எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் 100 ********************************* ஒரு மனிதன் தன்...

  அனுபவத்தின் குரல் 100
*********************************


ஒரு மனிதன் தன் வாழ்வில் குடும்பத்திற்காக பொன்னையும் பொருளையும் சேமித்து வைக்கவில்லை என்றாலும் , பெயரையும் புகழையும் சம்பாதித்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள் . அப்படி கூறுவதன் உட்பொருள் என்னவெனில் ஒவ்வொருவரும் உலகில் உள்ளவரை தன்மானத்தில் ஒருதுளியும் இழக்காமல் , சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் , நேர்மையை இறுதிவரை கடைப்பிடித்து , முடிந்தவரை மற்றவர்க்கு உதவிகள் செய்து , தீய எண்ணங்கள் அறவே இல்லாமல் , அடுத்தவர்க்கு கேடு விளைவிக்காமல் , நான்கு பேர் நம்மை மதிக்கின்ற அளவிற்கு , நன்றி உணர்வுடன், பகுத்தறிவுடன் ஆய்ந்தறிந்து , வகுத்தறிந்து செயல்பட நல்லதொரு பாதையில் பயணித்தால் அனைவரும் போற்றுவர் . அவ்வாறு ஒருவர் வாழ்வாரேயானால் அவர் மறைந்த பிறகும் அவரைப் பற்றி ஊரே பேசும் நல்லவர் வல்லவர் என்று . அவரின் இறப்பை பேரிழப்பாக கருதுவதோடு மட்டுமின்றி கண்ணீர் சிந்தும் .மேலும் அவர் இன்னும் சில காலம் வாழ்ந்திருக்கலாம் என்று ஒன்றுகூடி வருத்தம் மிகுந்து பேசுவர் . அதுதான் அவர் சம்பாதித்து வைத்துவிட்டு செல்கின்ற பெரும் சொத்தாகும் . ஒருவர் எவ்வளவுதான் பணம் சேர்த்தாலும் , மாட மாளிகைகள் வாங்கி குவித்து வைத்திருந்தாலும் , அந்தஸ்தில் உயர்ந்து இருந்தாலும் , மிக உயர்ந்த பதவியில் இருந்திருந்தாலும் எதுவும் அவருடன் இறுதியில் உடன் செல்வதுமில்லை ...பயன்படுவதுமில்லை . இது அனைவரும் அறிந்த ஒன்றுதான் .


வாழ்க்கை எனும் நாடகமேடையில் நாமெல்லாம் வெவ்வேறு கதாபாத்திரங்கள் ...கதையும் களமும் மட்டுமே மாறிடும் ஒவ்வொருவருக்கும். அடுத்தவர்க்கு உபத்திரவம் இல்லாமல் , மற்றவர் நம்மை கெட்டவர் என்று கூறாத அளவிற்கு வாழ வேண்டும் . பிறந்திடும் எவருக்கும் இறப்பு நிச்சயம் உண்டு . அதை மறக்கும் மனிதன்தான் உள்ளவரை நிலைபுரியாமல் ஆடுகின்றான் ...முடிவின் முடிவை எவரும் அறியார் ...இதை புரிந்தும் புரியாதது போல நடிப்பதுதான் போலியான வாழ்க்கை .இன்று இருக்கும் நிலை யாருக்கும் நிரந்தரமல்ல ...நாளை என்னவாக மாறும் என்று தெரியாமல் உள்ளனர் . குறுகிய குறிக்கோள்களில் திருப்தி காண்பவரும் உண்டு ...எதிலும் அளவோடு இருந்து போதுமென்ற மனமுடன் வாழ்ந்து வெற்றி அடைபவரும் உண்டு ...ஒரு சிலர் எவ்வளவு தான் இருந்தாலும் எல்லையில்லா ஆசையின் காரணமாக தவறான பாதையில் சென்று தோல்வி கண்டு வீழ்பவர்களும் உண்டு . தேவையையும் விருப்பத்தையும் குறைத்து கொள்பவன் நிச்சயம் வாழ்வில் நிம்மதியும் வெற்றியும் பெறுவான் .


சுகபோக வாழ்வே நிலையாக தேவை என நினைப்பது சுயநலத்தின் ஆரம்பம் . அகமகிழ்ச்சியே போதும் என்று தீர்மானிப்பது அமைதி நிறைந்த வாழ்வின் அடித்தளம் ...இவை இரண்டில் ஒன்றுதான் மனிதன் தீர்மானிக்க வேண்டிய கொள்கை ..பயணிக்க வேண்டிய பாதை . அனுபவங்கள் தான் மனிதனை சீர்படுத்தி , சிந்தையை தெளிவுபடுத்தி , திட்டமிட்ட வாழ்க்கையை செயல்படுத்த வைக்கிறது . நிகழ்வுகள் ஒருவரை சிந்திக்க வைக்கிறது . அனுபவங்களே நமக்கு பாடம் புகட்டுகிறது , எது தேவை என்பதை புரிய வைத்து வேண்டாதவற்றை ஒதுக்கித் தள்ளவும் வைக்கிறது .எஞ்சிய வாழ்க்கையை ஏர் கொண்டு உழுத நிலம் போல பண்படுத்துகிறது . உள்ளவரை வாழ்க்கையில் வளம் பெருகிட உரமாக பயன்படுகிறது .இதை அனைவரும் புரிந்து வாழ்ந்தால் வாழ்க்கை புனிதமே ...குதூகலம் மனதில் நிரம்பி வழியும் ...உற்சாகம் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் ...இன்பமே என்றும் இதயத்தில் பொங்கிடும் .

 இதை எனது அனுபவத்தின் குரலாக பதிவு செய்கிறேன் . அனைவருக்கும் எனது வாழ்த்துகள் .

#பழனி #குமார்  

நாள் : 23-Mar-18, 11:53 pm

மேலே