கவிஞர் பொன் இளவேனில் அவர்களின் படைப்புலகம்- பொள்ளாச்சி அபி

(Tamil Nool / Book Vimarsanam)

கவிஞர் பொன் இளவேனில் அவர்களின் படைப்புலகம்- பொள்ளாச்சி அபி

கவிஞர் பொன் இளவேனில் அவர்களின் படைப்புலகம்- பொள்ளாச்சி அபி விமர்சனம். Tamil Books Review
தோழர்.கவிஞர் பொன் இளவேனில் அவர்களின் குட்டி ராட்டாந்தூரி மற்றும் ஒளி செய்தல் -இரு கவிதைத் தொகுப்புகள் குறித்து...,

பொதுவாக திறனாய்வு எனில்..நூலில் உள்ள திறன்கள் என்னென்ன என்று பார்ப்பதே வழக்கம். நூலாசிரியர் அழகியலைப் பதிவு செய்திருக்கலாம். உளவியலைப் பதிவு செய்திருக்கலாம், சமூகவியலைப் பதிவு செய்திருக்கலாம், சமூகத்தின் உளவியலைப் பதிவு செய்திருக்கலாம்.இன்னும் புதிய சொல்லாட்சிகள் கூட இருக்கலாம்.

ஒரு தொகுப்பில் தனித்தனியாக இதைப்போல பல்வேறு திறனாய்வுகளை மேற்கொள்ள முடியும்.திறனாய்வின் பகுதிகளாக இருக்கின்ற எல்லா விஷயங்களைக் குறித்தும் பேசுவதற்கு,நம் இலக்கிய சந்திப்பு எப்போதுமே நல்லதொரு களமாகவே இருந்தாலும், அவை எல்லாவற்றையும் இங்கு பதிவுசெய்வதெனில்,இது முழுநேர ஆய்வரங்கமாக மாறிவிடும்.எனவே,தோழர் பொன்.இளவேனில் அவர்களின் இரு தொகுப்புகளில் இருக்கும் அழகியல் மற்றும் சொல்லாட்சிகளை மட்டும் எடுத்துரைப்பதே எனது நோக்கம்.

பொதுவாக கவிதை எனப்படுவது எதைப்பற்றி வேண்டுமானாலும்,எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால்,அக்கவிதை தான் சொல்ல வந்ததை வாசிப்பவர் புரிந்து கொள்ளும்படியாக சொல்வதும், தனக்குள் அது கொண்டிருக்கும் உணர்வை அப்படியே வாசகன் மனதிற்கு கடத்துவதுமே அக்கவிதையின் வெற்றியாகப் பார்க்கப் படும். இது நிகழ்ந்துவிட்டால் கவிதை அழகாகிறது.அந்த அழகு கவிதையை முழுமை பெறச் செய்கிறது. கவித்துவம் மிக்கதாக நிலைபெற்று விடுகிறது. அப்படியானால்,கவிதை எந்த இயலைக் குறித்துப் பேசினாலும்,முதலில் அதில் அழகியல் இருக்கிறதா.. என்றும்,அந்த அழகியலை வாசகர் மனதில் பதியவைக்கும் சொல்லாட்சிகள் இருக்கிறதா என்றும் பார்க்கவேண்டும் என்பதே எனது கருத்து.

இங்கு சொல்லாட்சி என்பதைப் பொறுத்தவரை,நம் எல்லோரிடத்திலும்,எல்லா உணர்ச்சிகளையும் எடுத்துக் காட்டும் சொற்கள் இருக்கின்றன.அதனை வெளிப் படுத்தும் பாங்கில் அவை அர்த்தம் பெறுவதோ,அர்த்தமற்றுப் போவதோ..அதனைப் பிரயோகிக்கும் இடத்தைப் பொறுத்து இருக்கிறது.
உதாரணமாக,---------"நீச்சலுடையில்
சோப்பு விளம்பரம்..
அழுக்கானது மனசு.! - இது கவிஞர் நா.முத்து எழுதியது-

இந்த இரு கவிதைத் தொகுப்புகளை வாசித்தபோது,இரண்டு விஷயங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.ஒன்று கவிதைகளில் பரவிநிற்கும் சொல்லாட்சிகள்.இன்னொன்று விலங்கினங்களை,அவர் தனது கவிதையில் பயன்படுத்திக் கொண்ட விதம். இவருடைய கவிதைகளில் புறா,தும்பி,குருவி,பாம்பு,தவளை,பூனை,எருமை,கரடி, கிளி,கழுகு வண்ணத்துப் பூச்சி,ஓணான்,கழுதை,குதிரை,மயில்,மான்,குயில்..என கால்நடைகள் முதல்,ஊர்வன,பறப்பன..,என அனைத்தும் கவிதைகளுக்குள் வந்து போவதோடு, இவையனைத்தின் இருப்பிடமான வனம் குறித்தும் கவிதைகள் பேசிப்போகின்றன.அதிலும் புறா எனும் பறவை கவிஞரைப் பொறுத்தவரை மிக விசேஷமான ஒன்று என்றும் புரிந்து கொள்ள முடிகிறது.

இவருடைய கவிதைகளில்,உயிரினங்கள் வர்ணணைகளுக்காக மட்டுமின்றி,மனித உணர்ச்சியின் வெளிப்பாடுகளாகவும், சமூகத்தின் பாவனைகளாகவும்,மாற்றம் பெற்று நிற்கின்றன.

எடுத்துக்காட்டாக “ஒரு வனத்தின் அமைதியைப் போல உயிர்த்துக் கொண்டிருக்கும் கடவுள்கள்..,புழுபூச்சிகளாக திரிந்து போகும் கானகத்தில்..”என்று குறிப்பிடுவதைக் காணலாம்.

பொதுவாக காட்டின் அழகையும்,அமைதியையும் குறிப்பிடும்போது,கடவுள் உறையும் காடு என்றோ,கடவுளின் ஆட்சியில் உயிர்கள் என்றோ,பசுமையின் மாட்சியென்றோ.., குறிப்பிட்டுச் சொல்வது வழக்கம். ஆனால், கடவுள்கள் புழு,பூச்சிகளாகத் திரியும் காடு என்று சொல்வதன் மூலம்,உயிர்கள் அனைத்தும் கடவுளின் உருவங்கள் அல்லது அந்த கானுயிர்களே கடவுள்கள் என்று நமக்குள் சிந்தனையை நிலை நிறுத்துகிறார் கவிஞர்.

அதேபோல,தும்பிகள் இடைநிறுத்தல்களோடு அங்கொன்றும் இங்கொன்றுமாக வலம் வந்து கொண்டிருந்தன..,அந்தரத்தில் சித்திரங்கள் வரைந்தபடி..!” என்று ஒரு கவிதையில் சொல்லியிருக்கிறார்.

நம்மில் பலபேர்,தும்பி எனும் சிற்றுயிரை,சிறு வயதில் பார்த்ததோடு சரி.அதற்குப்பிறகு கவிதை எழுத வந்தவர்கள் தும்பிகள் பறந்து கொண்டிருந்தன என்று பொத்தாம் பொதுவில் எப்போதாவது எழுதியிருப்போம். ஆனால்,இளவேனிலின் அவதானிப்பு இங்கு மிக நுட்பமாக வெளிப்பட்டு நிற்கிறது. தும்பிகள் இடைநிறுத்தல்களோடு.. அங்கொன்றும் இங்கொன்றுமாக வலம் வந்து கொண்டிருந்தன. அதுவும் எப்படி..? அந்தரத்தில் சித்திரங்கள் வரைந்தபடி..!,

மிகச்சாதாரணமாய் நாம் கடந்துபோகும் ஒரு விஷயத்தைக் குறித்து,கவிஞர் வரைந்து காட்டுகிற சித்திரம், இப்படியாக நம் மனதிற்குள் பதிந்து விடுகிற அனுபவம், இத்தொகுப்பு முழுவதுமுள்ள கவிதைகளில் நிறைந்து காணப்படுகிறது.

சாரைப் பாம்பொன்று,தவளையைக் கவ்வும் காட்சியைப் போல,பயமுறுத்திக் கொண்டிருக்கிறது மௌனித்த இரவு..,என்றொரு கவிதையிலும்,நீண்ட இறக்கை கொண்டு அலையும் ஒரு கழுகைப் போல,அந்த மரத்தின் மீது அமர்கிறது பார்வை..,என்றொரு கவிதையிலும்,சப்தங்களை மட்டுமே உதிர்த்து மறையும் சொற்களுக்குப் பின்னால்,கரடியொன்றின் அனத்தல்களை மெலிதாக அறிய முடிகிறது..! என்பதைப் போன்ற அழகான சொல்லாட்சிகள் மிக்க வரிகள் ஏராளமான அளவில் இத்தொகுப்புகளில் பரவிக் கிடக்கின்றன.!

இவற்றையெல்லாம் வாசித்தபோது,சிற்றுயிர்களைக் குறித்த கவிஞரது அவதானிப்பு,மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது.அதனையும் கடந்து அவற்றின் மேல் கொண்ட அக்கறையையும் வெளிப்படுத்தி நிற்கிறது.அக்கறையில்லாவிடில் அவதானிப்பிற்கு அவசியமில்லையே..! இதன் மூலம் சூழலியல் குறித்த பார்வையை,படைப்பாளிகள் மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வாகவே நமக்கு மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார் என்றே எடுத்துக் கொள்கிறேன். இதற்காக தனியாக ஒருமுறை நம் அனைவரின் சார்பாக,உங்கள் கரவொலிகளோடு அவருக்கு பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக,கவிதைகளில் பரவி நிற்கும் அழகியல்.கவித்துவம் மிக்கதாக மாறுகின்ற கவிதைகள் சிலவற்றைக் குறிப்பிடலாம்.

பொதுவாக நமக்குத் தெரிந்த சரணாலயங்கள் சிலவற்றைக் கேட்டால்,நாடு முழுவதும் இருக்கிற சிலவற்றைப் பட்டியலிட்டுவிடமுடியும்.ஆனால்,கோவை மாவட்டம் இருகூரில் ஒரு சரணாலயம்..என்று நாம் யாரும் கேள்விப் பட்டிருக்கமாட்டோம்.

குட்டி ராட்டாந்தூரி தொகுப்பில்,முதல் கவிதையாக,காசின் கிராபாச்சி எனும் வர்ண தாரகைப் புறா..என்ற தலைப்பில் இருக்கும் கவிதை, ஒரு புறாவினோடு தனக்கிருந்த கடந்த கால நினைவுகளை,இப்போதும் நினைவுகூறும் ஒரு அருமையான சொல்லோவியம்.

இக்கவிதை முழுக்கவே சிறப்பானதெனினும்,இருகூர் குருசாமி மாமனின் சரணாலயம்.. கால நிற மாற்றத்தின் விதிகளில் கரைந்துபோனது..என்று புறாக்களின் சரணாலயமாக இருந்த ஒரு பகுதியைக் குறித்து நமக்கு அறிமுகப்படுத்துவதோடு, அதற்குள் நிகழ்ந்த மகிழ்வையும்,துக்கத்தையும் நமக்குப் பரிமாறுகிறது.

புறாக்கூண்டு வைத்திருந்த குருசாமி என்று வெறுமனே சொல்லி,நகர்ந்திருந்தால் இக்கவிதை நம்மை ஈர்த்திருக்குமா என்பது சந்தேகமே. குருசாமி மாமாவின் சரணாலயம் என்று குறிப்பிட்டதன் மூலம்,ஒரு பிரம்மாண்டமும்,அதனைத் தொடர்ந்து ஒரு ஈர்ப்பும் உருவாகி,கவிதைக்குள் நம்மை அமிழ்த்திவிடுகிறது.

வனங்கள் அழிந்து கிராமப்புறங்களாக மாறிக் கொண்டிருந்தது ஒரு காலம்.பின்னர் அது நகரங்களாக மாற்றம் பெற்றுக் கொண்டிருந்தது.கிராமத்திலிருந்து நகரமாக மாறுவதற்கு இடைப்பட்ட காலம் அதிகமாகவும் இருந்தது.ஆனால்,இப்போது வனங்கள் எல்லாம் நேரடியாக மிக வேகமாக நகரங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன.இதனால் இயற்கை வளங்கள் அழிந்துவருவதும்,அது மனித குலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது என்றும் உணர்ந்த படைப்பாளிகள்,பலவிதங்களில் சுட்டிக்காட்டி படைப்புகள் எழுதிக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஆனால்,வனங்கள் நகரங்களாகும் வேகத்தை சொல்ல வந்த கவிஞர், “வனங்களின் உடலில் நகரங்கள் கத்திகளெனப் பாய்ந்து கொண்டிருக்கும் இந்த வேளை..!” என்று குறிப்பிடுகிறார். இந்த வரிகள்,நகரமயமாதலின் தீவிரத்தை நமது மனதிற்குள்ளும் கத்தியைப் போலத்தான் பாய்ச்சுகிறது.

நகரங்கள் எப்போதும் வாகன நெரிசல்களால் நிரம்பித்தான் இருக்கும் என்பதும்,அதனால் ஏற்படும் இரைச்சல்களும்,சந்தடிகளும் நம்மை வெருளச் செய்கிறது என்பதும் நமக்குத் தெரியும்.ஆனால்,நகரத்தில் இவை மட்டுமா நிறைந்திருக்கின்றன.

சொற்களால் நிறைந்த நகரம் என்று ஒரு கவிதையில் குறிப்பிடும் கவிஞர்,சொற்களின் வீரியங்கள் குறைந்துவிடுவதற்கான அறிகுறிகள் தென்படாதபோது,செவிகள் வருந்தி மட்டும் என்னபயன்..? என்ற கேள்வியை முன்வைக்கும் அதே வேளையில், புழுகுகளுக்கிடையே,தம்பட்டங்களுக்கிடையே, வியாக்கியானங்களுக்கிடையே, லாபங்களுக்கிடையே,இழப்புகளுக்கிடையே இடைவெளிகள் இல்லாமல் பயணித்தபடி இருக்கும் நகர்தல்களில் வாயிலும் வயிற்றிலும் புடுங்கிக் கொண்டேதான் இருக்கிறது சொற்கள்..என்று முடிக்கும்போது,பிழைப்பிற்காக நகரங்களை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கும் நமக்கு,நகரங்களைப் பற்றி புதிய தரிசனம் கிடைப்பதோடு,ஒரு சமூக யதார்த்தம் முகத்தில் அறையவும் செய்கிறது.

அதேபோல வறுமையின் பரவலைச் சொல்லும்போது.., திறந்தவெளியின் தெருவிளக்காய்,மிளிரும் தரித்திரம்..என்று சொல்லியிருப்பது மிக அழகு.!

மேலும் இவரது கவிதைகளில் ஆங்காங்கே உள்ள சில வரிகளாக,“மதில் கம்பிகளின் மீதமர்ந்து தலையசைக்கும் ஓணானைப் போல,கிழமைகள் மீதேறி அமர்ந்து மௌனம் கொக்கரித்துக் கொண்டே இருக்கிறது”

தன் கரம் தன் கண்ணெதிரே துண்டாகிவிழுவதைப் போல விழுகிறது இழுத்தெறியப்பட்ட கனவு..,

உனது சந்தனப் பெட்டியைத் திறக்க அறிவுப்புடுங்கிகளின் சாதித் திறவுகோல் தேடவில்லை..,

கானகத்தைப் புசித்துத் திரியும் காற்று..,பொய்களில் முகங்கழுவி, பாமர மாமிசங்கள்...,என்ற வரிகளையும், உதாரணமாகக் குறிப்பிடலாம்.

கவிதையில் எதை வாசகனுக்கு உணர்த்த வேண்டுமோ,அதனை வலிமையாக மிக அழுத்தமாக உணர்த்தும் வகையில்,வார்த்தைகளும்,வரிகளும் உங்கள் வாசிப்பிற்காக தொகுப்பெங்கும் அமைந்திருக்கிறது.

குட்டி ராட்டாந்தூரி,ஒளி செய்தல் ஆகிய இரு தொகுப்புகளின் வழியாக,கவிஞர் பொன் இளவேனிலின் படைப்புலகம் என்பது,ஆளுமை மிக்க மொழியாலும், அரிதான விவரங்களாலும் மிகச்சிறப்பானதாகவே இருக்கிறது. கவிதைகளில் மிகுந்திருக்கும் அழகியலை எடுத்துக் காட்டும் வகையில் நான் ரசித்த ஒரு கவிதையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

தலைப்பு-அவ்வளவே.!
-------
அதன் குரல்,
அதன் சப்தம்,
அதன் பாட்டு,
அதன் பிரியம்,
அதன் சொல்,
அதன் சிறகு,
அதன் கூடு,
அதன் துயரம்,
அதன் எல்லை,
அதன் படிமம்,
அதன் முடிவு,
அதன் இழப்பு,
அதன் உலகம்,.
அதன் மீதான புகார்களும் அவ்வளவே..!-

-இந்தக் கவிதையை வாசிக்கும்போதே,கவிதை எதைப்பற்றி பேசுகிறது என்று நாம் அறிந்து கொண்டதை மெய்ப்பிக்கும்படியாக,குருவிகளின் குரல்கள் என்றொரு கவியும் இதில் இருக்கிறது.

கவிஞர்கள் தான் ஏற்றுக் கொண்ட தத்துவங்கள் அல்லது சிந்தனைச்சார்புகள் வழி நின்று படைப்புகளை முன்வைப்பார்கள். அவ்வாறுதான் எழுத வேண்டும் என்று எந்த தீர்மானமும் இன்றி எழுதத்துவங்கினாலும்,அவரை அறியாமலேயே படைப்புகளின் வழியாக படைப்பாளியின் சிந்தனை அல்லது சார்பு வெளிப்பட்டுவிடும் என்பதே இயல்பு.

மேலும், தற்போதெல்லாம் ஒரு கவிதை தொகுப்பு வெளியாகிறது எனில், அத்தொகுப்பு முழுவதும் உள்ள கவிதைகள்,ஒரு குறிப்பிட்ட கருவாக,-அது காதலாகவோ, பெண்விடுதலையாகவோ,அரசியலாகவோ,சாதி மத எதிர்ப்பாகவோ- அமைத்துக் கொள்ளும் போக்கும் அதிகரித்து வருகிறது.

பொன் இளவெனில் அவர்களின் கவிதைகளைப் பொறுத்தவரை,கவிதைகள் அனைத்தும்,இயற்கை அம்சங்களின் வழியாக யதார்த்த உலகைப் பார்க்கும் பண்பாக வெளிப்பட்டிருக்கிறது. கவிதை எழுதுவதற்கு பயன்பட்டிருக்கிற அனைத்துக் கருப்பொருள்களும், இயற்கையின் இருப்புகள்,நிகழ்வுகள் சார்ந்தே விமர்சிப்பதாகவும், விவரிப்பதாகவும் இருக்கிறது.

ஒரு முதியவரின் கையறு நிலையைக் குறிப்பிடும்போதுகூட,“கூட்டைக் காலி செய்துவிட்ட பறவையைப் போலல்லவா,நினைவுகளை இழந்துவிட்ட அவரின் நிலை..”எனவும்,“முன்இரண்டு பற்களே முளைத்த குழந்தை,மொழியை ஆப்பிளாக்கித் துப்புகிறது.” என்றும் குறிப்பிடு;கிறார்.

இரு தொகுப்புகளிலும் சேர்த்து,இயற்கையைப் பற்றிக் குறிப்பிடாத கவிதைகள் என்று கணக்கிட்டால்,அவற்றை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

எதை எழுதினாலும்,அதில் அவரது இயற்கை சார்ந்த காதலும்,அக்கறையும் வெளிப்பட்டு நிற்பது திட்டமிட்டு எழுதப்பட்டதல்ல.அது கவிஞரது இயல்பாகவே இருக்கிறது.

இதற்கு முன்வந்த தொகுப்புகளை நான் படிக்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்பதால்,அதிலிருந்த கவிதைகளின் தன்மை என்னவென்பதை இதுவரை நான் அறிந்து கொள்ளவில்லை.

ஆனால்,இந்தத் தொகுப்புகளில்,நடப்பு அரசியல் குறித்தோ,ஏற்றத் தாழ்வு மிக்க பொதுவான சமூக சிக்கல்கள் குறித்தோ,உலகளாவிய அளவில் பற்றியெரியும் பிரச்சினைகள் குறித்தோ, மனிதர்களுக்கு ஏற்பட்டு வரும் கேடுகள் குறித்தோ, கவிதைகள் அவ்வளவாகக் காணப்படவில்லை என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு குறையாகவே தென்படுகிறது. அடுத்த தொகுப்பில் அதனையும் நிறைவேற்றுவார் என்று நம்புவோம்.

மொழியாலும்,சிந்தனையாலும் ஆளுமை மிக்க கவிஞர்கள்,யதார்த்தத்தில் உள்ள பிரச்சினைகளின் துயரத்தைக் களையவும் கவிதைகளைப் பயன்படுத்தவேண்டும். இலக்கியம் என்பது இன்பத்தை நுகர்வதற்கு மட்டுமே எனில்,இங்கிருக்கும் துன்பத்தை விரட்டுவது யாருடைய பொறுப்பாகவும் இல்லாமல் கடந்துபோய்விடும் என்பதை நினைவுறுத்தியும்,ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறேன்
----- பொள்ளாச்சி அபி-19.10.2014------

சேர்த்தவர் : பொள்ளாச்சி அபி
நாள் : 23-Oct-14, 10:20 am

கவிஞர் பொன் இளவேனில் அவர்களின் படைப்புலகம்- பொள்ளாச்சி அபி தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே