எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் - 88 ------------------------------------- நம் தமிழ்...



அனுபவத்தின் குரல் - 88

-------------------------------------


நம் தமிழ் மொழியில் சில சொற்களுக்கு பல அர்த்தங்கள் உண்டு . அந்த சிறப்பு நம் செம்மொழியைத் தவிர வேறெந்த மொழிக்கும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை . இன்னும் கூற வேண்டுமாயின் , ஓரெழுத்து சொல்லும் உண்டு . இலக்கிய இலக்கணமும் இந்த அளவு தெள்ளத் தெளிவாக எந்த மொழிக்கும் இருக்காது என்றே கூறலாம் . மிகவும் தொன்மை வாய்ந்ததும் , உலகளவில் பெரும்புகழ்   பெற்றதும்  நம் தாய் மொழியாம் செம்மொழி . இதனை நாம் பலரும் அறிந்த ஒன்றாக இருப்பினும் நான் மீண்டும் நினைவுபடுத்துவதன் நோக்கம் என்னவெனில் , தற்போது பலரும் தமிழில் பேசுவதையே ஒரு அவமானமாகவும் , நவீன நாகரீகத்திற்கு எதிராகவும் கருதுகின்றனர் . தங்களின் பிள்ளைகளை ஆங்கில வழி கல்வியில் சேர்ப்பதையும் அடுத்த இரண்டாவது மொழிப்படமாக அயல்நாட்டு மொழியையும் அல்லது இந்தியையும் தேர்வு செய்கிறார்கள் . இந்தி கற்பதையோ அல்லது அயல்நாட்டு மொழியை கற்பதோ எந்த தவறும் இல்லை . அது மிகவும் வரவேற்கத்தக்கது , பயனும் இருக்க்கலாம் .ஆனால் அதைமட்டுமே பிள்ளைகளின் மீது திணிக்கிறார்கள் . மேலும் தாய்மொழியை பற்றி அறிய விடாமல் ஆரம்ப கட்டத்திலேயே தடுத்துவிடுகின்றனர் . அதுதான் தவறு என்று அழுத்தமாக பதிவிட விரும்புகிறேன் . 

வீட்டில் பேசும்போது கூட பிள்ளைகளிடம் சிலர் ஆங்கிலத்தில் மட்டும் உரையாட வேண்டும் என நிர்பந்திக்கிறார்கள் . அது மாபெரும் குற்றமாக கருதுகிறேன் . மற்ற மொழிகளை அறிந்து கொள்வதோ , அல்லது தனியாக கற்றுக் கொள்வதிலோ எந்த தவறும் இல்லை என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறேன் .ஏன் இந்த அந்நிய மொழி மீது மோகம் ? நான் இதுபோன்ற ஒரு கருத்தை பதிவிட்டிருந்தாலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டிய கட்டாயம் எழுவதால் அதனை நினைவுபடுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் . நமது நாடு பல மொழிகள் அடங்கிய ஒரு தீபகற்பமாக விளங்குவதும் , ஆகவே மொழிவாரி மாநிலங்கள் பரவி கிடப்பதும் அறிந்த ஒன்று , தவிர்க்க இயலாத ஒன்று . மறுக்கவில்லை .


உண்மையை சொல்ல வேண்டுமானால் சிலர் வெளிநாடுகளில் தங்கி இருப்பவர்களும் அல்லது அங்கு குறியேறிவிட்டவர்களும் நமது மொழியை மறந்துவிடும் நிலையே உள்ளது . அடுத்த தலைமுறையினர் தமிழ் மொழியை பற்றி ஒன்றும் தெரியாத நிலையும் இருக்கிறது . சூழ்நிலைக்கு ஏற்ப  , வாழ்கின்ற ஊருக்கேற்ப அல்லது பணிபுரிகின்ற இடத்திற்கு ஏற்ப அந்தந்த மொழிகளில் பேசுவதோ , கற்றுக்கொள்வது என்பது தவறில்லை . அனைவரையும் நான் வேண்டிக்கொள்வது அவரவர் தாய்மொழி என்பது தாய்க்கு சமம் . தாய்மொழிப்பற்றும் மிகவும் அவசியம் . அதை நவீனம் என்ற பேரில் மாற்றுவது மறப்பது அல்லது ஒதுக்குவது என்பதை தவிர்த்திடுங்கள் . தமது பிள்ளைகளை எங்கிருந்தாலும் தமிழ் மொழியில் பேச வையுங்கள் . மொழியின் சிறப்பை அறிந்திட வைப்பது தேவையான ஒன்று . வாழ்க தமிழ் . 

     
  பழனி குமார்               



           

நாள் : 21-Feb-18, 9:33 am

மேலே