எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் - 47 ----------------------------------- இன்றைய காலகட்டத்தில்...

  அனுபவத்தின் குரல் - 47
-----------------------------------


இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞானத்தின் வளர்ச்சி மிகவும் வேகமாக இருக்கிறது. அதில் கருத்து வேறுபாடு இல்லை என்பது மட்டுமல்லாமல் அவசியமான ஒன்று தான். கற்காலத்தை வரலாற்றில் படிக்கும் போது தற்போதைய நிலை மனித வாழ்க்கையில் ஒரு மாபெரும் முன்னேற்றத்தை உணர முடிகிறது. ஒருவிதத்தில் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆனால் அதே நேரத்தில் நாம் நமது சிறப்பு மிக்க பண்பாட்டு முறைகளில் இருந்து இறங்கி பாதை மாறி செல்வதையும் கண் கூடாக காண்கிறோம். நவநாகரீகம் என்று கூறிக்கொண்டு அநாகரீகமாக நடந்து கொள்வது ஆடைகள் முதல் வாழ்வியல் நடைமுறை வரை அனைத்திலும் மாறுபடுவது எதிர்மறையான வழியில் பயணிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

நமது முன்னோர்கள் எதையும் சிந்தித்து தான் செய்திருப்பார்கள் என்று பேசி வருகிறோம். ஆனால் அவர்கள் காட்டிய வழியில் செல்லாமலும் காலத்திற்கேற்ற மாற்றம் தேவை என்று நம்மை நாமே சமாதானம் செய்து கொண்டு நமது கலாச்சாரம் மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்தி மாற்றி அமைத்துக் கொள்வது தமிழரின் உண்மையான பண்பாடு கலாச்சாரம் பழக்க வழக்கங்கள் சிதைந்து போகும் நிலையில் இருப்பதும் மிகவும் வருத்தமாக இருக்கிறது.

வருங்கால சந்ததியினர் நாம் தமிழர் என்பதையே மறந்து போகும் நிலை உருவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் தாய் மொழி பற்றும் மறைய நேரிடும் என்பதை சிந்திக்க வேண்டும்.

இதனால் எதிர்காலத்தில் பல தலைமுறை கடந்து நமது சந்ததியினர் " தமிழர்கள் " என்று ஒரு இனம் வாழ்ந்தார்கள் அவர்களின் மொழி " தமிழ் " என்றும் வரலாறாக படித்து அறிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

அதுபோன்ற ஒரு கட்டம் வராமல் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.


பழனி குமார்  

நாள் : 12-Dec-17, 9:16 pm

மேலே