் தலையில் கட்டினார்.
சென்னைக்கும் - செங்கல்பட்டுக்கும் இடையே உள்ள தூரம், 56 கி.மீ., தான் என்றாலும், அந்த தூரத்தைக் கடக்க, எப்படியும் ஒரு மணி நேரமாகி விடும்.
டிரைவிங் சீட்டில் நான் உட்கார்ந்த பின்தான், லென்ஸ் மாமாவிற்கு நிம்மதி பிறந்தது; எனக்கு, 'டென்ஷன்' ஆரம்பமாகியது. அப்படிப்பட்ட கண்டிஷனில் இருந்தது வண்டி.
தேசிய நெடுஞ்சாலைகளில் வண்டி ஓட்டுவோரிடையே எழுதப்படாத ஒரு ஒப்பந்தம் உண்டு. ஆதவன் மேற்கில் மறைந்த பிறகும், அவனது வெளிச்சம் முழுமையாக மறையும் வரை, 'ஹெட் - லைட்'டை போடாமல் இருப்பது என்று!
வாகனங்கள் தம் முன் விளக்கைப் போட்டு விட்டால், வண்டி ஓட்டுவது சிரமமாகி விடும். அதனால், எதிரே வருபவர் முதலில் விளக்கை போடட்டும் என, ஒவ்வொருவரும் நினைத்தபடியே வண்டியை செலுத்துவர். இந்த எழுதாத ஒப்பந்த உறுப்பினர்களில் நானும் ஒருவன்.
ஏழு மணி அளவில் விளக்கைப் போடும் சந்தர்ப்பம் நெருங்கியதும், 'ஹெட்லைட்' பொத்தானை இழுத்தபோது தான், அதில் ஏதோ பிரச்னை; 'ஹெட்-லைட்' வேலை செய்யவில்லை.
1. பல்பு பணாலாகி இருக்க வேண்டும். ஆனால், அந்த பிரச்னை இருப்பதாக தெரியவில்லை. ஒரு சைடு, 'பியூஸ்' என்றாலும், மறுபக்கமாவது எரியும்.
2. மெயினிலேயே, 'பியூஸ்' போயிருக்க வேண்டும்.
3. லைட் சுவிட்சில் பிரச்னை இருக்க வேண்டும்.
4. 'கட் - அவுட்டரில்' தொடர்பு சரி இல்லாமல் இருக்க வேண்டும்.
ஒவ்வொன்றாக சோதனை செய்து வந்ததில் கட் - அவுட்டரில், 'கான்டாக்ட்' சரி இல்லாமல் இருப்பதை கண்டுபிடிக்க முடிந்தது.
கட்டிங் பிளேயர் உதவியால் பாயின்ட்களை நெருக்கி சுவிட்சை போட்டதும், 'பளீர்' என, விளக்குகள் எரிந்தன.
'பலே கில்லாடிப்பா நீ...' என, 'சர்ட்டிபிகேட்' அளித்தார் மாமா.
செங்கல்பட்டு கடந்து மாமண்டூர் வந்ததும், பஸ் நிலையத்தில் உள்ள ரெட்டியார் ஓட்டலில் சமோசா, டீ சாப்பிட்டார் மாமா. 'சமோசாவை சூடாகக் கொடுக்கக் கூடாதா இந்த ரெட்டியார்...' என, அங்கலாய்த்து கொண்டார்.
திண்டிவனம் வந்தது; ஊர் கோடியில் ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும், வண்டியை ஓரம் கட்டச் சொன்னார் மாமா. 'என்ன சமாசாரம்...' என, நான் கேட்கும் முன், வண்டியில் இருந்து குதித்து, சாலையின் வலது புறம் இருந்த உற்சாகபான கடைக்குள் புகுந்து, இரண்டு பாட்டில் பீருடன் வந்து, 'ம்... வண்டியைக் கிளப்பு...' என, உற்சாக பானம் கையில் கிடைத்து விட்ட ஜோரில் உத்தரவிட்டார்.
'அவ்ளோதான்... இனி, விடிய விடிய நான் தான் காரை செலுத்த வேண்டும்...' என, முடிவு செய்து கொண்டேன். இதை மாமாவிடம் சொன்னால், 'என்னாலா முடியாது... கொடு காரை...' என, வீம்பு பேசுவார்.
விழுப்புரம் வந்தது; சாலையோர ஓட்டலில், பறப்பன மற்றும் நடப்பனவற்றை அவர் வாங்கிக் கொண்டு, மாமி கட்டிக் கொடுத்திருந்த இட்லியை என்னிடம் தள்ளி விட்டார். இரவு உணவை அங்கேயே முடித்து புறப்பட்டோம்.
திருச்சி அடையுமுன்னே ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கியிருந்தார் மாமா; எனக்கும் தூக்கம் வர ஆரம்பித்தது.
காலை, 6:00 மணிக்கு முன், மதுரையை அடைய வேண்டுமே என்ற குறிக்கோளில், தொடர்ந்து வண்டியை செலுத்தினேன்.
ஒரு, 'ஸ்டேஜில்' இனி முடியாது என்ற நிலை வந்தபோது, துவரங்குறிச்சியைக் கடந்திருந்தது, வண்டி. சாலையோரம் வண்டியை நிறுத்தி, '10 நிமிடம் கட்டையை நீட்டுவோம்; குட்டித் தூக்கம் நல்ல பலன் கொடுக்கும்...' என்று எண்ணி படுத்தவன், குயில்கள் கூவும் சத்தம் கேட்கவே, 'டபக்'
என, எழுந்து கொண்டேன். நேரம் பார்த்தால் காலை, 5:30 மணி.
அதன்பின், எவ்வளவோ விரட்டி, மதுரை, திருநகரை அடையும் போது காலை, மணி, 6:45 ஆகி இருந்தது.
தூங்கி முடித்து, 'பிரஷ்ஷாக' எழுந்த மாமா, 'பரவாயில்லயே... 'டை'முக்கு கொண்டு வந்து சேர்த்திட்டியே...' என, பாராட்டுவதை கேட்டு, நொந்து கொள்ளத்தான் முடிந்தது.
அன்று இரவு, மாமாவுடனும், அவரது உறவினர்களுடனும் பேசிவிட்டு, மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தேன். மறுநாள் காலையில்,
'பிக் - அப்' செய்து கொள்ளச் சொன்னார் மாமா.
வழியில் இருவர் பஸ்சுக்காக, 'அம்போ' என, நடு இரவில் காத்திருந்தனர்... 'ஒரே ஆளாக காரில் தனியாகச் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது நமக்கு... இவர்கள் பஸ்சுக்காக இன்னும், எவ்வளவு நேரம் காத்துக் கிடக்க வேண்டி இருக்குமோ... உதவி செய்யலாமே...' என்ற எண்ணத்தில், அவர்களை கடந்து சென்று இருந்தும், காரை, 'ரிவர்ஸ்' செய்து, அவர்கள் அருகே சென்றேன்.
முன்னே சென்ற கார், பின் பக்கமாக வந்து, தங்கள் அருகே நிற்பதை கண்ட இருவர் முகத்திலும் பீதி படர்ந்தது.
சென்னை போன்ற பெரு நகரங்களில் இது போல என்றால், உடனே கார் அருகே நெருங்கி, 'கிண்டி வரை போகணும்... ராயபுரம், 'சைடு' போறீங்களா சார்...' என, தாமாகவே முன் வந்து கேட்பர். மதுரை போன்ற நகர்களில், 'லிப்ட்' கொடுக்கும் பழக்கம் இன்னும் பரவவில்லை போலும்!
பீதி படர்ந்த அவர்களை நோக்கி, 'எங்கே போகணும்?' எனக் கேட்டேன். மிகுந்த தயக்கத்துக்குப் பின், 'அழகப்ப நகர்...' என்றார் ஒருவர். 'சரி... வாங்க, 'டிராப்' செய்கிறேன்...' எனக் கூறியதும், இருவரும், 'கிசுகிசு'வென, ஏதோ பேசிக் கொண்டனர்.
பின், அவர்களில் லுங்கி கட்டிய ஒருவர், 'இங்கிருந்து இரண்டு, 'ஸ்டாப்பிங்' தூரம்தான் சார்... அதிக தூரம் இல்லை...' என்றார்.
'இரண்டு ஸ்டாப்பிங் தூரம் தான்...' என்பதை, எதற்காக இவ்வளவு அழுத்தமாக சொல்கிறார் என்று புரியவில்லை எனக்கு!
இருவரில் ஒருவர் மட்டும் காரில் அமர, வண்டியை செலுத்த ஆரம்பித்தேன். ஆசாமி பேச்சுக் கொடுக்காமல் இருக்கவே, அவரை நோக்கி திரும்பினேன். 'முன் பின் தெரியாத ஆசாமியுடன் காரில் ஏறி விட்டோமே... என்ன ஆகுமோ...' என, அவர் பயந்தபடி இருப்பது தெரிந்தது.
அவரது பயத்தை போக்கும் நோக்கில், 'எங்கே வேலை செய்றீங்க?' எனக் கேட்டேன்.
'கப்பலூர் மில்லில்...' என, ஒரு வரியில் பதில் கூறினார்.
'என்ன வேலை?'
'ஆபீஸ்...' என, நிறுத்திக் கொண்டார். 'ஆபீஸ் பாய்' என, சொல்ல வந்திருக்கலாம்; கவுரவம் தடுத்து இருக்கும். நானும் ஆபீஸ் பாய் தான் என்று அவருக்கு தெரிந்திருந்தால், ஒரு வேளை முழுமையாகப் பேசி இருப்பாரோ என்னவோ!
'இந்த நேரத்தில் எங்கே போறீங்க?' எனக் கேட்டேன்.
'அழகப்ப நகரில் மில் அதிகாரி இருக்கிறார்; அவசரமாக கோயமுத்தூர் போகணும்ன்னு வரச் சொன்னார். அவர் கொடுக்கும் ஒரு பொருளை வாங்கிக்கிட்டு கோயமுத்தூர் போகணும்...' என்றார்.
இதனிடையே அழகப்ப நகர் சாலையை அடைந்திருந்தது கார். வண்டியை நிறுத்தினேன். கதவு ஓரமாக சீட்டின் நுனியில் அமர்ந்திருந்த அந்த ஆசாமி, 'இந்தாங்க சார்...' என, தன் வலது கையை நீட்டினார்.
'என்ன?' என்றபடியே, அவரது கையை நோக்கினேன். இரண்டு ரூபாய் நாணயம் மூன்றை வைத்திருந்தார். 'குபீ'ரென எனக்கு சிரிப்பு வந்தது. 'ரெண்டு ஸ்டாப்பிங் தூரம் தான்...' என, அழுத்தமாக, திரும்பத் திரும்ப ஆசாமி கூறியதன் பொருள் இப்போது விளங்கியது.
என் சிரிப்பை தவறாகப் புரிந்து, 'வழக்கமா லாரி, வேன்களில் வரும்போது, இவ்வளவுதான் கொடுப்பேன் சார்... என்னிடம் இதற்கு மேல் இல்ல; ப்ளீஸ் இதை வாங்கிக்கங்க...' என்றார்.
'ஐயா... ஒரு அன்புக்காக, மனிதனுக்கு மனிதன் உதவும் சகோதர நல்லெண்ணத்தில் தான் உங்களுக்கு, 'லிப்ட்' கொடுத்தேன்; காசுக்காக அல்ல...' என, நான் கூறியதை, அவரால் நம்பவே முடியவில்லை.
'ரொம்ப தேங்ஸ் சார்...' என, பல முறை கூறியபடியே இறங்கினார். 'இப்படியும் கூட நடக்குமா...' என்ற ஆச்சரியம் கலந்த சந்தேகம் இன்னும் அவருக்கு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதுபோன்ற இடங்களில் வசிக்கும் நகரத் தொடர்புடையவர்கள், பாமரர்களுடன் பழகி, நகரத்தவர்களைக் கண்டு, இவர்கள் அஞ்சுவதை போக்க முயன்றால், நகரத்தான், கிராமத்தான், பணக்காரன், பணமில்லாதவன் என்ற பேதமை மறையும்; மனித நேயமும் சுமூகமாக வளரும் என்பதில், சந்தேகம் இல்லை.

நாள் : 26-Mar-17, 3:22 pm

மேலே