எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நிலா என் வாழ்வின் பக்கங்களில் அழிக்க முடியாத ஒரு...

நிலா

என் வாழ்வின் பக்கங்களில் அழிக்க முடியாத ஒரு பெயர் - நிலா 

குழந்தைப் பருவத்தில்... 

அன்னை மடியில் 
அழுத நிலையில் 
கண்கள் கதறி 
கன்னங்கள் சிவந்து 
உண்ண மறுத்து 
உணவை வெறுத்து 
நான் செய்த நாடகங்கள் 

உன்னைக் காட்டி 
எந்தன் பாட்டி
நிலாச்சோறு ஊட்டி 
தோள்மீது சாய்த்து 
 நித்திரையில் ஆழ்த்திய 
அவ்வினிய நினைவுகள் 

இளமைப் பருவத்தில்... 

புத்தகம் ஏந்தி 
பள்ளி புதுந்து 
குறும்புகள் குறைந்து 
குணங்கள் மாறி
நட்புகள் தோன்றி 
வண்ணங்கள் பூட்டி 
வாழ்க்கையின் கோணங்கள் மாறிய நாட்கள் 

உன் ஒளியிலே பயின்று 
உன்னுறவிலே மகிழ்ந்து 
உன் தரிசனம் வேண்டி 
காத்திருந்த தருணங்கள் 

மங்கையாய் நான் மாறி
என் நளினங்களது கூடி 
ஒவ்வோர் திங்களும் 
வளர்ந்து, தேய்ந்து 
நிலவாய் மெருகேறி 
தோழியாய் உனை பாவித்து 
உன்னோடு பகிர்ந்த கதைகள் 
என் நெஞ்சில் இனிக்குதடி

காதல் பருவத்தில்... 

"நெஞ்சணையில் அவன் இருக்க 
பஞ்சணையில் இவள் உடலிருக்க 
துயிலோ துன்பத்திலிருக்க 
உயிரோ ஊஞ்சல் ஆடுதடி "
என காதலால் கவிதை எழுதி 
உன்னுடன் வாசித்த கணங்கள் 

"உனது வெளிச்சத்தில்
தலைவன் நெருக்கத்தில் 
நாணம் என் அகத்தில் 
மனமோ விண்ணகத்தில் 
உலகம் கைவசத்தில்"
என்று உலவிய காலங்கள் 

 முதுமைப் பருவத்தில்... 
மொட்டைமாடி மேலே 
உன்னொளியின் கீழே 
தலைவனின் மார்மீது
பல்போன பின்னாலும்
பழங்கால கதைபேசி 
நரைகூடிப் போனாலும் 
மனதாலே மழலையாய்
நானாகி போகின்றேன் 

சந்ததிகள் கோடி கண்டும்
இளமை மாறா வடிவம் நீ 
குழந்தைக்குப் பதுமைநீ 
மங்கைக்குத் தோழி நீ 
ஆணுக்குக் காதலி நீ 
முதுமையில் தாயும் நீ
என்றும் அழியா ஞாபகம் நீ 

உன்னை எழுதா கவியும் இல்லை 
உன்னை விரும்பா மனமும் இல்லை...  

பதிவு : மதுராதேவி
நாள் : 8-Sep-21, 10:40 am

மேலே