எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்க்கைப் பாடம் 19 /////////////////////////////////// ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை என்பது...

வாழ்க்கைப் பாடம் 19 
///////////////////////////////////


ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை என்பது அவரவருக்கு அமைவதை பொருத்து தான். அதில் நிச்சயம் சமுதாய பாகுபாடு, அந்தஸ்தில் மாறுபாடு, பாரம்பரியத்தில் வேறுபாடு என பலதரப்பட்ட நிலைகளில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் இருக்கிறது என்பது உலகத்தில் நியதியாகி விட்டது. இது இயற்கையாக உருவாகும் மாற்றங்கள் பூமியில். இதற்கு மாற்றுக் கருத்து இருக்காது என்று நினைக்கிறேன் .இந்த மாற்றங்கள் நிறைந்த சமுதாயத்தில் மனதிற்குள் ஏக்கமும் தாக்கமும், எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும், மனமாச்சரியங்கள் இன்றி மனிதம் வாழ முடியாது என்பது உண்மைதான். இதன் காரணமாக பலருக்கும் உள்ளத்தில் தன்னோடு மற்றவரை, தமது நிலையை மற்றவர்கள் நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் எண்ணம் தலைதூக்கும். இது மனிதனுக்கு உள்ள இயல்பான குணம் என்றாலும் அதுவே சில தவறுகள் நேரிட அடிப்படை காரணமாக அமைந்து விடுகிறது.

பொதுவாக ஒரு நடுத்தர குடும்பத்தில் உள்ளவருக்கு, அவரைவிட உயர்ந்த நிலையில் இருக்கிற அடுத்த வீட்டைப் பற்றியும், வசதிமிக்க சமூகத்தில் உள்ள மற்றவர்களை பற்றியும் தான் அதிக நேரம் சிந்தனை ஓடிக் கொண்டிருக்கும். நமக்கு அதேபோல நிலை அடைய வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் உண்மையில் இது தவறான ஒன்று என்றே கூறுவேன். நானும் சிறு வயதில் இதுபோன்ற சிந்தையைக் கொண்டவன் தான். மறுக்க மறைக்க விரும்பவில்லை.வயதில் முதிர்ச்சி அடையவே அனுபவத்தில் ஆயிரம் காணவே எனக்கும் இது தவறு என்று புரிந்தது. 


நாம் பெற்றுள்ள இந்த வாழ்க்கையில் அது எந்த நிலையில் இருந்தாலும் அதற்கு மேல் உள்ள நிலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக நாம் ஒருபோதும் தவறான வழியில் செல்வதும் முயற்சிப்பதும் நல்லதல்ல. 

அதைவிட நாம் நம்மை விட அனைத்து விதங்களிலும் மிகவும் குறைவான அந்தஸ்தில், வசதியில் உள்ளவர்களைப் பற்றி நினைத்து அவர்களுக்கு நாம் மேலான நிலையில் இருக்கிறோம் என்று மனதில் திருப்தி கொள்வதே மனிதனுக்கு அழகு, நியாயமானது ஆகும்.அதுமட்டுமல்லாமல் நமக்கு கீழே உள்ளவர்களுக்கு உதவிகள் செய்து அவர்கள் நமக்கு இணையாக வருவதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும். அதுதான் மனித நேயமுள்ள மனம் ஆகும்.

இது நான் அறிந்த வாழ்க்கை பாடம் மட்டுமல்ல உங்களுக்கு அளிக்கும் ஆலோசனையும் கூட. இருக்கும் வரை நோயின்றி எந்தவித குறையுமின்றி வாழ்தலே மிகவும் சிறந்த வாழ்க்கை ஆகும்.


பழனி குமார் 
20.12.2018

நாள் : 21-Dec-18, 7:34 am

மேலே