எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

​அனுபவத்தின் குரல் - 63 ---------------------------------- நம்மில் பலருக்கும்...


​அனுபவத்தின் குரல் - 63 

 ----------------------------------


நம்மில் பலருக்கும் இன்னும் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருப்பது இல்லை நான் உட்பட .விஞ்ஞான வளர்ச்சியும் ஊடகங்களின் பெருக்கமும் சமூக வலைத்தளங்களின் எண்ணிக்கை கூடுதலும் ஒருபக்கம் இருப்பினும் , புத்தகம் படிப்பது என்பது ஒரு கலை . இந்த காலத்தில் தினசரி செய்திகளை அறிந்து கொள்ள நாளிதழ்களும் , அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகளை  தொலைக்காட்சியும் எப்படி உதவுகிறதோ , அந்த அளவுக்கு பொது அறிவு , வரலாறு , வாழ்வியல் மற்றும் பல துறைகளின் நுட்பங்கள் , விளக்கங்கள் போன்றவற்றை அறிந்திட புத்தகங்கள் படிப்பதால் நாம் அறிந்திட முடியும் . 

அதுமட்டுமன்றி நேரத்தை கடந்திட , மன இறுக்கம் தளர்ந்திட , நெஞ்சம் அமைதி பெறவும் அவரவர் விருப்பத்திற்கேற்ப புத்தகங்கள் படிப்பதால் நிறைவேறும் என்பதும் மறுக்க முடியாத உண்மை . 

தலைமுறைகள் மாற மாற , முந்தைய தலைமுறைகளைப் பற்றியும் , சரித்திர நிகழ்வுகளைப் பற்றியும் , மறைந்த பல்வேறு துறையைச்சார்ந்த மனிதர்களை பற்றியும் , வரலாற்று நாயகர்களின் வாழ்க்கையைப் பற்றியும் தெரிந்துகொள்ள உதவுவது நூல்களே . 

என்னதான் இந்த காலத்தில் கணினி மூலம் இணையங்கள் துணையுடன் பற்பல வலைத்தளங்கள் சென்று அறிய வாய்ப்புகள் கிட்டினாலும் , வசதிகள் இருந்தாலும் புத்தகம் ஒன்றின் மூலம் படித்து அறிந்து கொள்வது சிறந்தது என்பது உலகளவில் ஏற்றுக் கொண்ட ஒரு உண்மை ஆகும் . அதனால்தான் அந்த காலத்தில் இருந்தே " நூலகம் " என்று ஒன்று ஒவ்வொரு ஊருக்கும் இருத்தல் அவசியம் என்பதை பெரியோர்கள் பலரும் வலியுறுத்தி கூறினர் . 


அதனால்தான் எழுத்துலக படைப்பாளிகள் அனைவரும் தாம் எழுதிய கதைகள் , கவிதைகள் , படித்து அறிந்த ஆராய்ச்சி கட்டுரைகள் , வாழ்க்கைத் தத்துவங்கள், பல தலைவர்களின் உரையின் தொகுப்புகள் என பலவகையில் புத்தகங்கள் உருவாக்கி வைத்துள்ளனர் . அது இன்றும் தொடர்வதை நாம் நன்கு அறிவோம் . இளமைக் காலம் முதலே புத்தகம் படிக்கும் பழக்கம் வர வேண்டும் . ஆனால் இந்த காலத்தில் இளைய தலைமுறையினர் பலரும் நாளும் செய்தித்தாள்களை படிக்கும் வழக்கமே இல்லாமல் இருப்பது காலத்தின் கொடுமை . இந்நிலை மாற வேண்டும் . அன்றாட நிகழ்வுகளே சிலர் தெரியாமல் இருப்பதை கண்கூடாக அறிவோம். நாட்டு நடப்புகளை ஒவ்வொருவரும் அறிந்திட வேண்டும் . 

இதை முக்கியமாக வளரும் இளைய சமுதாயம் உணர்ந்து கருத்தில் கொள்ள வேண்டும் . 


   
  பழனி குமார்                 

நாள் : 5-Jan-18, 4:00 pm

மேலே