எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நேற்று மாலை கால் மூட்டு வலி மிகவும் அதிகமாக...

  நேற்று மாலை  கால் மூட்டு வலி மிகவும் அதிகமாக இருந்ததால், நான் ஏற்கனவே அறிந்தவரும் பலமுறை அவரிடம் சிகிச்சைக்காக சென்று வருபவன் என்பதால் ( எலும்பு சிகிச்சை நிபுணர்) , அவரைக் காண சென்றேன். அது ஒரு தனியார் மருத்துவமனை.  டாக்டர்கள் நேரம் கடந்து வருவதும் , அப்படியே வந்தாலும் உடனடியாக சந்திக்க முடியாத நிலை என்பது வழக்கமான ஒன்று. ​நமக்கும் பழகிவிட்டது .​காரணம் நமக்கு முன்னரே ​சிலர் ​காத்திருப்பது மற்றும் டாக்டர் ஏதாவது அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு இருப்பார். நான் சரியாக 4.00 மணிக்கு சென்றும் அவரை 6.30 க்குத் தான் காண முடிந்தது. 


​அவரைக் கண்டதும் நான் உடனடியாக கூறியது, நான் எதற்காக வந்தேன் என்பதே மறந்துவிட்டது சார் , காரணம் அதிக நேரம் காத்திருத்தல் என்றேன் . அவரும் சிரித்துக் கொண்டே நல்லதுதான் , உங்கள் வலியையும் மறந்து இருப்பீர்கள் என்றார். பிறகு பொதுவாக சில விஷயங்களை பேசிவிட்டு எனது பிரச்சினையை கேட்டறிந்தார் . வயதானால் எலும்பு தேய்வதும் , அதிக மருந்துகளை எடுத்துக் கொள்வதாலும் , சரியான உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும் காரணம் என்றார். பிறகு அவர் இரண்டு மாத்திரைகளை எழுதி கொடுத்து ​நிரந்தரமாக இதை சாப்பிடுங்கள் என்றார் . பின்பு ஒரு வலி நிவாரண ஜெல் (Gel )ம் எழுதி கொடுத்தார் . 


அங்கே அமர்ந்திருந்த அந்த இரண்டு மணி நேரத்தில் நான் கண்ட காட்சிகள் மனதை வலிக்க செய்தது . பலர் வருகின்றனர் . பலவித நோய்கள் காரணமாக . ஒரு சிலரைத் தவிர ஏனைய அனைவரும் என்னைப் போன்ற நடுத்தர வர்க்கமும் ,அதைவிட கீழ் நிலையில் உள்ளவர்களும்தான் . அனைவரின் முகத்திலும் ஒருவித கலக்கம் தெரிந்தது. காரணம் நோயின் தாக்கம் மட்டுமல்ல , என்னென்ன சோதனைகள் செய்ய சொல்வார்களோ , எவ்வளவு செலவு ஆகும் என்பதும் ஒரு முக்கிய காரணம் ஆகும் . இதை ஒரு சிலர் பேசிக்கொண்டதை நேரிடையாக கண்டும் கேட்டதும் தான் . அவரவர் நிலையை கண்டு வருந்தியதும் , அதனால் என் நெஞ்சம் அழுததும் எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை . 


அரசாங்க மருத்துவ மனைகளில் வரிசையில் நின்று காத்திருக்கும் வறுமையில் உழலும் உள்ளங்களின் நிலையையும் எண்ணிப் பார்த்தேன் . அங்கும் வசதியும் வாய்ப்பும் வருமானமும் சிபாரிசும் இருந்தால்தானே முன்னுரிமை இன்றும் . 

இந்நிலை என்றுதான் மாறுமோ ? 

பழனி குமார் 24.08.2019  

நாள் : 24-Aug-19, 3:40 pm

மேலே