எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் - 46 ------------------------------------------ சமீப காலமாக...

  அனுபவத்தின் குரல் - 46
------------------------------------------


சமீப காலமாக நாம் ஊடகங்களில் நாளிதழ்களில் பார்க்கிற ஒரு செய்தி ஆணவக் கொலை, சாதி மத பிரிவினை பேச்சுகள் மற்றும் வன்முறை சம்பவங்கள். மத நம்பிக்கையும் வழிபாடு முறைகள் என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை, விருப்பம் மற்றும் கொள்கை. அதில் நான் தலையிடுவதில்லை. விரும்பவும் இல்லை.

ஆனால் அதே நேரத்தில் ஒருவர் தனது மதவெறியை தூண்டும் விதத்தில் மற்ற மதத்தினரை இழிவாக பேசுதல் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் போது அது என்னைப் போன்ற நடுநிலையான மனம் கொண்டவர்கள் சாதி மதம் ஒழிய வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் உள்ளத்தில் தீராத வலியை உண்டாக்குகிறது.சமூக நீதியை காத்திட வாழ்ந்த தலைவர்கள் அதற்காக கடுமையாக போராடியவர்களை மதிக்கும் நம் நாட்டில் இன்றும் அந்த தீய எண்ணம் மதவெறி உணர்வு அவ்வப்போது தலைவிரித்தாடுகிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. அதனால் ஏற்படும் விளைவுகள் பாதிப்புகள் வலிகள் தாங்க முடியவில்லை. பொறுத்து கொள்ளவும் இயலவில்லை.

இந்த மோதல்களால் விளையும் ஆபத்துகள், இழப்புகள் மற்றும் விரோத மனப்பான்மை சமுதாயத்தை எந்த அளவுக்கு சீரழிக்கிறது என்று யாரும் சிந்திப்பதில்லை. சீர்திருத்த முன்வருபவர்களை முட்டாள்தனம் என்றும் பகுத்தறிவுடன் சிந்தியுங்கள் என்றால் நாத்திகன் என்றும் கேலியாக பேசுவது இன்று வாடிக்கையாகி விட்டது.

சாதிமத வெறி உள்ளவர்கள் பலருக்கும் உண்மையில் இனப்பற்றும் மொழிப்பற்றும் அற்றுப் போகிறது என்பதை உணர்ந்திட வேண்டும்.சாதிமத பேதமின்றி அனைத்து மக்களிடமும் நேசமும் பாசமும் வளர்ந்து அனைவரும் நாம் மொழியால் தமிழர் நாட்டால் இந்தியர் என்ற எண்ணம் வரவேண்டும் என்று விரும்புகிறேன்.


பழனி குமார்  

நாள் : 10-Dec-17, 9:04 pm

மேலே