கவிதையின் புரிதல்

இந்த கவிதை லதா என்பவரால் எழுதப்பட்டது. காலச்சுவடு இதழில் 2004 ம் ஆண்டு வெளியானது. ஓர் இரயில் நிலையத்தை களமாக வைத்து எழுதப்பட்ட கவிதையின் தலைப்பு “ மூவர் “
இந்தக் கவிதை வாசித்து புரிதல் தடுமாற்றம் என்னில் இருக்கிறது. இக்கவிதையினை வாசிக்கும் தோழர்கள் கவிதையிலுள்ள சாரம்சம் என்ன என்று விளக்க வேண்டுகிறேன்.

மூவர்
---------------

வந்துபோகும் ரயில்களும்
தொலைபேசி அழைப்புகளும்
மணி பார்த்தலுமாய்
நசநசத்துக்கொண்டிருந்தது பிற்பகல்

கனத்த பார்வையோ கண்ணீரோ
மௌனப் பேச்சோ இல்லை

மீந்துபோன ஆணுறைகளைப்
பரிசளித்த உன் அக்கறையும்
மகிழ்ச்சிகளைக் குறிப்பெடுக்க
அனுமதித்த என் நேசமும்
சுற்றிலும் நிறைந்திருந்தன

இந்த நிலையத்துக்கு வர
இனித் தேவையிருக்காது
என்பதை இயல்பாகச்
சொல்லிக்கொண்டோம்

அப்போது அவன் வந்தான்

எல்லாப் பயணிகளையும் போலவே
பயண அட்டையைப் பத்திரப்படுத்திவிட்டு
வண்டி வருகிறதா என
எட்டிப் பார்த்தப்படி நின்றான்

பெரிய பூங்கொத்தும்
கேக்கும் பன்களும் நிறைந்த பையும்
அவன் கையில் இருந்தன

வெளியில் கரைந்துகொண்டிருந்த
என் பார்வை தற்செயலாய்
அவனில் கலந்தது
நீயும் அதில் இணைந்தாய்

ரயில் வந்தது

நாங்கள் விடுபடுவதற்குள்
அவன் விழிகள் தெறித்துவிட்டன
கேக்கும் பூக்களும் சிறு சுவரில் மோதிச்
சிதைந்தன

ஓரச் சுவரைப் பிடித்தபடி
கரையேறத் தவித்தது
ஒற்றைக் கரம்

எதையோ சொல்ல வந்த உன் கைகளை
நீ உள்ளிழுத்துக்கொண்டாய்

மாற்றுப் பயண ஏற்பாட்டுக்குக்
காத்திருந்து நான் கிளம்பினேன்.

மஞ்சள் கோட்டுக்கு உள்ளே
எங்களை விளித்தபடி
உயிர்ப்போடு அவனது
விழித்துண்டு.


எழுதியவர் : லதா

நன்றி: காலச்சுவடு இதழ்.



நாள் : 8-Jul-15, 5:51 pm
1


மேலே