எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் - 97 -----------------------------------​---- என்னிடம் நண்பர்...

  அனுபவத்தின் குரல் - 97
-----------------------------------​----


என்னிடம் நண்பர் ஒருவர் எப்போது பேசினாலும் ஏதாவது ஒரு குறையை கூறி மிகவும் வருத்தப்படுவார் .நானும் முடிந்தவரை அவரை சமாதானம் செய்து மனதை மாற்றிடுவேன் ...அந்த ஒரு நொடியாவது . ஆனாலும் அவரின் குறையோ கவலையோ நியாமாகத்தான் இருக்கும் . இல்லை என்று கூறவில்லை , அப்படி இருந்தும் அதை அவரிடம் வெளிப்படுத்தாமல் , குறையை மறக்க செய்திட முயற்சிப்பேன் . நம்மால் முடிந்தது அது மட்டுமே . அவருக்கு உதவுகின்ற நிலையிலோ அல்லது முற்றிலுமாக நீக்கிடவோ என்னால் இயலாது என்பது வேறு விஷயம் . நம்முடைய பேச்சும் ஆறுதல் அளிக்கும் வகையில் சமாதானம் கூறுவதும் ஏற்புடையதாக இருப்பின் அதுவே அவரின் மனநோய்க்கு சிறந்த மருந்து அந்த நேரத்தில் என்று நினைப்பவன் நான் . அது தனிப்பட்ட பிரச்சினை அல்லது குடும்ப பிரச்சினை அல்லது பொதுவான குறைகளாக இருந்தாலும் சரி , நாம் எடுத்து சொல்லும் விதத்தால் , வார்த்தைகளால் , அறிவுரை அல்லது ஆலோசனைகளால் அடுத்தவரின் மனம் தெளிவு பெற்றால் அமைதி அடைந்தால் அதுவே நமக்கு வெற்றிதான் . நமக்கு மன திருப்தியை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை .


குறை இல்லாத மனிதன் யாரும் இல்லை இந்த அகிலத்தில் நான் அறிந்தவரை . எதற்கும் ஒரு தீர்வு உண்டு ...முடிவு உண்டு ..எந்த ஒரு வினாவிற்கும் விடையும் உண்டு . அது நடைமுறை சாத்தியம் . எவருக்கும் குறைகள் வருவதும் இடர்கள் நேர்வதும் , இயற்கை நிகழ்வுகளே . அவை ஒரு நிலையான நீட்சியாக இருக்க முடியாது . சிலவற்றிற்கு காலமே மருந்தாகி குறைகளை நிறைகளாக மாற்றிட முடியும் .எதையும் ஆழ்மனதின் அடித்தளத்தில் புதைத்து வைத்தால் அவை குறைகளின் புகலிடமாகி சிறிது சிறிதாக சேர்ந்து கவலைகளின் வசிப்பிடமாகி , மனநோயால் குன்றி உடல் நோயாக மாறிடும் சூழல் நிச்சயம் உருவாகும் . குறைகள் தீர்ந்திட , மனதில் நிறையும் கவலைகள் நீங்கிட வாய்ப்புகள் உண்டு , வடிகால் உண்டு . 


குறைகள் தேங்கினால் உள்ளம் சுமையாகும் . உள்ளத்தில் சுமை மிகுந்தால் உடல் நலிவுறும் .ஆனந்தம் , மகிழ்ச்சி , இன்பம் நிறைந்த இதயம் உள்ளவர்க்கு ஆயுள் கூடும் ...தேகம் வலிமையாக இருக்கும் . நெஞ்சம் லேசாக தெரியும் . சிந்தை குளிர்ந்து சிகரமும் சிறிய மண்மேடாக தெரியும் . எதையும் சாதிக்க முடியும் , எளிதில் கடந்திட இயலும் , எதிர்நீச்சல் போடும் வல்லமை , ஆற்றல் பிறக்கும் , தெளிவான ஞானம் ஊற்றெடுக்கும் , பயணிக்க கூடிய சரியான பாதை தெரியும் .​எந்தவித குறையையும் தடையாக நினைக்க கூடாது . நம் மனதிலும் தளர்ச்சி தோன்றக் கூடாது . தயக்கம் எந்நிலையிலும் வரக்கூடாது . அகத்தில் அச்சம் முழுமையாக நீங்கிட வேண்டும் . ஆற்றலும் அறிவும் பெருகிட வேண்டும் எனில் குறைகளை ஒரு பொருட்டாக நினைக்கக் கூடாது . ​முற்றிலும் நிறைகள் நிரம்பி வழியும் உயிர்கள் உலகத்தில் அறவே இல்லை . எனவே குறைப்பிரசவமாக பிறக்கும் எந்த ஒரு இடைக்கால பிரச்சினைகளை விண்ணளவு குறையாக நினைத்து வருந்துவதும் , சோர்ந்து போவதும் , நிலைதடுமாறுவதும் , நடுக்கடலில் சுனாமியில் சிக்கித் தவிக்கும் ஓடத்தைப் போல அல்லாமல் நிமிர்ந்த நடையுடன் , நேரிய வழியில் , சரியான முறையில் பகுத்தறிந்த பாதையில் பயணித்தால் வாழ்க்கை என்றும் சுகம் தரும் சோலைவனம் .

இது எனது அனுபவ பாடத்தின் ஒருபக்கம் ..


பழனி குமார்  

நாள் : 18-Mar-18, 11:28 pm

மேலே