எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது..!! தூரம் என்பது மிக அருகில்...

                    நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது..!!     


தூரம் என்பது மிக அருகில் தான் தெரிகிறது. நடந்து போகப் போக தூரம் என்பது மிக நீண்டத் தொலைவாகவே தொடர்கிறது. அந்த பாதையின் ஓரமெங்கும் புதர் புதராய் என்னவென்னவோ செடிகள் மரங்கள் பச்சைப் பசுமையாய் காணப்படுகின்றன. அங்கே பறவைகள், ஒணான்கள், பெயர் தெரியாதச் சிறுசிறுப் பூச்சிகள், ஆனந்தமாக விளையாடிக் களிக்கின்றன. அங்கிருந்த நாகமரத்தில் நீலநிறமாக பழங்கள் காய்த்து காணப்படுகின்றன. கிளிகள் பறவைகள் அவற்றை தன் விருப்பம் போல் கொத்திக் கொத்தித் தின்கின்றன. கொத்தும் அலகின் அசைவில் நாகப்பழங்கள் கீழ்நோக்கி விழுகின்றன. தரையில் விழுந்தப் பழங்கள் தரையை நீலநிறமாக்கி, மண்படிந்து, எடுப்பார் யாருக்காகவோ காத்திருக்கின்றன. அங்கே அப்பழங்களை எடுப்பார் யாருமில்லை? மாடுகள் மேய்க்கும் கூட்டம் என்று எவருமில்லை. அந்த வனாந்தரத்தில் எவரிருப்பார்கள். அப்பழங்களை மண்தரையில் ஊர்ந்து செல்லும் உயிரினங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் சுவைத்துப் பார்க்கின்றன. அந்தப் பழம் எத்தனை மருத்துக் குணம் கொண்டதென்று சித்தர் கூறிச் சென்றிருக்கிறார்கள். அதனைக் காயகல்பம் என்றல்லவா புகழ்ந்துரைத்துள்ளார்கள். அப்பழத்தை தின்ன யாருக்குத் தான் ஆசை வராது. எனக்கு நாகப்பழத்தின் மீதான ஆசை பற்று அபரிமிதமானது. அந்த அற்புதமான நாகப்பழத்தைத் தான் விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு மக்கள் தேடித்தேடி வாங்கி அந்தத் தும்பிக்கையனுக்கு படைத்து அருள் வேண்டுகிறார்கள். அந்த ஏகாந்தமான இடம் போய் நீலம்பாரித்தப் பழத்தைத்  தேடி எடுத்து வந்து சுவைப்பதற்கு எனக்கு கொள்ளை ஆசையிருக்கிறது. ஆனால், யார் துணையாக வந்து உதவி புரிவார்கள். இருந்தாலும், அப்பழம் எனக்கு அவசியம் தேவையென்று படுகிறது. கொஞ்சமேனும் கிடைக்காமலா போகும். கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதோ, அந்தக் கடைத்தெருவின் ஒரு மூலையில் கூடையில் வைத்து விற்றுக் கொண்டிருக்கிறாள் வயதான மூதாட்டி. அவளிடம் விலைக் கேட்டேன். கால்கிலோ ரூபாய் 25/- என்றாள். பேரம் பேசும் புத்தி என்னையும் விட்டுப் போகவில்லை. குறைத்துக் கேட்டேன். கொடுக்க மறுத்து விட்டாள். பிறகு அரைகிலோ கேட்டு வாங்கினேன். வீட்டிற்கு வந்து மனைவியிடம் கொடுத்தேன். “ அட, நாகப்பழமா ” என்றாள். அந்நாகப்பழத்தைப் பார்த்த அவளுக்கு என்னை விட பெரு மகிழ்ச்சி. பூரிப்பு. அதனை இரண்டு நாள்கள் வைத்திருந்து சாப்பிட்டச் சந்தோஷம் இருக்கிறதே, அதை சொல்லி மாளாது. அத்தனை ஆர்வமாய் சுவைத்து சாப்பிட்டேன். ஆகா, இந்த ஆண்டு நாகப்பழம் மனத் திருப்தியாக சாப்பிட்டோம் என்ற ஆனந்தம் கிடைத்தது.   நாகப்பழம் என் நாக்குக்கு மட்டும் ருசியேற்றவில்லை. என் உடலின் நரம்புகள் வழியாக அதன் சத்துக்கள் எல்லாம் உள்ளிறங்கி இரத்தத்தில் கலந்து விட்டது. அப்பொழுது கண்ணாடியில் என் நாக்கைப் பார்த்தேன். என் நாக்கு நீலம் பாய்ந்து நீலகண்டமாகத் தெரிந்தது.   
 ந.க. துறைவன்.                                        

பதிவு : துறைவன்
நாள் : 22-Aug-17, 9:43 am

மேலே