எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குரங்கின் செயல் நல்வழிகாட்டும்..! பக்தியுடன் பார்த்தால் குரங்கல்ல வானரவீரன்.....

குரங்கின் செயல் நல்வழிகாட்டும்..!

பக்தியுடன் பார்த்தால் குரங்கல்ல வானரவீரன்..
..........பகவானிடம் பணிசெய்யும் பக்திச் சேவகனாம்.!
சக்தி வேண்டினதுவே சஞ்சீவி ஆஞ்சனேயன்..
..........சரணடையின் சுமையிலாது புலனடக்க எளிது.!
யுக்திசெயும் இயல்பினிலிது தந்திர மந்தியாம்..
..........வாலில்வைத்த தீயால் இலங்கையை அழித்தது.!
முக்திதரும் காகுத்தனைக் காட்டும் மாருதியாய்..
..........முன்வினை பின்வினை அகல வழிகாட்டுமாம்.!


குடும்பம் பிரிவினை பொறாமை ஏதுமில்லை..
..........கூட்டுக் குடும்பமாய் வாழுமிதன் இயல்பாகும்.!
எடுத்துச் சொல்லு மளவுக்கு இராமகாதையில்..
..........இடம் பிடித்தபெருங் குடும்பப் பேரினமாகும்.!
இடுப்பில் இறுகப்பற்றித் தொங்குமதன் குட்டி..
..........இடுக்குவழி வீழாததைக் “குரங்குப்பிடியென்பர்”.!
கடுவணிண் சாதனையாம்!.சீதாப் பிராட்டியைக்..
..........காணும்வரை உண்ணா நோன்பிருந்தது வரலாறு.!


“குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்” எனும்..
..........கூற்றை உணர்த்தும் செயல்கள் பலவுண்டாம்.!
மரத்துக்கு மரம்தாவும் குரங்கின் செயல்களில்..
..........மானுடம் கற்கவேண்டும் “வாழ்வியல் பாடம்”.!
அரக்கச் செயல்கள் செய்யும் மனிதர்களையே..
..........குரங்குச் சேட்டையொடு ஒப்பிட்டுப் பேசுவர்.!
இரண்டு மனமுடன் குழப்பும் இம்மாந்தரைக்..
 ..........குரங்குமனம் கொண்டவர்கள் என்றே கூறுவர்.!


இன்றொரு பேச்சு நாளையது மாறிப்போச்சு..
..........என்றொரு நிலையில் “மனமொரு குரங்காம்”.!
இன்றிருக்கும் அரசியலே இதற்கு உதாரணம்..
..........இவர்கள்செயும் செயலே “குரங்குகை பூமாலை”.!
தின்று ஏப்பம்விட்ட மக்கள்வரிப் பணமெலாம்..
..........திரைக்குள் மறைக்க “இஞ்சிதின்ன குரங்காவார்”.!
மென்று விழுங்கியது போதா தென்கிறபோதில்..
..........வெகுண்டெழுவார் “கள்ளுண்ட குரங்கு போல”.!         
====================================================

வல்லமை படக்கவிதைப் போட்டியில்  இந்த வாரம் சிறந்த கவிஞரென பாராட்டுப்பெற்ற கவிதை

போட்டியின் நடுவர் திருமதி மேகலா ராமமூர்த்தியின் பாராட்டு::

  ”இடுப்பில் இறுகப்பற்றித் தொங்குமதன் குட்டி..
      இடுக்குவழி வீழாததைக் “குரங்குப்பிடியென்பர்!” ஆம், குரங்குக்குட்டி தன் தாய்க்குரங்கைக் ’குரங்குப்பிடி’யாய் இறுகப் பற்றிக்கொண்டிருக்கும் இயல்புடையது. இதனை ’மர்க்கட (குரங்கு) நியாயம்’ என்பார் வைணவ வடகலை மரபை வளர்த்த வேதாந்த தேசிகர். இதன் பொருளாவது… உயிர்கள் தாமே வலியச்சென்று இறைவனை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதாகும்.மாந்த குலத்தின் முன்னோராக அடையாளப்படுத்தப்படும் குரங்குகளின் செயல்களில் வேடிக்கையும் உண்டு; விபரீதமும் உண்டு. குரங்கு கையில் பூமாலை கிடைத்துவிட்டால் போதும்…அதனைப் பிய்த்தெறிந்த பின்பே ஓயும்; கள்ளைப் பருகிவிட்டு அதுபோடும் ’உண்டாட்டு’ ஏனையோர்க்குத் தருவதோ பெருந் திண்டாட்டம்!நாட்டில் அதிகாரத்திலிருக்கும் பலரின் செயல்கள் கள்ளுண்ட குரங்கின் செயல்களாகவே காட்சியளிக்கின்றன என்று நடப்பியலைத் தன் பாட்டில் நயமாய்ச் சொல்லியிருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.20 -11 - 17 

நாள் : 24-Nov-17, 10:41 pm

மேலே