எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை... தனிப்பட்ட விருப்பு வெறுப்பு,...

என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை...



தனிப்பட்ட விருப்பு வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி, குரோத மனப்பான்மை , சாதி சாயம், மத வெறி, பழிவாங்கும் நோக்கம், பகையுணர்வு நிறைந்த நெஞ்சம், தெளிவில்லாத சிந்தனை இவை அனைத்தும் கலந்த அரசியலில் சிக்கித்தவிக்கும் சமுதாயத்துடனே நமது வாழ்க்கைப் பயணம் இதைப்பற்றி நினைத்து கொண்டு பயணிக்கும் என்னைப் போன்ற உள்ளங்களின் நிலையும் துடுப்பையும் இழந்து, நீந்தவும் தெரியாமல் நடுக்கடலில் கவிழ்ந்த படகுடன் உயிருக்குப் போராடுபவர்களின் நிலையும் ஒன்று தான்.வசதி உள்ளவனுக்கும், பதவியில் இருப்பவர்க்கும் வளைந்து கொடுக்கும் சட்டம், சாதாரண குடிமகனுக்கு உதவாமல் போவதும் இந்த நாட்டில் தான்.


ஒருகாலத்தில் மந்திர சொற்களாக இருந்த நம்பிக்கை, நாணயம், உழைப்பு இவை மூன்றும் இன்று வாழ்க்கை எனும் அகராதியில் மதிப்பிழந்த சொற்களாகி, செல்லாத பணமாக, அகதிகளாக அனாதைகளாக அந்நியர்களாக வீதிகளில் அலைவதை பார்க்கும்போது மனம் வலிக்கிறது.


சிந்திக்காத அடுத்த தலைமுறை, சிந்தும் கண்ணீருடன் வாழும் மூத்த தலைமுறை, இதற்கிடையில் தத்தளிக்கும் அத்தனையும் உணர்ந்து உள்ளக் குமுறலுடன் வாழும் நடுத்தரம் !


விடியலும் வந்திடுமோ
முடிவும் தெரிந்திடுமோ
என்கிற கவலையுடன் நாம் ..


பழனி குமார்
07.02.2020  

நாள் : 8-Feb-20, 8:06 am

மேலே