எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கண்ணு ரெண்டும் மிரட்டும்... மீசை ஒண்ணு அரட்டும்... அந்தி...

கண்ணு ரெண்டும் மிரட்டும்...
மீசை ஒண்ணு அரட்டும்...
அந்தி சாஞ்சபின்ன அசலூரான் வந்தாலும் விரட்டும்...

காவலா நீ  நின்ன வரை....
காலடி மண்ணும் அசைஞ்சதில்லை
மழை மாறி பெய்ஞ்சதில்லை
ஊருக்குள்ளயும் பஞ்சமில்லை!

பொழுது சாய்ஞ்சிட்டா பொட்டைகோழி வீடு வந்துடும்...
ஆடு மாடு கூட அழகா வீடு வந்துடும்..
தனியா போனவுகளும் தைரியமா வந்திடுவாக!

பொங்க ஒண்ணு வச்சுபுட்டா 
பொங்க பொங்க தருவாரு....
கெடா ஒண்ண வெட்டிபுட்டா
கேட்டதயெல்லாம் தருவாரு...

ஆயிரம் தான் தெய்வம் இருக்கு...
அத்தனைக்கும் காவலா கருப்பு இருக்கு...

சனமெல்லாம் தூங்கினதும் சலங்கை ஒலி கேக்கும்
சங்கிலி கருப்பு அது ஊருசுத்தி காக்கும்!

சர்காரு வந்து சாலை போட்டுத்தரேன்னு சொல்லி
சிறு தெய்வ சிலையெல்லாம் தூக்கிப்போட்டு போயிடுச்சு...
சாலை வந்துடுச்சு சாலையா உன்னை காணவில்ல...
ஆலமரத்தோட அய்யா உன்னை காணவில்ல...

காவலா நின்ன இடத்துல காவல் நிலையம் வந்துடுச்சு...
எல்லையில நின்ன தெய்வம் காணாம போயிடுச்சு...

பொழுதும் சாஞ்சுடுச்சு பொட்டை  கோழிய காணல..
ஆடு மாட கூட காணல...
தனியா போனவளை தேடி பாத்தும் காணல...

மக்க காணல...மனுசனயும் காணல
தெக்க நீ இருந்த திசையும் காணல...

ஆதி கருப்பா உன்னை காணல
உன்னோட சேர்த்து நின்ன ஆத்தங்கரயும் காணல...
கோட்டை கருப்பா உன்னை காணல
உன் கோட்டயில வந்திருந்த என் குலத்தையும் காணல...
வயக்காட்டு கருப்பா உன்னை காணல
உன்னோட ஒட்டி நின்ன வயக்காட்டையும் காணல...!!!

நாள் : 25-Jun-17, 11:56 am

மேலே