எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

11 தலைப்பு: தமிழறி தமிழனே! முக்கனியின் சாராய் தேன்பாகின்...

  11   தலைப்பு:   தமிழறி தமிழனே!


முக்கனியின் சாராய் 
தேன்பாகின் சுவையாய்
மணம் பொழியும் நல்மலராய் 
மனமகிழும் இசையாய் 
மழலையின் சொல்லாய் 
மலைப்பிறந்த அருவியாய் 
மண்மணக்கும் மழையாய் 
இன்பந்தரும் சோலையாய்
இதயத்தில் குடிகொண்டு  - எத்திக்கும் 
தித்திக்கும் எம்மொழியே
செம்மொழியான தாய் தமிழ் மொழியே
நின் பாதம் வணங்குகின்றேன்

 

செந்தமிழே. . . .
என்நாவில் களிநடனம் புரியும் 
என் கன்னித்தமிழே 
நீ முந்து தமிழ்  - என்னை 
சிறப்புற செய்யும் உந்து தமிழ் 
சுத்த தமிழச்சியின்  சுயம்பால்
குடித்த எவனொருவனும் 
தமிழ் பாலின் சுவையுணர்வான் 
தாய்ப்பாலுக்கு ஓர் சுவை 
தமிழ்ப்பாலுக்கோ முச்சுவை  
தமிழன்பனே நீ 
தமிழின்பால் மூச்சு வை !
 சிறைப்பட்ட நாக்கும் சிலிர்த்தெழுமே 
செந்தமிழை உச்சரிப்பதென்றால் 
தேமதுரமாம் என் தீந்தமிழ் 
தேமதுர தமிழோசை தேசமெங்கும் பரவியது 
குருகத்தரித்த குரலாய் அதுமாறியது
நெறிப்படுத்தும் எம் தமிழ்மொழி 
நீதி வழுவா நிலை மொழி 
ஒலியும் வரியும் ஒருங்கே கொண்டு
ஓங்கி உயர்ந்த ஓங்கார தமிழ் மொழி 

ஆங்கிலேயனையும் அந்நியனையும் 
கற்க தூண்டிய அமுது மொழி எம்மொழி 
மொழிகளுக்கெல்லாம் பிறப்பிடம் 
அதனிருப்பிடம்   எனது வசிப்பிடம் 
தமிழ் தமிழ் என்றுரைத்தால்  - அது 
அமிழ்து அமிழ்து எனொலிக்கும் காண்
அமிழ்து அமிழ்து  என்பாயின் - அது 
தமிழ் தமிழென பிரதிபலிக்கும் காண் 
இதைபோல் ஓர் சிறப்பு 
இல்லை வேறு மொழிக்கு

தாலாட்டு பாடலிலே 
தமிழின் சுவையுணர்த்தேன்
ஆராரோ கேட்க்கையிலே 
அன்னை தமிழின் அழகுணர்ந்தேன்
அகர வரிசை கற்கையிலே - தமிழின் 
ஆதியந்தம் அறிந்தேன் 
நண்பர்களோடு உரையாடுகையில் 
நற்றமிழின் நயம் அறிந்தேன் 
தமிழ் சந்தங்களின் ஊடுகையில்
ஏழுசுரங்களின் இசையுணர்ந்தேன்
உயிரானாய். . .  மெய்யானாய்
இரண்டுமாகி உயிர்மெய்யானாய் 
தமிழே. . . 
முடிவேயில்லாத  உமக்கு
முடிவுரைதான் ஏது ?
நற்றிணை நறுந்தொகை  கலிப்பா
குறுந்தொகை கலித்தொகை ஆசிரியப்பா 
அகத்திணை புறத்திணை வஞ்சிப்பா 
தேவாரம் திருவாசகம்   திருவருட்பா  
எட்டுத்தொகை பத்துப்பாட்டு வெண்பா 
எல்லாம் பயின்று பார் 
நனிசுவை சொட்டும் நண்பா!

தமிழை உரைத்துப்பார் 
உள்ளிருக்கும் நரம்பெல்லாம் நாதமீட்டும்
இயங்கும் இதயம்  இசையால் உரமூட்டும் 
முழங்குகையிலே தமிழோசை திக்கெட்டும்
ஒன்றுசேர் தமிழ் ஆட்சிமொழி 
அரியணை  ஏறட்டும் 
தமிழனின் தரம் வானுயரட்டும் 
வாழ்க தமிழ்!  வளர்க தமிழ்!
வாருங்கள் பருக தமிழ்!

தமிழன்.
மு.ஏழுமலை
      9789913933
இக்கவிதை செம்மொழி மாநாட்டின்போது எழுதியது.


 



 




பதிவு : மு ஏழுமலை
நாள் : 22-Feb-19, 2:32 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே