எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் - 42 ------------------------------------------ பொதுவாக சிறியவர்களுக்கு...

  அனுபவத்தின் குரல் - 42
------------------------------------------


பொதுவாக சிறியவர்களுக்கு பெரியவர்கள் அல்லது மூத்தவர்கள் அறிவுரையும் ஆலோசனையும் கூறுவது தொன்றுதொட்டு வரும் வழக்கம். எனக்கும் இளமைக் காலத்தில் பலர் இது போன்று வழங்கி உள்ளனர். ஒருசிலர் மிகவும் நெருக்கமானவர்கள் மிகவும் உரிமையோடு பாசத்துடன் பொறுப்பு உணர்வுடன் பலமுறை கூறியுள்ளனர். நான் அவற்றை எல்லாம் முழுமையாக நடைமுறையில் கடைபிடித்தவன் அல்ல என்பதை ஒப்புக்க்கொள்கிறேன் . அது நான் செய்த தவறு என்பதை இன்றும் சில நேரங்களில் நினைத்து வருந்துவதும் உண்டு. ஆனால் யார் எனக்கு அறிவுரை கூறினாலும் கேட்டுக் கொள்வேன். தவறாக எடுத்துக் கொள்வதில்லை. இதை நான் கூறுவதற்கு காரணம் இந்தக் காலத்தில் இளைய தலைமுறையினர் அவ்வாறு நாம் ஆலோசனை கூறினால் பொறுமையுடன் கேட்காமல் இருப்பது மட்டுமல்ல, கோபம் கொள்கிறார்கள். காலத்தின் மாற்றத்தில் இதுவும் ஒன்று.

அந்தக் காலத்தில் பெரியவர் ஒருவர் அடிக்கடி அழைத்து பேசுவார். அவர் முக்கியமாக சொல்வது எந்த நிலையிலும் பணத்தை சேமிக்கும் பழக்கம் வேண்டும். எந்தவித சூழ்நிலையிலும் மற்றவர்களிடம் சென்று கடன் கேட்கக்கூடாது. உன் சேமிப்பு என்றும் உனக்கு கைகொடுக்கும்.அடுத்தது என்றும் யாருக்கும் விரோதியாக இருக்கக்கூடாது. நண்பர்கள் எண்ணிக்கை கூடாமல் இருந்தாலும் பரவாயில்லை. விரோதியாக உன்னை யாரும் நினைக்கக் கூடாது. இதில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார். 

முதலாவது கூறியதை இன்று வரை நான் கடைபிடிக்க முடியவில்லை என்பது நூறு சதவிகிதம் உண்மை. பலவித காரணங்கள் உண்டு . மனநிலை சூழ்நிலையை பொறுத்தே அந்நிலை அமைந்தது .

இரண்டாவதாக அவர் கூறியதும் , என் வாழ்வில் எந்த நிலையில் நான் இருக்கிறேன் என்று நிச்சயமாக கூற முடியவில்லை .நண்பர்கள் யார் விரோதிகள் யார் என்றும் என்னால் இதுவரை அடையாளம் காண இயலவில்லை என்பது யதார்த்த உண்மை . எனது நடைமுறை வாழ்வில் நடந்து முடிந்த அனுபவங்கள் அதுபோன்று . கடந்து வந்த பாதை அதுமாதிரி .

இந்த பதிவின் முக்கியத்தை , சாராம்சத்தை இன்றைய இளைய தலைமுறையினர் புரிந்து அதற்கேற்ப நடந்திட வேண்டும் இனியாவது என்பது எனது வேண்டுகோள் .


பழனி குமார்

நாள் : 5-Dec-17, 9:16 pm

மேலே