தமிழறிஞர் நாமம்மது

(Tamil Nool / Book Vimarsanam)

தமிழறிஞர் நாமம்மது விமர்சனம். Tamil Books Review
தமிழறிஞர் நா.மம்மது
ஆ.ஷைலா ஹெலின்
நம் தமிழ் மொழியினைப் போல தமிழிசையென்பதும் மிகப் பழமையான அரும் பெரும் செல்வமாகும். வாழ்கைக்கு வளமை சேர்க்கும் வழியைத் தேடிய மனிதன் இசை இன்பத்தைச் சிறந்த ஒன்றாகக் கண்டான். இயற்றமிழ், பண்ணோடு கலந்து தாளத்திற்கு இணங்க செயல்படும்போது அதுவே இசைத்தமிழாகிறது.
நுண்கலையாம் நிகழ்த்து கலையான இசைக்கலையில் நன்கு தேர்ச்சிபெற்றோர் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருக்க, அதன் வரலாற்றையும் வளர்ச்சியையும் ஆய்ந்து வருவோர் எண்ணிக்கை அதைவிட குறைவாகும். இங்ஙனம் தமிழிசைத் துறையில், மேற்கூறிய இருப் பகுப்புகளிலும் தேர்ச்சிபெற்றோர் என்போர் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே. இவ்விருப் பகுப்புகளும் இரயில் தணடவாளத்தைப் போன்றது; இணைந்து செல்வதே சாலச் சிறந்தது. இரண்டு துறைகளிலும் புலமைப் பெற்றவராலேயே அதன் பழைமையான, புதுமையான கருத்துக்களை விமர்சிக்கவும், திறனாய்வு செய்யவும், அகராதி, இசைக் கலைக்களஞ்சியம் படைக்கவும் முடியும். அங்ஙனம் பட்டியலிட்டு கூறும் நபர்களுள் நா.மம்மதுவும் ஒருவராவர்.
தமிழிசையின் தொன்மையையும், நுட்பத்தையும், முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் உலகரிந்திட முயற்சித்து வரும் தமிழிசை அறிஞர்களுள் இவரும் ஒருவராவார்.

நா.மம்மதுவின் வாழ்க்கை வரலாறு
தமிழ்க் கூறும் நல்லுகத்து இசை வரலாற்றில் மறுமலா்ச்சிப் பாதை ஒன்றை வகுக்க வேண்டும் என்ற நோக்கோடு, 21-ஆம் நூற்றாண்டின் தமிழிசை வளர்ச்சிப் பணியாளர் வரிசையில் தமிழிசை அறிஞர் நா.மம்மது அவர்களும் முக்கிய பங்கு வகிக்கிறார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம் எனப் பெயர் பெறும் ஊருக்கு அருகில், இடைகால் எனும் கிராமத்தில் நா.மம்மது 24.12.1946-இல் பிறந்தார். இவரது தந்தையார் மு.நாகூார் மைதீன்; தாயார் நா.பாத்திமா; துணைவியார் ம.ஆயிசா என்ற முகமது இப்ராகிம் அம்மாள். இவர்தம் பிள்ளைகள் பாத்திமா மில்லத், ஆயிசா மில்லத், இரமலான் மில்லத் என்பவர்களும், பேரப் பிள்ளைகள் சபீர் முகமது சபீர், ஆசிப் முகமது, சபியா பானு என்பவர்களாவர். இவரது குடும்பத்தினா் அனைவரும் இசை ஆர்வமும், இசைக் கருவிகளை வாசிக்கும் திறனும் உள்ளவர்கள்.
இவர் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் இளம் அறிவியல் கணிதமும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சமயம் மற்றும் தத்துவத்தில்(மெய்யியல்) முதுகலைப் பட்டமும், சூஃபி இசையில் இளநிலை ஆய்வாளர் பட்டமும் பெற்றுள்ளார். தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி 2004-இல் ஓய்வு பெற்றார். தற்பொழுது குடும்பத்தினருடன் மதுரை மாநகரில் வசித்து வருகிறார்.
இளம் பருவத்திலிருந்தே நூல்கள் வாசிப்பதில் நாட்டம் உடையவர் நா.மம்மது. தொடர்ந்து கல்லூரிக் காலத்திலும் நூல்கள் தன்னுள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றார். இவருடைய எழுத்தின் வீச்சுக்குப் பல்வேறு எழுத்தாளா்களின் நூல்களும், கருத்துகளும் காரணம். குறிப்பிட்ட துறையின் நூற்களை மாத்திரம் தன் இரசனையாகக் கொள்ளாமல் பல்வேறு துறைகளின் நூல்களும், நூலகத்தில் வாசிக்காத நூற்களே இல்லை என்று கூறும்படியாக அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆவல் கொண்டவர். புகழ் பெற்ற நாடக ஆசிரியர்களின் நாடகங்களையும், வரலாறு படைத்த நூற்களையும் படித்திருப்பினும், அவருடைய பிடித்தமான வாசிப்புப் பிரிவுகள் இலக்கியம், இசை, கவிதை, வானியல், இயற்பியல், பகுத்தறிவு, அளவையியல், மெய்யியல் போன்றவைகளே.
கல்லூரி காலத்தில் சி.சு.மணியண்ணன், வளன் அரசு, பாவலர் முத்தம், ந.சொக்கலிங்கம், தொ.பரமசிவன், கிரகோரி, தமிழ் வென்றி இவர்களிடம் இருந்து தாம் அறிந்து கொண்டது மிக அதிகம் எனக் குறிப்பிடுகின்றார். அன்று முதல் கடந்த நாற்பது ஆண்டு காலமாக தனித்தமிழ், தமிழ் இசை, இலக்கணம், இலக்கியம், தமிழர் நாட்டியம், தமிழ்க்கூத்து ஆகிய துறைகள் பற்றிய பற்பல நூல்களைக் கற்று, குறிப்பாக தமிழ் இசை ஆய்வுப் பணியைச் செய்து வருகிறார். இவரை தமிழ் இசையின்பால் கொண்டு வந்த முதலாசிரியர், நெல்லையில் தனித்தமிழ்க் கழகம் நிறுவிய ‘சிவஞானமா’ பாடிய உரை ஆசிரியர் திரு.சி.சு.மணியண்ணன். ‘தமிழிசைக் கலைக்களஞ்சியம்’ உருவாக்கிய இசை ஞாயிறு திரு.வீ.ப.கா.சுந்தரம், நா.மம்மதுவின் இசை ஆய்வு ஆசிரியர். தமிழிசை பற்றிய ஆய்வு நெறிமுறைகளை அவரிடம் கற்றுக்கொண்டார்.

பல்வேறு அமைப்புகள், மக்கள் மேடை, கல்லூரி, பல்கலைக்கழகம் என பற்பல இடங்களில் தமிழிசைக் குறித்த சொற்பொழிவுகளும், இசை நிகழ்ச்சிகளும் வழங்கி வருகிறார். அறுபதிற்கும் மேற்பட்ட தமிழிசை நிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகளை வானொலியில் அளித்திருக்கிறார். கலைஞர், சன், மக்கள், விஜய், என்.டி தொலைக்காட்சிகள் மற்றும் மலேசியா, சிங்கப்பூா், சௌதி தொலைக்காட்சிகளில் தமிழிசைக் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
தமிழகம் மட்டுமல்லாது திருவனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி, புதுதில்லி ஆகிய இடங்களில் நிகழ்ச்சிகள், கட்டுரைப் படைப்புகள் நிகழ்த்தியுள்ளார்.
அமெரிக்காவில் ஆர்லன்டோவில் அமெரிக்கத் தமிழ்ச் சங்க கூட்டமைப்பின் ஆண்டு கருத்தரங்கில் இசை நிகழ்ச்சி அளித்துள்ளார். மேலும் வாசிங்டன், அட்லாண்டா, நியுயார்க், கலிபோர்னியா, கனக்டிகட், நியூசெர்சி போன்ற இடங்களில் உள்ள தமிழ்ச் சங்கங்களில் தமிழிசைச் சொற்பொழிவும் இசை நிகழ்த்தும் வழங்கியுள்ளார்.
தமிழகம் மற்றும் அயலகத்தின் பற்பல இதழ்களில் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தமிழிசை பற்றி நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆய்வுக் கட்டுரைகளும், சாதனைகளும் உயிர்மை, அமிர்தா, புதிய காற்று, தீராநதி, காலச்சுவடு, தினமலர், தினத்தந்தி, தி ஹிந்து, தி நியு இன்டியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற வெளியீடுகளில் வெளிவந்துள்ளன.

படைப்புகள்
1.தமிழிசைத் தளிர்கள் (2006)
2.தமிழிசை வேர்கள் (2008)
3.இழை இழையாய் இசைத்தமிழாய் ( 2008)
4.தமிழிசைப் பேரகராதி (2010)
5.ஆதியிசையின் அதிர்வுகள் (2011)
6.தமிழிசை வரலாறு (2012)
7.ஆபிரகாம் பண்டிதா் (குறித்தான நூல்) (2013)
என இதுவரை ஏழு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.

விருதுகள்
1. சிறந்த நூல் விருது – தமிழ்ச் சங்கம், திருப்பூர் (2007 )
2. மக்கள் விருது –பொங்குதமிழ் அறக்கட்டளை, சென்னை( 2008 )
3. வாழ்நாள் சாதனையாளா் விருது - பெட்னா, அமெரிக்கா ( 2008 )
4. பெரியார் விருது – தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம், சென்னை (2008 )
5. காவ்யா வெள்ளி விழா விருது–காவ்யா, சென்னை ( 2008 )
6. தமிழ் இசைப்பணி விருது – நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ( 2009)
7. இசைத்தமிழ் வித்தகா் விருது – தமிழ் மாமன்றம், திண்டுக்கல ( 2009 )
8. பாரதியார் விருது – தமிழக அரசு விருது (2011 )
9. த.மு.எ.க.ச விருது (2011 )
10. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது (2011)
11. தமிழிசைத் தளபதி விருது – சோமசுந்தரா் ஆகமப் பண்பாட்டு ஆய்வுமன்றம், சென்னை (2012 )
12. சுஜாதா அறக்கட்டளை விருது ( 2012 )
13. எஸ்.ஆா்.எம் பல்கலைக்கழக விருது (2012 )
14. இந்தியத் தொழில் கூட்டமைப்பு விருது, மதுரை (2012)
15. அனைத்துலக இசுலாமியத் தமிழ் இலக்கிய விருது, கும்பகோணம் (2014)
என இன்னும் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
தினமலரில் 17.01.2011 –இல் நா. மம்மது குறித்து வெளியானது :
அறிந்து கொள்வோம் இவரை: தமிழிசை ஆய்வாளர் நா. மம்மது.
தமிழிசைக்கு முதன் முதலாக அகராதி எழுதிய மதுரை இசை ஆய்வாளர் நா.மம்மது, தமிழக அரசின் பாரதியார் விருதினுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழிசை அகராதி என்ற இந்நூலில் 5000 இசைச் சொற்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நூல் இசையாசிரியர்கள், மாணவர்கள், ஆர்வலர்களுக்கு பெரும் வரப்பிரசாதம்.
‘ஒருவருடைய மிகப்பெரிய சொத்து எது?’ என்று நபிகளாரிடம் ஒருவர் கேட்டார். அதற்கு நபிகளார் தந்த பதில், “நல்ல காரியத்திற்கு நீங்கள் செய்யும் செலவே உலகில் மிகப் பெரிய சொத்து” என்றார். இதனை மனதில் நன்கு பதித்துக் கொண்ட நா.மம்மது தமிழிசை வளர்ச்சிக்கென்றே தன் விலைமதிக்க முடியாத காலத்தை செலவிட்டு வருகிறார்.
முத்தமிழின் நடுவண் தமிழான இசைத்தமிழின் வளர்ச்சிப்பணியில் பங்காற்றும் தமிழிசை அறிஞர்களுள் நா.மம்மதுவும் ஒருவராவார்.

நா.மம்மதுவின் படைப்புகள்
தமிழிசை 3000 ஆண்டு பழமையான மரபு கொண்டது. இதன் இசைக் சொற்களுக்கு விளக்கம் அறிய அகராதி இல்லையே என்ற குறையை போக்கிய தமிழிசைப் பேரகராதியும்,
தமிழிசை தொடர்பான கருத்துக்களையும் குறிப்புகளையும் நுட்பமான முறையில் விளக்கும் புத்தகங்களாக தமிழிசைத் தளிர்கள்,
தமிழிசை வேர்கள்,
இழை இழையாய் இசைத்தமிழாய்,
ஆதியிசையின் அதிர்வுகள்,
தமிழிசை வரலாறு என்ற புத்தகங்களையும்,
சாகித்ய அகாதெமி பதிப்பில் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ஆபிரகாம் பண்டிதர்
குறித்த நூலினையும் நா.மம்மது எழுதி வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இவ்வேழு நூற்களில் இருந்து சில குறிப்புகளைக் காண்போம்.

 தமிழிசைத் தளிர்கள்
2006-ஆம் ஆண்டு கோவை தமிழோசைப் பதிப்பகத்தாரால் கொண்டுவரப்பட்ட நூல்: 110 பக்கங்கள் கொண்டது: 12 இசை ஆய்வுக் கட்டுரைகளும், ஒரு நேர்க்காணலையும் கொண்டுள்ள நூல்.
இந்நூல் மம்மதுவின் இசை ஞான குருவான மாபெரும் இசை ஆய்வாளர் மறைந்த, என்றும் மம்மதுவின் உள்ளத்தில் வாழும் திரு.வீ.ப.கா.சுந்தரம் அவர்களுக்கு காணிக்கையாக்கப்பட்டுள்ளது.
பழம்பெறும் மார்க்சிய அறிஞர், சமூக இயலாளர், எழுத்தாளர் கோவை ஞானி அவர்கள் வாழ்த்துரையாக ஒரு முன்னுரை வழங்கியுள்ளார்.
கோவை ஞானி கூறுகிறார்:
“.......... தமிழகத்தில் இசையரங்குகளில், தமிழிசைக்கு மரியாதை தரப்படவில்லை என்பதும், தமிழிசை என்பதை மறுத்து, தமிழிசையின் இன்னொரு மொழி வடிவமாக இருந்த தெலுங்கிசைக்கு, பெருத்த மரியாதை தரப்பட்டது என்பதும், இத்தகைய போக்கின் அடியில், தமிழ் வெறுப்பும், தமிழர்கள் மீது வெறுப்பும், தமிழ் மரபின் மீது வெறுப்பும் இருந்தன என்பதும், இத்தகைய போக்கை நெடுங்காலமாகப் பிராமணர் கட்டிக் காத்தனர் என்பதும் எங்களுக்கு நன்றாகத் தெரியும்”; மேலும் ஞானி எழுதுகிறார் :
“........ நல்ல வேளையாக தமிழிசையை விட்டுத்தராத நாகசுர இசை மேதைகளை நாம் பெற்றிருந்தோம். இவர்கள் தான் தமிழிசையின் நெடுங்கால வரலாற்றுக்கும் ஆதாரமானவர்கள். தேவடியார்களிடம் ஒதுங்கிய கூத்துக் கலையைப் பின்னர் நாட்டியக் கலையாக பிராமணச் சமூகம் வரித்துக் கொண்டதோடு புதுப்பிக்கவும் செய்தது. நம் இழப்புகள் அசாதாரணமானவை.”
• ‘கூத்து என்னும் முதல் மொழி’ என்ற கட்டுரை இயல், இசைக்கு முன்பு தோன்றியது கூத்து என்றவாறு ஆய்வு செய்கின்றது. ஆதிமனிதன் வேட்டைக்கு முன்பும் வேட்டைக்குப் பின்பும் சடங்கு மயப்பட்ட கூத்து ஆடியுள்ளான். இதுவே மன்னர்களின் முன் தேர்க்குரவை பின் தேர்க்குரவையாகியுள்ளது.
“ஆ,ஊ,அம்,இம் என்று தாளத்திற்கு ஏற்ப உள்ள உணர்விற்கு ஒத்து ஒலிகளை எழுப்பி, ஆதி மனிதன் ஆடினான். தாம், தீம், தத், தகதினு என்றெல்லாம் தாளத்திற்கேற்ப வாயினால் சொல்லப்படும் சொற்கட்டுகள் (கொன்னக்கோல்) நம் நாட்டியத்தில் வந்து சேர்ந்தது இவ்வாறு தான்” என்பார் மம்மது.
இயல்தமிழின் அளபெடையும், புணர்ச்சியும் இரட்டைக் கிளவியும், அடுக்குத்தொடரும் உருவானதை மம்மது விளக்கியுள்ளார்.
• ‘கூத்தும், இசையும், உடல் உழைப்பும்’ என்ற கட்டுரை பேசுவது:
“கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்
கூத்தாடி கிழக்கே பார்ப்பான்
காரிகை படித்துக் கவிதை செய்வதைவிட
பேரிகை அடித்துப் பிழைப்பு நடத்தலாம்”
என்ற இரண்டு நாட்டார் பழமொழிகள் கூறும் நம் கூத்து, இசை மரபுகள் பற்றி விவரிக்கிறார் மம்மது.
• ‘இசை ஆய்வு முன்னோடி ஆபிரகாம் பண்டிதர்’ என்ற கட்டுரையில்,
பண்டிதரின் வரலாறு, இசை ஆய்வு குறித்து பதிவாகியுள்ளது. பிறநாட்டு அறிஞர்களும் தமிழ் இசை வரலாற்றை அறியும் முகமாக தமது ‘கருணாமிர்த சாகரம்’ என்ற நூலை ‘A Book on Suruthi’ என்ற பெயரில் அவரே எழுதியுள்ளதைக் குறிப்பிடுகின்றார்.
பழஞ்சுவடிகளை சிற்றூர் தோறும் தேடியலைந்து பதிப்பித்த உ.வே.ச பண்டிதர் நூல்பற்றி, “பழைய தமிழ் நூல்களாகிய சிலப்பதிகாரம் முதலியவற்றைச் செவ்வனே ஆராய்ந்து விளக்கியநூல்” என்று முகவுரையில் குறிப்பிடுகின்றார்.
• ‘தமிழ் இசைக் கதை சொல்லி’ என்ற கட்டுரை அறியப்படாத அறிஞர்கள்; ஆனால் அறியப்படவேண்டியவர்கள் என தனது இசை ஆசிரியரின் (வீ.ப.கா.சு) வரலாறு மற்றும் தமிழிசைப் பண்கள் பற்றிப் பதிவு செய்கிறார் மம்மது.
தொல்காப்பித்துள் இசைச் செய்திகளை வீ.ப.கா.சு கொண்டு வந்த செய்தியை விளக்குகிறார்.
அவர் முனைவர் பட்டம் பெற்ற விதம்; இசை கற்ற முறை; தாளம் பழகிய முறை என பலவற்றை மம்மது சொல்லிச் செல்கிறார். அவர் எழுதிய பல நூல்களையும், அவற்றின் பயன்களையும், சுட்டிக்காட்டியுள்ளார். அவர் எழுதிய நாடகங்கள், இசைப் பாடல்களையும் குறிப்பிட்டு அவரை முத்தமிழ் அறிஞர் என்ற வியந்து போற்றுகிறார் மம்மது.
• எதிர்காலத்தில் தமிழ் இசை இலக்கணம் என்ற பொருள் தொகுப்பு நூல் எவ்வாறு எழுதப்படல் வேண்டும் என்பது குறித்த மம்மதுவின் முக்கியக் கட்டுரை ‘தமிழ் இசை இலக்கணம்.’
கேள்வி(சுருதி), சுரம், சுரத்தானம், இயக்கம், பண், இணை, கிளை, நட்பு, பகை, பண்ணாக்கமுறை, ஆளத்தி (ஆலாபனை), தாளம், என்று பல்வேறு குறுந் தலைப்புகளில் இவற்றை பண்டை இலக்கிய, இலக்கண, உரைவழி மம்மது விளக்குகின்றார்.
• ‘இசையில் நெய்தல்’ என்ற கட்டுரை ஐவகை இசைகளில் ஒன்றான நெய்தல் இசை, அந்நிலப்பண்கள் முதலியன பற்றி ஆய்வு செய்துள்ளது.
‘செவ்வழிப்பாலை’ என்ற பாலை இன்று பாடும் மரபிலிருந்து மறைந்த நெய்தல் நிலத் தலையாய பண் பற்றியும், நெய்தல் நிலத்திற்கான ‘விளரி’ என்ற பண்பற்றியும் நல்லதோர் ஆய்வாக இக்கட்டுரை அமைந்திருக்கின்றது.
அடுத்து நெய்தல் நிலத்திறங்கள் என்ற சிறு பண்கள் பற்றி விளக்குகின்றார் மம்மது.
சிலம்பின் வழிநின்று இப்பண்களை மம்மது விளக்கியுள்ள பாங்கு எதிர்கால ஆய்வாளர்களுக்குப் பேருதவியாக விளங்கும்.
• ‘நம் இசை முறையாக வரும் முறை ’ என்ற கட்டுரையில் ‘முறை’ என்ற சொல் இசையில் எவ்வாறெல்லாம் பொருள்கொள்கிறது என்பதைக் கூறுகின்றது.
மரபு, வழக்கு, ஒழுங்கு, வரிசை, தடவை, வழி, உறவு, நீதி, அடைவு, பிறப்பு, ஒழுக்கம், கற்பு, பழமை, ஊழ், கூட்டு, நூல், தன்மை, திருமணம், பருவம், உரிமை, கட்டளை, வைப்பு என்று 22ற்கு மேற்பட்ட பொருளுடையது இச்சொல்.
‘தொன்று படுமுறை’, ‘தொன்முறை இயற்கை’, என்ற இசைத்தொடரில் வரும் முறை என்ற சொல்லிற்கு உரிய பொருள் கூறுகின்றார்.
• ‘இசை இயல் நூல்களும் பதிப்பும்’ என்ற கட்டுரையில் தமிழில் உருவான இசையியல் நூல்களின் பட்டியல் தந்துள்ளார்.
உ.வே.சா வின் சிலப்பதிகாரம் மற்றும் அதன் உரைகளின் பதிப்பின் சிறப்பு குறித்து விளக்குகின்றார்.
கருணாமிர்த சாகரம், யாழ்நூல் என்ற முதன்மை இசை ஆய்வுநூல்களைப் பற்றி சிறப்புடன் எடுத்துரைக்கிறார்.
புதுவை திருமுருகன் எழுதிய ‘சிந்து பாவியல்’ என்ற நூல் சிந்துப் பாவிற்கான இலக்கணம் வகுத்தது பற்றியும், வண்ணப் பாடல்களின் இலக்கணம் கூறும், ‘வண்ணத்தியல்பு’ என்ற வண்ணச்சரபம் தண்டபாணி சாமிகள் பற்றியும் விவரிக்கின்றார்.
இக்கட்டுரை இசையியல் பற்றிய நூல்கள் பற்றிய ஓர் ஒட்டு மொத்த பார்வையாக உள்ளது.
சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின், சேலம் எஸ்.ஜெயலட்சுமியின் ‘சிலப்பதிகார இசைச் செல்வர்கள்’ என்ற நூலுக்கு புது தில்லியிலிருந்து வெளிவரும் ‘The Book Review’ என்ற இதழுக்கு மம்மது ஆங்கிலத்தில் எழுதிய திறனாய்வு இந்நூலில் இடம் பெற்றுள்ளது. சிலம்பின் இசைச் செய்திகளை மேலும் விளக்கமுறச் செய்துள்ளார் மம்மது.
• ‘இசுலாமிய ஆய்வு’ என்ற கட்டுரை இசுலாமியரின் இன்றைய நிலைபற்றியும், அவர் தம் ஆக்கம்பற்றியும், இசைத்தமிழுக்கு அவர்களின் பங்களிப்பு பற்றியும், ஆய்வு செய்கிறது.
‘இசை நுணுக்க இன்பம்’ என்ற குலாம் காதிர் நாவலரின் இசை இலக்கண நூல் பற்றிய பதிவுகளைத் தருவது சிறப்பானது.
கவிக்கோ அப்துல் இரகுமானின் வழிகாட்டுதலில் ஆடலரசி அனிதா இரத்தினம் அவர்களின் ‘தர்காஸ்’ என்ற இசுலாமிய நாட்டிய நிகழ்ச்சி குறித்தும் அரிய குறிப்புத் தந்திருக்கின்றார்.
• தினமணி இரம்சான் (2003) மலரில் வெளிவந்த ‘இசையே மொழி’ என்ற கட்டுரை தமிழகச் சூ.ஃபியர் என்ற இசுலாமிச் சித்தர்களின் இசை மற்றும் இலக்கியங்கள் குறித்துப் பேசுகின்றது. கட்டுரையின் இறுதியில்,
“இசை மானிடன் கண்டுபிடித்ததல்ல; அது இயற்கையில் இயல்பாக இருப்பது. சமூக மானிடரோடும் இறையோடும், தன்னோடும், ஏன் இயற்கையோடும் கூட இயற்கையில் எழுந்த அந்த இசை மொழியிலேயே சூஃபி பேசுகிறான்” என்ற பதிவு மனநிறைவைத் தருகின்றது.
 தமிழிசை வேர்கள்
2008-ஆம் ஆண்டில் பொள்ளாச்சி எதிர்வெளியீடு பதிப்பகத்தாரால் இந்நூல் கொண்டுவரப்பட்டள்ளது. 160 பக்கங்கள் கொண்ட இந்நூல் பதிமூன்று இசை ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டது.
 சமூக இயலாளர் பேராசிரியர்.அ.மார்க்ஸ் பதினெட்டு பக்கங்கள் கொண்ட சிறப்பான முன்னுரை ஒன்றை வழங்கியுள்ளார். இந்த முன்னுரையை ஒரு நல்ல இசை ஆய்வாக எடுத்து, ‘உண்மை’ மற்றும் ‘புதிய பார்வை’ இதழ்கள் வெளியிட்டுள்ளன. முன்னுரையிலிருந்து சில செய்திகள்:
“சாமவேதம் இசைப்பற்றியது எனக் கூறப்பட்டாலும் நமது தொல்காப்பியம், சிலம்பு, சிந்தாமணி, பெருங்கதை, உரை இலக்கியங்கள், முதலானவற்றில் காணப்படும் நுணுக்கத்தின் பதிவுகள் அதில் கிடையாது. தவிரவும் வேதம் ஓதுதலும் (Chanting) இசைத்தலும் ஒன்றன்று. தமிழிலிருந்தே திராவிட மொழிகள் அனைத்தும் கிளைத்தன. இவ்வகையில் திராவிடர்களின் தென்னிந்தியர்களின் முதுசொம்மாக, மூலச்சொத்தாக வளமான நம் இசை அமைகிறது.”
 தமிழர் வரலாற்றில் 20-ஆம் நூற்றாண்டில் நடந்த மூன்று முக்கிய நிகழ்வுகள் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தவை:
1.மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்கம்
2.தந்தை பெரியாரின் தன்மான இயக்கம்
3.அண்ணாமலை அரசரின் தமிழிசை இயக்கம்
என்று பதிவு செய்துள்ளார் மம்மது. தமிழிசை இயக்கம் குறித்து அ.மார்க்ஸ் கூறுவதோடு, ‘தமிழ்ப்பாட்டு இயக்கம்’ மற்றும் ‘தமிழிசை இயக்கம்’ என்பனவற்றை அவர் தமது முன்னுரையில் வேறுபடுத்திக் காட்டுகின்றார்:
“இன்று கர்நாடக இசையாக உருப்பெற்றிருப்பது பண்டைத் தமிழிசையே என்பதை நிறுவிய தமிழிசை இயக்கமும், கர்நாடக இசைக் கச்சேரிகளில் தமிழில் பாட வேண்டும் எனத் தொடங்கப்பட்ட தமிழ்ப்பாட்டு இயக்கமும் வேறுவேறு.
“மம்மதுவின் கருத்துக்களில் நான் மிகவும் முக்கியமாகக் கருதுவது பண்டிதரின் முக்கியத்துவத்தை அவர் விளக்குவதும், யாழ்நூலில் உள்ள குறைபாடுகளைச் சுட்டுவதும் தான். மறைக்கப்பட்ட தமிழிசை பற்றிய முதல் நூல் பண்டிதருடையதே. முதல் நூலுக்குரிய சில தவறுகளை இன்றைய ஆய்வாளர்கள் சுட்ட இயலும். ஆனால் இதற்குப்பின் முப்பதாண்டுகள் கழித்து வெளிவந்த யாழ்நூலில் முதல் நூலைக் காட்டிலும் அதிகத் தவறுகள் உள்ளன. மம்மது சுட்டிக்காட்டும் தவறுகள் தவிர செ.அ. வீரபாண்டியன் முதலானோர் வேறு சில தவறுகளையும் சுட்டிக் காட்டுகின்றனர். ”
 2001-ஆம் ஆண்டு நெல்லை குறிஞ்சி அமைப்பினர் இருநாட்கள் ஆபிரகாம் பண்டிதர் குறித்த ஆய்வரங்கம் ஒன்றை நடத்தினர். அக்கருத்தரங்கக் கட்டுரைகளை நூல் வடிவம் செய்து அதற்கோர் முன்னுரை அளித்துள்ளனர். அம் ‘முன்னுரையிலிருந்து ஒரு முன்னுரை’ என்ற இந்நூலிலுள்ள கட்டுரை தரும் செய்தி:
“நெல்லை குறிஞ்சி அமைப்பினரின் இரண்டாவது கூட்டம் 30.11.2001-ஆம் நாள் பாளையங்கோட்டை சைவ சபையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இசையறிஞர் மம்மது உரையாற்றினார். இசைக்குறிப்புகளை விளக்குவதற்குரிய பாடல்களைத் திரு. இராசா பாடிக் காட்டினார். ஏறக்குறைய இரண்டரை மணிநேரம் நிகழ்ச்சியில் விளக்கங்களும், பாடல்களும், சிறப்பாக இடம் பெற்றன. திரு. மம்மது, ஆபிரகாம் பண்டிதர் வழிநின்று மறைக்கப்பட்ட தமிழிசை வரலாற்றையும், கர்நாடக இசை என்பது நமது தமிழிசையே என்பதையும், விளக்கமாக எடுத்துரைத்தார்.... மம்மது அவர்களின் உரை குறிஞ்சி அமைப்பினருக்குப் புதிய தெம்பினை அளித்தது.”
 விபுலானந்த அடிகளாரின் ‘யாழ்நூல்’மூன்றாம் பதிப்பை கனடா வாழ் தமிழ் உள்ளங்கள் கொண்டு வந்தனர். அப்பதிப்பில் இடம் பெற்ற ‘யாழ் நூல் குறித்து’ பத்துப்பக்க அளவில் மம்மது எழுதிய கட்டுரை இந்நூலில் உள்ளது. இதில் அடிகளாரின் ஆய்வுச் சிறப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன:
 ‘அவள் எங்கள் பாட்டுக்காரி’ என்ற கட்டுரையில் எம். எஸ். சுப்புலெட்சுமி குறித்து ஓர் இசைச் சித்திரத்தையே மம்மது அளித்துள்ளார்.
 அடுத்துள்ள ‘தமிழிசைப் பேரறிஞர் வீ.ப.கா. சுந்தரம்’ பற்றிய கட்டுரை தனித்துவமானது. தமது ஆசிரியருக்கான இசை அஞ்சலியாகவும் இக்கட்டுரை அமைந்துள்ளது. இக் கட்டுரையிலுள்ள சிந்திக்கத்தக்க வரிகள்:
இக்கட்டுரையில் வீ.ப.கா.சு பற்றி மம்மது குறிப்பிடும் ஓர் இடம் முக்கியமானது. “இயல்தமிழும், இசைத்தமிழும், ஆடல் தமிழும், ஒருங்கே தெரிந்த, புரிந்த, ஆய்ந்த மெய்யான முத்தமிழ்ப் பேரறிஞராகத் திகழ்ந்தவர் வீ.ப.கா.சு ஒருவரே .....”
 அடுத்து ‘தமிழிசையும், ஆபிரகாம் பண்டிதரும்’ என்ற தலைப்பில் அமைந்த ஒரு பேட்டி - நீண்ட பேட்டி ஒன்று 33 பக்கங்களில் அமைந்துள்ளது.
எழுத்தாளர் செயமோகனும், ஆய்வு அறிஞர் பேரா. வேதசகாயகுமாரும், இணைந்து எடுத்த பேட்டி. இது “சொல்புதிது” இதழில் வெளிவந்துள்ளது. ஆபிரகாம் பண்டிதர் குறித்து ஒரு முழுமையான காட்சிப்படம் போன்று பல்வேறு பதிவுகளைக் கொண்டுள்ளது இப்பேட்டி.
 “72 மேளகர்த்தா முறை – ஒரு மீள் பார்வை” என்ற கட்டுரை, ஆய்வுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மம்மதுவின் சிறந்ததோர் ஆய்வுக்கட்டுரை இடம்பெற்ற சிறப்புடையது இந்நூல்.
16 சுரமுறை, 72 மேளகர்த்தா முறை செயற்கையானது; போலியானது என்பதை இக்கட்டுரை தெரிவுப்படுத்துகின்றது.
 17.3.2005 அன்று கேரளப் பல்கலைக்கழகத்தில், இசை நிகழ்த்துதலுடன் அளிக்கப்பட்ட ‘சிலப்பதிகார இசை’ என்ற சிறப்பான செய்திகளைத் தாங்கிய கட்டுரை உள்ளது.
சிலப்பதிகாரத்தில் பண்டைய ஏழ்பெரும்பண்களும் வரும் இடங்களை நுட்பமாகத் தெரிவிக்கிறார் மம்மது.
 ‘தமிழ் இசையும் ஐரோப்பிய இசையும்’ என்ற ஒப்பாய்வுக் கட்டுரை இரண்டு இசைமுறைகளுக்குமான ஒற்றுமை, வேற்றுமைகளை, தெள்ளெனத் தெளிவுப்படுத்துகின்றது.
Just intonation, Equal Temperament, minor Scale, Tonic Shift, Improvisation, Chords, momophomic music, Poly Phonic music, Four by Four, Harmony என்பவை பற்றியெல்லாம் மம்மது இக்கட்டுரையில் பேசுகின்றார்.
 இழை இழையாய் இசைத்தமிழாய்
தென்திசை வெளியீடான இந்த இசை ஆய்வுநூல் 2008 -இல் வெளிவந்துள்ளது. 16 கட்டுரைகளையும் ஒரு நேர்காணலையும் கொண்டுள்ளது.
 இந்நூலுக்கு புதுவைப் பேரறிஞர் மறைதிரு இரா.திருமுருகன் ஓர் அணிந்துரை அளித்திருக்கின்றார். அவர் கூறுகிறார்:
“அடிப்படையான ஏழ்பெரும் பண்களும், ஐஞ்சிறு பண்களும் சிலப்பதிகாரத்தில் எங்கெங்கு எவ்வாறு குறிப்பிடப்பட்டுகின்றன என்பதை வியக்கத்தக்க வகையில் இவர் எடுத்துக்காட்டும் பாங்கு இவரை ஓர் ஆழ்ந்த இசையாய்வாளர் என்று இனம் காட்டுகிறது. .... எந்தச் சார்பும் இல்லாத நடுநிலையான இசையாய்வு இது”. மம்மதுவின் இசை ஆய்வில் பெரும் பங்களிப்பு செய்த இவருடைய நண்பர் பேரா.தொ.பரமசிவன் அவர்களுக்கு இந்நூல் காணிக்கையாக்கப்பட்டுள்ளது.
 கவிதாச் சரண் இதழில் வெளிவந்த ஒரு கட்டுரைக்கு பெரியவர் கவிதாச்சரண் அளித்த தலைப்பே இந்நூல் தலைப்பாகியுள்ளது.
‘ஒத்து’ என்ற சுருதி குறித்து ஆய்வு செய்த கட்டுரை ‘இழை இழையாய் இசைத்தமிழாய்’ என்ற கட்டுரை. இன்று ‘சுருதி’ என்ற வழங்கும் வடமொழிச் சொல்லுக்கு இணையான பழந்தமிழ்ச் சொற்கள் என ஒரு பட்டியல் தருகிறார். இலக்கியச் சான்றுகளை நிறையவே தருகின்றார். பக்தி இலக்கியங்களின் உரையாசிரியர்கள் ‘சுருதி’ என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கியதை சான்றுகளுடன் குறிப்பிடுகின்றார்.
 ‘நாட்டார் பாடலும், புலவர் செய்யுளும்’ என்ற கட்டுரையில் நாட்டார் பாடலிலிருந்து புலவர் செய்யுட் படைப்பு என்ற மரபு உருவானதை மிக நுட்பமாகக் கூறுகின்றார்.
தொல்காப்பியம் சங்க இலக்கியங்கள் முதற்கொண்டு இசைபாடல்கள் (நாட்டார் பாடல்கள்) பற்றிய பல்வேறு தகவல்களை இக்கட்டுரையில் தந்துள்ளார்.
 ‘செனாய்’ என்ற திமிரி நாகசுரத்தோற்றம் கொண்ட வடநாட்டு இசைக்கருவியில் உலகப்புகழ் பெற்ற இசை மேதை, பிசுமில்லாக்கான் பற்றிய ‘இதயத்தின் முகவரி சொன்னவர்’ என்றொரு கட்டுரை இதைச் சிறப்பித்தது,
“இசைக்கருவிகளால் புகழ் பெற்றவர்கள் பலர்; வீணை தனம்மாள்; வயலின் குன்னக்குடி; தவில் வலையபட்டி; தபலா சாகிர் உசேன். கலைஞர்களால் உன்னதமடைந்த வாத்தியங்களும் உண்டு. இராசரத்தினம் பிள்ளையால் நாகசரம் புகழடைந்தது, இரவி சங்கரால் சிதார் சிறப்புப் பெற்றது.
அதைப்போல “பிசுமில்லாகானா செனாய் உன்னதமடைந்தது“ என்று ஓவியம் தீட்டுகிறார் இசை மொழியால்.
 ‘இசையும் இசுலாமும்’ என்ற கட்டுரை அரபிய மண்ணின் இசை வளர்ந்த விதம், மற்றும் இசை பற்றிய இசுலாம் சமயப்பார்வை குறித்து விளக்குகின்றது. இக்கட்டுரையில் மம்மது தரும் செய்தி;
“இசை இசுலாமியத்திற்கு எதிரி அல்ல. இசுலாமும் இசைக்கு எதிரி அல்ல; ஆனால் சில இசுலாமியர்கள் இசைக்கு எதிராக இருந்தார்கள். அவர்களையும் மீறி இசுலாமிய நாடுகளில் இசை வளர்ந்தது”.
 ‘தமிழில் இசை இயல் நூல்கள்’ என்ற கட்டுரையில் தமிழில் வெளிப்பட்டுள்ள இசை இயல் நூல்களைப் பற்றி விவாதிக்கிறார். ஒவ்வொரு நூல் பற்றியும் சிறிய திறனாய்வும் உள்ளது.
“சுருதி, சுரம், சுரத்தானங்கள், இயக்கு(octave), தாளம், இசை ஆய்வு செய்தோர், பாடகர், கருவியாளர், கவிஞர், பழந்தமிழ் நூல்கள் தெரிவிக்கும் இசைச் செய்திகள் என்று தமிழிசையில் ஒட்டு மொத்தச் செய்திகளையும் ஒருங்கே கொண்ட மகத்தான கருவூலம் இக்கலைக்களஞ்சியம்” என்று இவருடைய இசை ஆசிரியரான வீ.ப.கா சுந்தரம் அவர்களின் தமிழசைக் கலைக்களஞ்சியம் (நான்கு தொகுதிகள்) பற்றி பதிவுச் செய்திருக்கின்றார்.
 ‘தொல்காப்பியத்திணைப் பண்கள்’ என்ற கட்டுரை இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் (CIIL) மற்றும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் 2006-இல் இணைந்து நடத்திய ‘தொல்காப்பியத்தில் இசைக்குறிப்புகள் குறித்த கருத்தரங்கில் வாசித்த கட்டுரை.
தொல்காப்பியமும், அதன் உரைகளும் தெரிவிக்கும் ‘யாழின் பகுதி’ பற்றியும், உரைகள் தெரிவிக்கும் பண்கள் குறித்தும் ஆய்வு செய்த கட்டுரை இது.
நிலமும், ஒழுக்கமும், திணையும், பண்ணும் அந்நில மலர்ப்பெயர்களையே பெற்று வழங்கும் செய்தியை மிக விரிவாகத் தக்க சான்றுகளுடன் பல்வேறு தரவுகளையும் தந்துள்ள நல்லதோர் ஆய்வுக்கட்டுரையாக தமிழ்ச்சூழலில் இக்கட்டுரை மதித்துப் போற்றப்படுகிறது.
 ‘சூஃபி நடனம்’ என்ற கட்டுரை தமிழ்ச் சூழலுக்குப் புதிய வரவு. சூஃபி என்பவர் இசுலாமியச் சமயச் சித்தர்கள். அவர்கள் ஆடும் ஒருவகை (செம்மா) நடனமே சூஃபி நடனம்.
“உலகையே ஆட்டுவிக்கும் ஆடவல்லான் இறைவனை ஆடல்வழியே அடையும் மார்க்கம் இது” என்கிறார் மம்மது. இதன் மூலவடிவமான சாலாலுதீன் ரூமி பற்றி பல்வேறு தகவல்களைக் கொட்டியுள்ளார்.
இந்தச் செம்மா நாட்டியம் குறித்து விரிவான செய்திகளை மம்மது இக்கட்டுரையில் தந்திருக்கின்றார். வடஇந்திய நாட்டிய மரபில் ‘சூஃபி கதக்’ என்ற புதிய வடிவமே தோன்றி வளர்ந்துள்ளதைத் தெரிவிக்கிறார். மன்சாரி சதுர்வேதி என்ற சூஃபிக் கலைஞரைத் தமிழ் வாசிப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
 அடுத்து வரும் கட்டுரை ‘சூஃபித்த்துவமும், இசையும்’ என்பது மம்மதுவின் இளநிலை ஆய்வுப்பட்டம். சூஃபியர் பற்றியது.
இக்கட்டுரையில் சூஃபித் தத்துவம், சூஃபிப் பிரிவுகள், சூஃபியர் இசை, அவர்களின் வாழ்முறை பற்றி பல்வேறு தகவல்களைத் தமிழுலகுக்கு அளித்துள்ளார். சூஃபியர் மதத்திற்குள்ளும், மதத்திற்கு வெளியிலும் கூட சமயப்பயணம் மேற்கொண்டவர்கள். இது குறித்து மம்மது தெரிவிக்கும் செய்திகளும், மேற்கோள்களும் வியப்பூட்டும் வண்ணம் உள்ளன.
 ‘உ.வே.சா – சிலப்பதிகார பதிப்பு குறித்து’ என்ற கட்டுரை, பல தமிழ் இதழ்கள் வெளியிடத் தயங்கிய கட்டுரை. ‘சிலப்பதிகாரப் பதிப்பு’ என்ற நிலையில் உ.வே.சா என்ற பிம்பம் பற்றியும், அவரது பதிப்புக் குறித்தும் ஆய்வு செய்த கட்டுரை.
சிலப்பதிகார முதன்மைப் பதிப்புகள் முதல் உ.வே.சா பதிப்பு வரையும், மற்றும் பாடபேதங்கள், உரைப்பதிப்பு வரை பல தகவல்கள் குவிந்து கிடக்கும் கட்டுரை இது. 13 பக்கங்கள் கொண்ட இக்கட்டுரையின் இறுதியில் மம்மது கூறுவது:
 ‘அமைதி ஆக்கத்தில் இசையின் பங்களிப்பு’ என்ற கட்டுரை மிகவும் சமூகம் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரை.
நேரடி வன்முறை மற்றும் மறைமுக வன்முறை பற்றி விளக்கம் தருகிறார். அக அமைதி, புறஅமைதி பற்றித் தெளிவுப்படுத்துகிறார். அக அமைதிக்கு இசையின் பங்களிப்பு குறித்து மம்மது தரும் செய்திகள் மிக முக்கியமானவை.
 “அம்ருதா” என்ற இதழுக்காக மம்மது அளித்த பேட்டி இந்நூலில் அமைந்துள்ளது.
கர்நாடக இசை மும்மூர்த்திகளுக்கு முன்பான தமிழிசை மும்மூர்த்திகள், தமிழ் இசை ஆதிமும்மூர்த்திகள் என்ற விளக்கம் தரும் நேர்காணல் பகுதி சுவையானது.
மொத்தத்தில் இந்நூலிலுள்ள அனேக கட்டுரைகள் புத்தம் புதுச் செய்திகளைத் தருகின்றன. எளிய நடையில் பொதுத்தள வாசிப்பாளருக்கும் விளங்கும் சரளமான நடையில் மம்மது இக்கட்டுரைகளைப் படைத்திருக்கின்றார்.
 தமிழிசைப் பேரகராதி (சொற்களஞ்சியம்)
இப்பேரகராதி 2010-ஆம் ஆண்டில் இன்னிசை அறக் கட்டளையால் வெளியிடப்பட்டது. 500 பக்கங்களில் 5000 தனித்தமிழ் இசைச் சொற்கள் கொண்ட சொற்களஞ்சியம். இதுவே தமிழில் வெளிவந்துள்ள முதல் இசை அகராதி. பாரதியார் விருது (தமிழக அரசின் விருது) பெற்றுத்தந்த நூல்.
இப்பேரகராதி மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், பேரா.திரு.அன்பழகன் மற்றும் திரு.உபயத்துல்லா ஆகியோரால் வெளியிடப்பட்டு சிறப்புரை வழங்கப்பட்டது. பாவலர் வைரமுத்து அவர்களால் பாராட்டுரை அளிக்கப்பட்டது.
 இப்பேரகராதிக்கு பேராசிரியர். முனைவர். கு.ஞானசம்பந்தன் அறிமுகவுரை ஒன்றை வழங்கியுள்ளார். அதில் இருந்து சிலச் செய்திகள்:
“சங்க புலவராகிய பொருந்தில் இளங்கீரனாரின் வரி,
“விரிப்பின் அகலும் தொகுப்பின் எஞ்சும்”
போன்று தமிழிசைப் பேரகராதி அமைந்துள்ளது எனக் கூறி பெருமைப்படுத்தியுள்ளார். பேராசிரியர், பல்துறை வித்தகர் முனைவர்.தொ.பரமசிவன் அவர்களின் விருப்பப்படி, அமெரிக்கவாழ் தமிழரான திருமிகு.பால் சி்.பாண்டியன் அவர்களின் பொருளுதவியினால், நா.மம்மதுவினால் உருவாக்கப்பட்ட பேரகராதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 இப்பேரகராதிக்கு பேராசிரியர். முனைவர். தொ.பரமசிவன் அணிந்துரை ஒன்றை வழங்கியுள்ளார். அதில் இருந்து சில குறிப்புகள்:
“தமிழிசைப் பேரகராதி ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் என்பதோடு அமையாது பொருள் விளக்கத்தோடும் போதிய எடுத்துக்காட்டுகளோடும் அமைவதால் இது ‘பேரகராதி’ எனப்பெயர் பெறுகிறது. ஓரளவு இசையார்வமும், இசையறிவும், இசையாராய்ச்சி உணர்வுடையவர்களும் பயன்படுத்த வேண்டிய அகராதி இது. மறைந்துபோனதாகக் கருதப்பெறும் தமிழிசைச் செல்வத்தை ‘இலக்கியத் தொல்லியல்’ ஆய்வு செய்து மீட்டெடுத்துத் தந்துள்ள அகராதி இது. சொற்பொருள் விளக்கம் தொல்காப்பியம் தொடங்கி நமது கால திரைப்படப் பாடல்கள் வரை நீண்டுள்ளது. தமிழில் போதிய பயிற்சி இல்லாதவர்களுக்காக அடிப்படைச் சொற்களுக்கு நிகரான ஆங்கிலச் சொற்களும் (எடு: Pitch, Mode) தரப்பட்டுள்ளன.
தொல்லியல் ஆய்வுக்கு மொகஞ்சதாரோ – அரப்பா போல தமிழிசை ஆய்வுக்கான புதையற்களம் சிலப்பதிகாரமும், அதற்கு அரும்பத உரைகாரரும், அடியார்க்கு நல்லாரும் வரைந்த உரைகளுமாம். எனவே இவ்விருவரும் இவ்வகராதி நூலில் பெரும்பாலும் மேற்கோள் அறிஞர்களாகக் காட்டப்பட்டுள்ளனர்.
தமிழிலக்கியம் பயிலும் மாணவர்க்கும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்க்கும் இந்த பேரகராதி தெளிவுகாட்டுகிறது.”
 இப்பேரகராதிக்கு பேராசிரியர்.முனைவர்.இ.அங்கயற்கண்ணி அணிந்துரை ஒன்றை வழங்கியுள்ளார். அதில் இருந்து சில செய்திகள்:
“தமிழிசைப் பேரகராதி (சொற்களஞ்சியம்) சுருங்கக்கூறி விளங்க வைக்கும் பாங்கில் சொற்களுக்குரிய பொருள் மிகச் சுருக்கமாகவும், உரிய ஆதாரங்களுடனும், அகராதியியல் அணுகுமுறையுடனும் சிறப்பாக வெளிக்கொணரப்பட்டுள்ளது. களஞ்சியம் என்ற நிலையில் இந்த அகராதியில் சொற்களுக்குரிய பொருள் எந்தெந்த நூல்களிலெல்லாம் காணப்படுகிறதோ, அவையெல்லாம் அரிதின் முயன்று தொகுக்கப்பட்டுள்ளன.”
 இப்பேரகராதிக்கு நா.மம்மது ஆசிரிய முகவுரை ஒன்றை வழங்கியுள்ளார். அதில் இருந்து சில கருத்துக்கள்:
“தமிழிசைப் பேரகராதி(சொற்களஞ்சியம்) தமிழ் இசை இயலின் கலைச்சொல் களஞ்சிய அகராதி.
இயற்றமிழ் மட்டுமே கற்று பன்னெடுங்காலமாக இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று மற்றிரு தமிழ்க் கூறுகளையும் மறந்து விட்டிருந்தோம். இதனால் வடமொழியிலும், தெலுங்கிலும் இசையியல் நூல்கள் வெளிவந்து தமிழிசை தேய்ந்து மாயும் நிலை ஏற்பட்டது. இப்பொழுது தமிழ் இசை இலக்கண விளக்கங்கள், வளமைகள், முறைகள் முதலிய மீள எழுந்து மறுமலர்ச்சி பெற்று வருகின்றன. தமிழிசைக் கலைக்களஞ்சியம் எழுதிய வீ.ப.கா.சுந்தரம் அவர்களே மூலத் தமிழ் இசைச் சொற்களைக் கண்டுபிடித்து வெளிக்கொணர்ந்த பெருமைக்குரியவர்.
 “அகரவரிசையிலுள்ள சொற்பொருள் விளக்கங்கள் சிறப்பாக அமைந்துள்ளது” என்று இப்பேரகராதிக் குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறை பேராசிரியர் முனைவர் தி.அருட்செல்வி குறிப்பிட்டுள்ளார்.
தமிழிசைப் பேரகராதி தமிழிசை பற்றிய சொற்களுக்கு விளக்கங்கள் தருவது மட்டும் அல்லாது தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, கல்லாடம், பெருங்கதை என மிகப் பழமையான நூற்களில் பதிவு பெற்றுள்ள இசைக் குறிப்புகள், பின்னர் அது தேவாரம், திருவாய்மொழியில் பதிவு பெற்று வளர்ந்துள்ளவைகளும் இடம்பெற்றுள்ளன. தமிழிசை வளர்ச்சிக்கான இலக்கணக் கூறுகளை தமிழ் இலக்கியங்கள் வழியாக எடுத்துக்காட்டி விளக்கி நிற்கின்றது இப்பேரகராதி.
 ஆதியிசையின் அதிர்வுகள்
2011-ஆம் ஆண்டு திருவண்ணாமலை வம்சி புக்ஸ் பதிப்பகத்தாரால் கொண்டுவரப்பட்ட நூல். 16 கட்டுரைகளைக் கொண்டது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க விருது, தமிழ்நாடு கலை இலக்கியம் பெருமன்ற விருது, எழுத்தாளர் சுஜாதா விருது என மூன்று விருதுகள் பெற்ற நூல்.
இந்த நூலிற்கு கவிஞர் கலாப்பிரியா ‘கடலின் நகல்கள்’ என்ற ஆழமிக்க கவித்துவமான அணிந்துரை ஒன்றை அளித்திருக்கிறார்.
 கோவையில் 2010-இல் நடந்த செம்மொழி மாநாட்டில் மம்மதுவால் வாசிக்கப்பட்ட ‘தொல்காப்பிய இசை’ என்ற கட்டுரை குறித்து கலாப்பிரியா எழுதுவது:
“நான் நினைக்கின்றேன் அங்கு வாசிக்கப்பட்டதிலேயே இது தான் உருப்படியான உழைப்புடன் கூடிய கட்டுரையாக இருக்கும்."
இந்நூலிலுள்ள ‘தொல்காப்பிய இசை’ என்ற கட்டுரை மிகவும் வரவேற்பு பெற்ற கட்டுரை.
“பண்” என்ற சொல்லுக்கு வேர்ச்சொல் “பள்” என்பது. பண் எனில் வேளாண்மை. பள், பள்ளேசல், பள்ளுப்பாட்டு முதலியன இதற்குச் சான்றுகள். இச்சொல்லிலிருந்து 21 சொற்களுக்கு மேல் தமிழில் உருவாகியுள்ளன.
தொல்காப்பியம் தவிர வேறு எங்கும் காணப்படாத ‘பண்ணத்தி’ என்ற சொல்லுக்கு நாட்டார் பாடல்(Folk Song) என்று உரையாசிரியர்கள் வழி ஆய்வு செய்து மம்மது முடிவு கூறுவது மிகச் சிறப்புடையது.
விளையாட்டு ஆயம் என்ற மகளிர் குழுவே இசை, ஆடலின் தோற்றுவாய் என்பது இக்கட்டுரையின் ஆய்வுமுடிவாக அமைந்துள்ளது.
 ‘கூத்தாட்டு’ என்றக் கட்டுரை தமிழர் கூத்து மரபு பற்றிய ஆய்வை முன்வைக்கிறது.
“பாடல் இன்றி, தாளத்திற்கு மட்டும் அல்லது சொற்கட்டுக்கு மட்டும் அபிநயம் செய்து ஆடுவது தமிழர் ஆடல் மரபில் உண்டு. இன்றைய பரதநாட்டியத்தின் “அலாரிப்பு” (புடபாஞ்சாலி) பாடல் இன்றி தாளத்திற்கு மட்டுமே ஆடப்படுகிறது.”
இது கேரளத்தின் ”நங்கையர் கூத்து” வடிவத்தை நினைவுப்படுத்துகிறது. இம்மரபை நாட்டிய சாஸ்திர நூல்வழி மெய்ப்பித்துள்ளார் மம்மது.
 “ பாணி’என்றொரு சொல்.... இசைச்சொல்“ என்றொரு கட்டுரை,
இதில் ‘பாணி’ என்ற சொல்லை விரிவாக ஆய்வுக்குட்படுத்துகிறார். ‘பாணி’ என்ற சொல்லிற்கு 24 பொருள் கூறுகிறார் மம்மது. இது பொதுவான பொருள் பற்றியது. அடுத்து ‘பாணி’ என்ற சொல்லிற்கு 15 இசைப்பொருள் கூறுகின்றார். உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைக்கும் கட்டுரை. இக்கட்டுரையில் மம்மது கூறுவது: ”தொன்மையான மொழிகளெல்லாம் சொல்வளம் மிக்கதாய் இருக்கும். ஒரு சொல்லுக்குப் பல்பொருளும், ஒரு பொருள் குறித்த பல் சொல்லும் இத்தகு பழமையான மொழிகளில் பல்கிப் பெருகி நிற்கும். இதுவே மொழிவளம், இதுவே செம்மொழி அடையாளங்களுள் ஒன்று. ”
 “காந்தார இசையமைத்து காரிகையார் பண்பாட” என்று பாடுகின்றார் திருஞானசம்பந்தர்(1:130:6). இங்கு சம்பந்தர் குறிப்பிடும் ‘காந்தரப்பண்’ தற்சமயம் எந்த இராகத்தைக் குறிக்கும் என்ற ஆய்வே இக்கட்டுரை.
இன்றைய ‘கர்நாடக தேவகாந்தாரி’ (ஆபேரி; இந்துஸ்தானி இசையின் பீம்ப்ளாஸ்) என்ற இராகமே பழைய ‘காந்தாரப்பண்’ என்று ஆய்வு செய்துள்ளார். இக்கட்டுரையில் மேலும் அவர் தரும் ஓர் ஆதாரம் சிந்தனைக்குரியது.
“கேரளக் கதகளியில் இப்பண் இன்றளவும் காந்தாரம் என்ற பெயரிலேயே பாடப்பட்டு வருகின்றது.”
 “தமிழர் பண் கண்ட முறை” என்ற கட்டுரையில் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தமிழர் இசைப் பாரம்பரியத்தில் ஏழு முறைகளில் தமிழர்கள் பண்களைக் கண்டு பிடித்துள்ளதாக மம்மது கூறுகின்றார்.
‘பண்பெயர்ப்பு முறை’ (Tonic Shift) என்ற முறை சிலப்பதிகாரத்தில் காட்டப்பட்டுள்ளதாக மம்மது கூறுவது வியப்பிற்குரியது. மேலும் ‘இணை’ மற்றும் ‘கிளை’ என்பனவற்றிற்கு ஆபிரகாம் பண்டிதர் ஆய்வு வழி நின்று இம்முறையில் ‘பண்’ ஆக்கும் முறையை மிகத் தெளிவாக மம்மது விளக்கிக்காட்டுகின்றார்.
 ‘திருமுறைக்கண்ட புராணமும், தேவாரப்பண்களும்’ என்ற கட்டுரை மிகுந்த தாக்கத்தைத் தமிழ்ச் சூழலில் எற்படுத்திய கட்டுரை.
14 பக்கங்கள் கொண்ட இந்த இசை ஆய்வுக் கட்டுரை சமய உலகம், இசை ஆய்வுத்தளம், சமூகக்களம் எனப் பல்வேறு மையங்களில் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்திய கட்டுரை. திருமுறைகண்ட புராணம், மூவர் தேவாரங்களும் அடைவுபெற்ற பண்கள், இன்று தேவாரம் பாடப்படும் இராகங்கள் என இம்மூன்றையும் ஒப்பாய்வு செய்கிறது இக்கட்டுரை.
 ‘தமிழிசைக்கு இசுலாமியர் பங்களிப்பு’ என்ற கட்டுரை இசுலாம் சமூகம் அளித்த இசைக்கொடை பற்றி விரிவாகக் கூறுகின்றது.
இசைப்பாடல்களின் ஆறு வகைகளை விரிவாக எடுத்துரைத்து அதில் இசுலாமியப் பெருமக்களின் பங்களிப்பு குறித்து எழுதியுள்ளார்.
படைப்போர், முனாசத், கிஸ்ஸா, நாமா, மஸ்-அலா, நொண்டி நாடகம், திருமண வாழ்த்து என எட்டு புத்திலக்கிய வடிவங்களைத் தமிழ் இசை உலகுக்கு அளித்தவர் இசுலாமியர். மேலும் 14 காப்பியங்களையும் படைத்துத் தந்துள்ளனர் எனவும் குறிப்பிடுகின்றார்.
 ‘காலந்தோறும் திரைப்பட இசையமைப்பு’ என்ற கட்டுரை திரைப்பட இசைக்குறித்து காலவாரியாக ஆய்வு செய்கின்றது.
1931-இல் இருந்து நம் திரைப்படங்கள் பேசவும், பாடவும் தொடங்கின. அதுமுதல் 2010 வரை நான்கு கால கட்டங்களில் திரை இசை அமைப்பு மாற்றம் பெற்ற சூழலை இக்கட்டுரையில் தக்க சான்றுகளுடன் மம்மது ஆய்வு செய்திருக்கின்றார்.
செவ்வியல் இசைக்காலம், மெல்லிசைக் காலம், நாட்டார் இசைக்காலம், கலப்பு இசைக்காலம் என நான்கு இசைத்தளங்களில் தமிழ்த் திரைப்பாடல்கள் பயணித்ததை மிக இனிதாகவே எழுதிச் செல்கிறார் மம்மது.
 ஷாஜி என்றொரு மகத்தான இசை எழுத்தாளர். அவரைப்பற்றிய மம்மதுவின் அவதானிப்பு:
“.......ஷாஜி இக்கட்டுரையை ஒரு கவிதையோட்டத்தோடு நகர்த்திச் செல்கிறார். அந்தக் கவிதை மண்வாசனையோடு நம்மைக் கவரும் போது நாம், அவர் பிறந்த கட்டப்பனை ஊருக்கே ஒரு பயணம் போய் விடுகிறோம். சில நேரங்களில் நாம் திரும்பி வராமலேயே இருக்க விரும்புகிறோம். ”
ஷாஜி என்ற கேரள மண்ணின் மைந்தரைத் தமிழகம் இனம் கண்டு தமிழனாக தமிழ் இசை எழுத்தாளனாக உட்செரித்துக் கொண்டது.
ஷாஜியின் ‘சொல்லில் அடங்காத இசை’, ‘இசையின் தனிமை’ என்ற இரண்டு நூல்களின் திறனாய்வாக அமைந்தது இக்கட்டுரை.
 இந்நூலில் இடம்பெற்ற ஓர் ஆங்கிலக் கட்டுரை Music and Mathematics பற்றியது.
கேரளத்து கோழிக்கோடு பல்கலைக்கழகம் திருச்சூர் சக்தன் தம்புரான் கல்லூரியில் நடத்திய நாட்டார் வழக்காற்றியல் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை:
இது இசைக்கணிதம் பற்றிய ஆய்வுக் கட்டுரை. பண்டைய தமிழ் இசை இலக்கணங்கள் இசைக்கணிதப்படி அமைந்துள்ளன என்பதை மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளார். Ratio, Frequency, Fifth note, Circle என்பவை குறித்து தென்னக இசையாம் தமிழிசையுடன பொருத்தி ஆய்வு செய்த அலாதியான ஆய்வுக் கட்டுரை இது.
 இந்நூலில் இரண்டு நேர்க்காணல்கள் உள்ளன. நம் இசைக்கும், மேலை இசைக்குமான ஒப்புமை பற்றிய முக்கியத் தகவல்கள் ஒரு கட்டுரையில் உள்ளன.
பிறிதொரு நேர்க்காணலில் ‘வேண்டும் மதம் கடந்த இசை’ என்பதை மிக வலியுறுத்திக் கூறுகின்றார். ஒரு கேள்விக்கு இசை என்பதற்கான விளக்கம் தருகின்றார்.
‘கர்நாடக இசை’ பெயர்க்காரணம் கூறுகின்ற நெறிமுறை சிறப்பாக உள்ளது. இசுலாமியர், கிறித்தவர் போன்ற சமூகத்தினர் ‘கர்நாடக இசை’ கற்றுக் கொள்ள முன் வராதது ஏன் என்பதற்கு தக்க விளக்கம் தந்துள்ளார். இசையைச் சமயத்தாடு பின்னிப் பிணைத்திருப்பதே அதன் காரணம் என்பதற்குச் தக்க சான்றளிக்கின்றார். இது பற்றி நேர்க்காணலில் ஒரிடத்தில் அவர் கூறுவது:
“நமது இசையிலிருந்து பக்தி ரசத்தை பிரிக்க முடியாது என்று சொல்வது கூட அதன் வளர்ச்சியைத் தடுக்கும். மற்ற சமயத்தவரை உள்ளே வர அனுமதிக்காத மனோபாவத்தின் வெளிப்பாடுதான் இது”.
 தமிழிசை வரலாறு
2012-ஆம் ஆண்டில் சென்னை, நாதன் பதிப்பகத்தால் கொண்டுவரப்பட்ட நூல் இது.
மொத்தம் 47 தலைப்புகள் கொண்ட இந்நூல் மூன்று பகுதிகளால் ஆனது. முதலாம் பகுதி தமிழிசையின் ஆதாரப் பண்களாகிய ஏழ்பெரும்பாலை மற்றும் ஐந்திசைப் பண்கள் அடங்கியது. இரண்டாம் பகுதி தமிழின் இசைகருவிகள் குறித்தது. மூன்றாம் பகுதி தமிழர் தம் இசை மரபை மீட்டெடுத்த தமிழிசைச் சான்றோர் குறித்து பதிவு செய்வது.
பண்டைய பண்ணிற்குரிய இணையான இக்கால இராகத்தை குறிப்பிட்டு, அப்பண்ணில் அமைந்த குறிப்பிட்ட சில திரைப்படப் பாடல்களையும் தந்துள்ளார். எடுத்துக்காட்டாக விளரிப்பாலை என்பது நமது தற்கால தோடிப்பண் என்றும், தோடிப் பண்ணில் அமைந்த பாடலில் ஒன்றான ‘கங்கைக்கரை மனன்னடி - சேசுதாஸ்’ குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மூன்றும் மதுரை வானொலியில் உரைச்சித்திரத் தொடர்களாக அமைக்கப்பெற்று ஒலிபரப்பாகி நேயர்களின் பாராட்டைப் பெற்றவை.
 ஆபிரகாம் பண்டிதர்
2013 - ஆம் ஆண்டு, புதுதில்லி சாகித்ய அகாதமியின் பதிப்பில் ‘இந்திய இலக்கிய சிற்பிகள்’ வரிசைப் பட்டியலில் ஆபிரகாம் பண்டிதரைக் குறித்ததான நூல்.
 இந்நூலுக்கு சிற்பி, பாலசுப்பிரமணியம் அணிந்துரை ஒன்றை அளித்திருக்கிறார். அவர் கூறுவது,
“நூலாசிரியர் நா. மம்மது ஆழ்ந்த ஆய்வு நுட்பங்களில் வல்லவர். நுட்ப இசை நலங்கள் செறிந்த நூல்களின் ஆசிரியர் என்றும் ஆபிரகாம் பண்டிதர் தமிழிசையின் மூல வேர்களைக் கண்டறிந்த முன்னோடியாக திதழ்ந்தவர் எனவும் குறிப்பிடுகின்றார்.
இந்நூலிலிருந்து பண்டிதரைக் குறித்ததான சில செய்திகள்:
கி.பி. 1859ஆம் ஆண்டு ஆகஸ்டு இரண்டாம் நாள் பண்டிதர் திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலத்திற்கு அருகிலுள்ள சாம்பவார் வடகரையில் பிறந்து, சுரண்டையில் கல்வி பெற்று, திண்டுக்கல்லில் ஆசிரிய பயிற்சி பெற்று அங்கேயே ஆசிரியப் பணியை மேற்கொண்டவர்.
சிறுவயதிலிருந்தே இசை மீதான ஆர்வம் கொண்ட பண்டிதர் திண்டுக்கல்லில் சடையாண்டி பத்தரிடம் வயலின் முறைப்படி கற்றார். தஞ்சைக்கு தன் துணைவியாரான ஞானவடிவுடன் சென்று ஆசிரியப் பணியை மேற்கொண்டதோடு, தஞ்சை இராமசுவாமி கோவிலில் மிகச் சிறந்த நாதசுரக் கலைஞர்களிடம் இசைக் கற்று கொண்டார்.
பல்துறை அறிஞர்
தமிழ் ஆசிரியப்பணி, மருத்துவம், வேளாண்மை, இசை, ஓவியம், புகைப்படக்கலை, அச்சுக்கலை, சோதிடக் கலை, இசைக் கதை சொற்பொழிவு (கதாகாலட்சேபம்) என்று எண்ணற்ற துறைகளில் தேர்ந்த பல்துறை அறிஞராக பண்டிதர் திகழ்ந்துள்ளார். ஒரு நூற்றாண்டிற்கு முன்பு நம்மிடையே வாழ்ந்த இத்தவப் புதல்வரைத் தமிழகம் மறந்து விட்டது.
இசை ஆய்வுக்காக 27.5.1912-இல் தஞ்சை சங்கீத வித்யா மகாஜன சங்கத்தைத் தொடங்குகிறார். 1912 முதல் 1917 முடிய ஏழு இசை மாநாடுகளைத் தம் சொந்தச் செலவிலேயே நடத்துகிறார்.
1916 - இல் பரோடாவில் ஐந்து நாட்கள் (மார்ச் 20 முதல் 24 முடிய ) நடந்த அகில இந்திய இசை மாநாட்டில் பண்டிதர் தமது பெண்களான மரகதவல்லி, கனகவல்லியாருடன் கலந்து கொள்கிறார். வீணை தனம்மாள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார். தாம் புதிதாக அமைத்துக்கொண்ட சுருதி வீணையில் தம் மக்களை வாசிக்கச் செய்து அனைவரையும் மலைக்க வைக்கிறார். தென்னக இசை என்றும், கர்நாடக இசை என்றும் இந்துஸ்தானி இசை என்றும் இக்காலத்தில் வழங்கப்படும் இசையானது தொன்மையான தமிழிசைதான் என்பதையும், ஓர் இயக்கில் 24 சுருதிகள் அமைந்துள்ள நுட்பத்தையும் இசை மாநாட்டில் கலந்து கொண்டோர் ஏற்றுக் கொள்ளும் வகையில் சொற் பெருக்கு, இசைப் பெருக்கு ஆற்றுகின்றார்.
வாழ்நாள் முழுவதும் தாம் செய்த ஆய்வின் முடிவாக பண்டிதர் 1917-இல் தம் குருவின் நினைவாக அவருடைய பெயராலேயே “கருணாமிர்த சாகரம்” எனும் தமிழ் இசை ஆய்வு நூலினை வெளிக்கொணர்கிறார். சாகரம் எனற பெயருக்கு ஏற்ப கடல் போன்ற நூல். 1346 பக்கங்களைக் கொண்ட இசை ஆய்வுப் பெருநூல் இது. ‘A Book on Suruthi’ என்று ஆங்கிலத்திலும் இந்நூலை எழுதியுள்ளார். பழங்கதைகள் நமக்குள்ளே பேசாமல் தமிழர் வளங்களையெல்லாம் வெளி உலகிற்குக் காட்ட ஆங்கிலத்தில் நூல் எழுத வேண்டும் என்று அன்றே சரியாக உணர்ந்து கொண்டவர் பண்டிதரே. நான்கு பெரும் பகுதிகளைக் கொண்டது இச்சாகர நூல்.
2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் கண்ட பண் உருவாகும் ஒருமுறை வட்டப்பாலை என்பது சிலப்பதிகார உரை ஆசரியர்கள் மேற்கோள் சூத்திரம் மூலம் அதை விளக்க முனைகின்றனர். பண்டிதர் காலம் வரை அது இசை உலகிற்குப் புரியாத புதிராகவே இருந்துள்ளது.
வட்டப்பாலை (Circular Representation) பண்பெயர்ப்பு, இணை, கிளை, பகை, நட்பு என்ற பொருந்து சுரங்கள் (Hormonics) பற்றி எல்லாம் முதன் முதலில் நமக்கு விளக்கிக் கூறியவர் பண்டிதரே.
கருணாமிர்த சாகர நூலின் முதல் பகுதியில், அழிந்துபட்ட தமிழகத்தின் தொன்மை வரலாறு, தமிழ் மொழியின் தொன்மை, இந்திய இசை, தமிழிசை பற்றி மேலை நாட்டினருக்கு எழுதிய கட்டுரை, 103 பண்கள், 72 மேளகர்த்தா, அவர் அமைத்த தஞ்சை சங்கீத வித்யா மகாஜன சங்கம் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.
இரண்டாம் பகுதியில், சுருதி முறைகளையும் (பெரும் பகுதி இதுவே) சுரங்களையும் பண்களையும் உருவாக்கும் பண்டைய இணை, கிளை முறைகளையும் பற்றி மிக விரிவாக ஒப்பாய்வு செய்திருக்கிறார்.
நூலின் மையமானது அதன் மூன்றாம் பகுதி. நாற்பெரும் பண், ஏழ்பெரும் பாலை, வட்டப்பாலை முறை, அக, புற., அருகு, பெருகு, என்ற 103 பண்கண்ட முறை என்று பண்டைய இலக்கியங்கள், சிலம்பு அதன் உரைகள் மூலமாக ஆய்வு செய்து முதன் முதல் தமிழிசை ஆய்வைத் தொடங்கி வைத்த முக்கியமான பகுதி இதுவே.
நான்காம் பகுதியில் தமிழிசைப் பண்களில் வரும் நுட்பச் சுருதிகள், முத்தமிழையும் வளர்த்த பாண்டிய மன்னர்கள், இந்துஸ்தானி இசை ஆய்வு முதல் வல்லுநர் வி. என். பத்கண்டே மற்றும் இ.கிளமென்ட்ஸ் என்ற இசை ஆய்வு மேதை (இவர் ஐ.சி.எஸ் அதிகாரியும் கூட) ஆகியோரின் கடிதங்களுக்குப் பதில் என இப்பகுதி அமைந்துள்ளது.
இந்நூலின் இரண்டாம் தொகுதிக்கான குறிப்புகளையும் கைப்பிரதிகளையும் எடுத்திருந்த காலத்தில் பண்டிதர் 31.8.1919 இல் திடீரென்று இயற்கை எய்தினார். 1946-இல் பண்டிதரின் மூத்த மகன் சுந்தர பாண்டியன், கருணாமிர்த சாகரத்தின் இரண்டாம் தொகுதியை வெளிக் கொணாந்தவர். இவரே பண்டிதரின் கீர்த்தனைப் பாடல்கள் 96 -யும் 1934- இல் வெளியிட்டுள்ளார்.


நா.மம்மதுவின் ஆராய்ச்சிப் பணிகள்
“யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக.” என்ற நோக்கோடு தமிழிசை ஆராய்ச்சிப் பணிகளை அயராது மேற்கொள்ளும் நா.மம்மதுவின் தமிழிசைச் சொற்பொழிவும், இசை நிகழ்த்தும், ஆய்வுக்கட்டுரைப் படைப்புகளும், வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், குறிப்பிட்ட சில ஆய்வுக்கட்டுரைகள் இங்கே:
 கோவையில் 2010-இல் நடந்த செம்மொழி மாநாட்டில் மம்மதுவால் “தொல்காப்பிய இசை (ஆயம், ஓரை, கெடவரல், பண்ணை)“ என்ற கட்டுரை வாசிக்கப்பட்டது.
ஆயம்
ஆயம் என்ற சொல் குழு, கூட்டம் என்பதைக்குறிப்பது.
ஆ = பசு: ஆயம் – பசுநிறை (மாட்டுப்பண்ணை)
ஆயத்தார் - தோழியர், குழுவினர் (ஆயத்தார் சொல் - சிலம்பு)
ஆயமே… மாதர் கூட்டம் (சூடா.11:1)
ஆயம் - தோழி
ஓரை,பொய்தல்,இருளை,ஆயம்,தோழி,சேடி,இணங்கு,பாங்கி(திவா:329)
இந்த ஆயமே (பெண்டிர்குழு, ஆய்ச்சியர்) குழுவாக நின்று சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில், குரவைப்பாட்டுப்பாடி, குரவைக் கூத்து (நாடகம்) ஆடுகின்றனர்.
ஆயம்’ என்ற சொல் சங்க இலக்கியங்களில் 97 இடங்களில் ஆளப் பெற்றுள்ளது. (பார்க்க.ச.இ.சொ. பக்.59)
ஓரை
தமிழ் மொழியின் நெடும் பரப்பில் ‘ஓரை’ என்ற சொல் அறுவகையில் பொருள்படும்:
1. - 5 நாழிகை நேரம் : 2மணி நேரம் : 30 பாகை (degree)
2 . - இராசி (Sign of the Zodiac)
“ஆறிருமதியினும்” (சிலப். 26:25)
என்று ‘மதி’ என்ற சொல்லால் ஓரை (இராசி)யை இளங்கோ அடிகள் குறிப்பிடுகின்றார்.
“மறைந்த ஒழுக்கத்து ஒரையும் நாளும்” (தொல். களவி.45)
ஓரை என்பதற்கு ‘இராசி’ என்று நச்சரும், ‘முகுர்த்தம்’ என்று பூரணரும் உரைகாண்கின்றனர்.
3. – மகளிர் விளையாட்டு (பாவை விளையாட்டு)
ஓரைப் பாவையைக் கொண்டு விளையாடும் (கலித்.81:9 நச்சர்)
ஓரைஆயத்து ஓண்டொடி மகளிர் (புறம்.176:1)
ஓரைஆயம் கூறக்கேட்டும் (குறுந்.48)
விளையாட்டு ஆயமொடு ஓரை ஆடாது (நற். 68:1)
ஓரை மகளிரும் ஊர் எய்தினரே (நற்.398:5)
தருமணல்…ஓரை ஆயமும் (நற்.143:2-3)
கோதை ஆயமொடு ஓரை தழீஇ (அகம்.49:16)
கூட்டமும்,மகளிர் விளையாட்டும் இராசி… ஓரைக்கிளவி கூறும் (திவா.2121)
தொடலை, கிரீடையே, கேளி, ஓரை… ஆடன் மெச்சல் (சூடா.9)
4. - குரவை ஆடல்
சிலப்பதிகார ஆயச்சியர் குரவையில் பன்னிரு ஓரைகளில் 7 ஓரைகளின் மேல் 7 மகளிரை நிறுத்தி ஆய்ச்சியர் ’குரவை ஆடல்’ ஆடுகின்றனர்.
மகளிரீட்டமு மற்றவராடலு - மவர் விளையாடுங்
களமு மிராசியு - மோரிடைச் சொல்லுங்குரவை (பிங்க.3255)
5. - மகளிர் ஆடும்களம்
பைந்தொடிமகளிர் ஆடும்களம் ஓரை என்ப (சூடா.7: 61)
6.- தோழி, சேடி, பாங்கி
ஓரை,பொய்தல்,இருளை,ஆயம்,தோழி,சேடி,இணங்கு,பாங்கி (திவா.329)
‘ஓரை’ என்ற சொல்லாட்சி சங்க இலக்கியங்களில் 13 இடங்களில் வழக்குப்பெற்றுள்ளது. (பார்க்க.ச.இ.சொ.பக்.59)
கெடவரல்
“கெடவரல், பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு” (தொல்.உரி.21)
‘கெடவரல் என்றசொல்லும், பண்ணை என்ற சொல்லும் விளையாட்டு என்பதன் பொருள்படும்’ (தெய்வச் சிலையார்)
கெடவரலாயம் என்றக்கால் விளையாட்டு ஆயம் என்பதாம் (இளம்.)
எனவே கெடவரல் என்பது விளையாட்டு என்றே பொருள் படுகின்றது.
பண்ணை
பண்ணை என்பது குழு, கூட்டம் என்று பொருள் படுவது.
பாணர், பாணிச்சி, பணை (தண்பணை-மருதநிலம்), பண்ணை. பண்ணத்தி, பண்பு, பண்பாடு, பண்படுத்தல்(நிலத்தைப்பண்படுத்துதல், இசையமைத்தல்) பண்ணியல் (ஆறுசுரப்பண்), பண்ணுமை (இசையின் இனிமை) பண்ணவர்(பாணர்), பண்ணியம் (இசைக்கருவி)
பண்டர் (பாணர்), பண்டாரம், பண்ணல் (யாழ்த்தொழில் எட்டனுள் ஒன்று), பணி (தோற்கருவி), பணு (உருப்படி, இசைப்பாடல்)
எனவே ‘பண்’ என்ற தொன்மையான சொல் மருதநில உருவாக்க காலத்தில் வளம்பலபெற்று விரிவாக்கம் அடைந்தது என்று கொள்ளலாம்.
இப் ‘பண்ணை’ யிலிருந்து உருவான பாடல் வகைகளும், இலக்கிய வகைகளும் ஏராளம். பள் (பள்ளு, பள்ளேசல்), குறவஞ்சி முதலிய நாடகவகைகளும் ‘பண்ணை’யிலிருந்தே தோன்றியுள்ளன. மேலும் வகை வகையான விழாப்பாடல், சடங்குப்பாடல், பொழுது போக்குப்பாடல், தொழிற்பாடல் என்று காலமெல்லாம் இப்‘பண்ணை’யிலிருந்தே விரிவு பெறுகின்றது இந்நாட்டார் இசை.
சிலம்பின் முதல் காதையில் மங்கலமடந்தையர் பாடும் மங்கல வாழ்த்துப்பாடல் பண்டைய ‘பண்ணை’யின் வழிவந்தது. சிலப்பதிகார ஆய்ச்சியர்குரவை, குன்றக்குரவை, வேட்டுவவரி என்பது ’பண்ணை’யே. பெண்டிர்பாடி ஆடும் வள்ளைப்பாட்டு, அம்மானைவரி, கந்துகவரி, ஊசல்வரி முதலிய இசைப்பாடலுடன் கூடிய ஆடல் இம்மரபிலிருந்து மேலெழுந்ததே.
நாட்டார் இசையை வானளவு பாடிய அருள்மணி வாசகரின் திருஅம்மானை, திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தௌ்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருத்தோள் நோக்கம், திருப்பொன்னூசல் முதலிய இலக்கியங்களுக்குத் தோற்றுவாயாக அமைந்தது இப் “பண்ணை”யே.
சங்கரதாசுசாமிகளின் வள்ளி திருமண நாடகத்தில் வள்ளி தம் ஆயர்குழாத்துடன் பாடுவது இப்பண்ணைப்பாடலே.
‘சாந்துப்பொட்டு தள தளங்க’ என்றுபாடுவதும்,
‘முத்துமுத்தா பச்சரிசி குத்தத்தா வேணும்” என்றுபாடுவதும்
‘வாராய் என் தோழி வாராயோ’ என்றுபாடுவதும்
இப்பண்ணைப்பாடலே.
தொல்காப்பியர் பதிவு செய்த, ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நமது நாட்டார் இசைமரபு இன்றும் தொடர்ச்சி பெறுவதைக் காட்டுகின்றது.
 ‘புதிய புத்தகம் பேசுது’ எனும் திங்கள் இதழில் ‘என் போதி மரங்கள்’ என்ற தலைப்பில் வெளிவந்த மம்மதுவின் கட்டுரை:
இதில் மம்மது அவர்களின் சிறுவயது முதல் தமிழிசைப் பேரகராதி எழுதி முடித்த காலம் வரையிலான அனுபவங்களை விளக்குவதாக அமைந்துள்ளது.
 செப்டம்பர் 2014 ‘கணையாழி’ இதழில் வெளிவந்த மம்மதுவின் கட்டுரை ‘குறிஞ்சித் திணைப்பண்கள்’.
இதில் சடங்கு பண், மக்கள் பண் விறலியர்/ பாணர்பண் அகவன் மகளின் பண் குறித்ததான விளக்கங்கள் படைத்துள்ளார்.
அகவன் மகளின் பண்
துத்தம் குரலாத் தொன்முறை இயற்கையின்
அம்தீம் குறிஞ்சி அகவன் மகளிர்......” சிலப்( 28:3135)
என்று அகவன் மகளிர் என்ற கட்டுவிச்சி ‘குறிஞ்சிப் பண்’ பாடிய வரலாற்றைச் சிலப்பதிகாரம் சுட்டிக்காட்டுகின்றது. பண்பெயர்ப்புப் பற்றிக் கூறும் இந்த அடிகள் குறிஞ்சிப் பண் என்பது இன்றைய நடபயிரவிப் பண்தான் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
குறிஞ்சித்திணைப் பண்கள்
குறிஞ்சி, படுமலைப்பாலை, யாமையாழ் என்றெல்லாம் பண்டை நாளில் பெயர் பெற்று இன்று நடபயிரவி எனப் பெயர் பெற்றுள்ள இப்பண்ணின் திறப்பண்களாவன:
(திறப்பண்; கிளைப்பண்; ஜன்யராகம்)
1.செந்திறம் (மத்யமாவதி) (குறிஞ்சி நிலத்தின் தலையாய சிறுபண்)
2. கௌசிகம் (இன்றைய பயிரவி) , 3.சயந்த-ஸ்ரீ, 4.கமலா தரங்கிணி
5. ஆனந்த பைரவி, 6. நாககாந்தாரி, 7. புவனகாந்தாரி, 8. மாஞ்சி
9.நாயகி, 10. பூரணசட்சம், 11. சாரமதி, 12. கண்டாரவம் (கண்டா),
13.கன்னடா 14. ரதி பதிப்பிரியா, 15. லதாமஞ்சரி, 16. மகதி, 17. மார்க்க
இந்தோளம், 18. தேவக்கிரியா, 19. கோபிகா , 20. கனக வசந்தம்
இவையாவும் குறிஞ்சித்திணைப் பண்கள்.
குறிஞ்சிப் பெரும் பண் என்ற நடபயிரவி முதற்கொண்டு மேற்குறித்த கிளைப் பண்கள் இருபதுடன், இதிற்கண்ட இருபத்தொரு பண்களும் இன்றளவும் பாடப்படுகின்றன.
 நா.மம்மதுவின் ‘ஆதி இசையின் அதிர்வுகள்’ நூலில் வெளியான “காலந்தோறும் திரைப்பட இசையமைப்பு” என்ற கட்டுரை:
எல்லோரையும் சென்றடையும் தன்மையுடைய, மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மையுடைய, நம் இசை மரபு அதன் எல்லா வகைமைகளுடனும் உயிர்ப்போடு இருப்பது திரை இசையில் மட்டுமே. இசையமைத்தல், இசைப்புணர்ப்பு, நல்லிசை நிறுத்தல் என்றெல்லாம் நம் பழந்தமிழ் இலக்கியங்களும் உரையாசிரியர்களும் பாடலுக்கு இசை அமைப்பது குறித்து நிறையவே பேசியுள்ளனர். மெட்டமைத்தல், டியூன் போடுதல் என்று எளிமையான வழக்கு வடிவத்தில் தற்போது இதைப்பேசுகிறோம். ஒரு தாளத்தில் இசையமைக்கப்பட்டது சந்தம் என்றும், பலதாளங்களில் இசை அமைத்தல் பந்தம் (பிரபந்தம்) என்றும் இசையமைத்தலில் தாளத்தின் பங்கு பற்றி சிலப்பதிகார உரைகாரர் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றார்.
இசைந்த பாடலின் இசையுடன் படுத்து ...சிலப்பதிகாரம்
நல் இசை நிறுத்தல் வேண்டினும் ... புறநானூறு
நல் இசை நிறுத்த நயம் வருபனுவல் ...அகநானூறு
செல்லா நல்இசை நிறுத்த ...அகநானூறு
பரவினர் உரையொடு பண்ணிய இசையினர் ...பரிபாடல்
காந்தார இசையமைத்து காரிகையார் பண்பாட...சம்பந்தர் தேவாரம்
என்றெல்லாம் பாடலுக்கு இசையமைப்பது பற்றி நம் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. 2000 ஆண்டுகள் தொன்மை யுடையதாகக் கருதப்படும் பரிபாடல் என்ற இலக்கியப் பனுவலுக்கு இசையமைத்த செய்தி கிடைக்கின்றது. பாடலை ஒருவர் எழுத ஏனையோர் பாலை (அரிகாம்போதி) நோதிறம் (இந்தளம்) காந்தாரம் (கர்நாடக தேவகாந்தாரி) என்ற பண்களில் இசையமைத்தது குறிப்பிடப்படுகின்றது.
தாளம், பண் (இராகம்), சுரம், தானம் மற்றும் தாள சுரஎடுப்பு (பாடல் தொடக்கம்), நடை முதலிய இசை நிலைகள் பாடலுக்கு இசையமைப்பதில் முதற்பங்கு வகிக்கின்றன. இவ்வாறு உருவாக்கம் செய்வதில்தான் பாடலுக்கு ஓர் இசைவடிவு கிடைக்கின்றது. இதையே நம் முன்னோர் ‘இசை உரு’ என்றனர். தமிழ் இசைச் சூழலில் பாடலுக்கு இசையமைப்பது ஐந்து தளங்களில் இயங்குகின்றது.
1. தாளத்திற்கு முதன்மை தரும் நாட்டார் வடிவ இசை.
2. பண்ணிற்கு (இராகம்) முதன்மை தரும் செவ்வியல் வடிவ இசை.
3. மெல்லிசை வடிவம்.
4. பிற மெட்டு வடிவ இசை.
5. கலப்பிசை வடிவம்.
1931 முதல் நம் திரைப்படங்கள் பேசவும் பாடவும் தொடங்கின. எனவே பேசம் படங்கள் என்றும், திரை அரங்குகள் டாக்கீஸ் என்றும் பெயர்பெற்றன. இந்த கால கட்டங்களில் நம் திரைப்படப்பாடல்கள் எவ்வாறெல்லாம் இசையமைக்கப்பட்டன என்பதைப் பார்ப்போம்.
ஒரு முறைக்காக தமிழ்த்திரை இசை வரலாற்றை நான்கு காலகட்டங்களாகப் பிரித்துக் கொள்ளலாம்.
1. ஜி.இராமனாதன் காலம்
2. எம்.எஸ். விசுவநாதன் இராமமூர்த்தி காலம்
3. இளையராசா காலம்
4. ஏ.ஆர். இரகுமான் காலம் என்பதாக.
1. ஜி. இராமநாதனின் காலகட்டம் – பண் இசைக்காலம் (இராக சங்கீதகாலம்)
திரை இசையில் யாரையும் மறக்கலாம்(?); ஆனால் ஜி.இராமநாதன் என்ற மன்னரை மறக்கவே முடியாது. மறக்கவே கூடாது. எனவே இந்த காலகட்டத்தை ஜி. இராமநாதன் காலம் என்று வகைப்படுத்தலாம். தமிழ்த் திரைப்படத்தின் தொடக்க காலத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த புராண நாடகங்கள் திரைப்படங்களாகத் தயாரிக்கப்ட்டன. எனவே தான் நம் திரைப்படங்கள் பல இன்னும் நாடகங்களாகவே உள்ளன. (நாடகம், திரைப்படம் இரண்டும் மாறுபட்ட வெவ்வேறு கலைவடிவங்கள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்). அவற்றில் நடித்த கொன்னப் பாகவதர் எம். கே தியாகராச பாகவதர், பி.யு.சின்னப்பா, கே.ஆர்.இராமசுவாமி கே.பி.சுந்தராம்பாள், எஸ்.டி.சுப்பு லட்சுமி போன்ற நாடக நடிகர்களே திரைப்படங்களில் தொடக்க காலத்தில் நடிக்க வைக்கப்பட்டனர். இதற்குக் காரணம் இவர்கள் நல்ல பாடகர்கள் என்பதே. இவர்கள் மிகச்சிறந்த செவ்வியல் (பண்ணிசை) இசைக்காரர்கள். மறுபுறம் பாடல் எழுதிய பாபநாசம் சிவன் மற்றும் சிறந்த அரங்கிசைப் பாடகரான ஜி.என்.பி போன்றோர் மற்றும் தொடக்க கால இசையமைப்பாளர் பலரும் செவ்வியல் (கர்னாடக) இசையையே முதன்மையான இசையாக மேற்கொண்டவர்கள். எனவே இவர்கள் தங்கள் பாடல்களுக்கு பண்(இராகம்) என்பதை முதன்மைப் படுத்தினார்கள். பாடலின் எழுத்து, சொல், பொருள், என்பதைவிட இந்தக் காலகட்டப் பாடல்களில் பண் என்பதே பாட்டில் துருத்திக் கொண்டிருக்கும். தூய்மையாக ‘பண்ணில்’ இசையமைப்பதை இவர்கள் ஒரு விரதமாகவே கைக்கொண்டிருந்தார்கள்.
நமது இசையின், வளமையின், தொன்மையின் ஒரு கூறான ‘பண்’ என்பதை மிகச் சிறப்பாகப் பதிவு செய்த பெரியோர்கள் இவர்கள் என்பதையும் நாம் நன்றியுடன் நினைவில் கொள்ள வேண்டும். சாமானிய இரசிகனுக்கு இந்தக் கறாரான செவ்வியல் இசை அதாவது சுருதி, சுரம், ஸ்தாயி, பண் முதலியன; முக்கியத்துவம் பெறும் பண் -இலக்கணப்பாடல் என்பது ஒரு தொந்தரவு தரும் சாமாச்சாரமாகவே இருந்து வந்துள்ளது. இந்தப்பண் இசையில்/கர்நாடக இசையில் ஒரு திகட்டுதல் தொடங்கிய காலகட்டம் அது.
2. எம்.எஸ்.விஸ்வநாதன் – இராமமூர்த்தி காலகட்டம் – மெல்லிசைக் காலம்
திரைப்பட இசையமைப்பில் இரண்டாம் காலகட்டம் மெல்லிசையோடு தொடங்குகின்றது. பண்களை எளிமையாக்கி மென்மையாக அவற்றைப் பாடலில் பொருத்தி இசை வழங்கிய முறையை மேற்கொண்டதால் இவர்கள் இருவரும் ‘மெல்லிசை மன்னர்கள்’ என்றே புகழப்பட்டார்கள். இவர்களின் என்றைக்குமான பாடலான “மலர்ந்தும் மலராத” என்ற பாடலிலும் இடம்பெற்ற பண் ஆனந்தபைரவியா, கரகரப்பிரியாவா என்ற சர்ச்சை உண்டு. இதற்கு விடை என்று பார்த்தால் கரகரப்பிரியாவில் பிறந்த பண் ஆனந்தபைரவி. இரண்டு பண்ணும் சேர்ந்து மெல்லிசையாக உருப்பெற்றதே இப்பாடல்கள். இவ்வாறு பல பண்களை இந்த மன்னர்கள் மெல்லிசையாக்கி நம்மை இசைவெள்ளத்தில் கிறங்கடித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.
3. இளையராசாவின் காலகட்டம் – நாட்டார் இசைக்காலம்
1976-இல் “மச்சானைப் பார்த்தீங்களா” என்ற புதுமையான, ஆனால் பழமையான, தொன்மையான, மண்ணின் மணம் கமழும் இசையுடன் திரை இசையில் திடுமென நுழைகிறார் ஒருவர். இந்தி திரைப்படப்பாடல்களைக் கேட்கத் தொடங்கி அதில் திளைத்திருந்த தமிழனின் இரசிப்புத் தன்மையைப் புரட்டிப் போட்டவர் அவர். தன்னுடைய இசையின் இனிமைக்கு ஒற்றை இசைப் பதிவே (mono) போதும் என்று இறுதி வரை இரட்டை இசைப்பதிவை (stereo) ஒதுக்கித் தள்ளிய மெல்லிசை மன்னரைத் தாண்டி, அத்தொழில் நுட்பத்தைத் தம் கையில் எடுத்துக் கொண்டவர் இளையராசா. இவருடைய வெற்றிக்கு இந்தத் தொழில் நுட்பமும் ஒரு காரணம்.
அவ்வளவாக கையாளப் பெறாத ‘கம்சநாதம்’ போன்ற பண்களையும் இனிமையாக்கியவர் இளையராசா.
அவர் இசையமைத்த பண்களில் அவருக்கு பிடித்த பண் பாலைப்பாணி (சுத்த சாவேரி – பண் பழந்தக்க இராகம்) என்பதாகக் கணிக்கலாம். அப்பழைமையான பண் எவ்வளவு இனிமை நிறைந்தது என்று அவர் தமது இசையமைப்பு மூலம் நமக்கு காட்டியிருக்கின்றார். (காதல் கடிதம்..., கோவில் மணி ஓசை....),
மண்வாசனை நிறைந்தவர் இராசா. அவர் தானே பாடிய “வீட்டுக்குவீடு வாசப்படி வேண்டும்” என்ற பாடலில் அவர் கொண்டு வந்த மண்ணின் மணம் இன்றும் கமழ்வதை உணரலாம்.
அரங்கிசைப் பாடலின் ‘நின்னுக்கோரி‘ யை எடுத்துக்கொண்டு பண்டைய பண்ணான முல்லைப்பாணி (மோகனம்)யில் இசையமைத்து மேலை இசையில் தாளம் அமைத்தவர் இராசா. “கண்மணி அன்போடு”, “எங்க ஊரு காதலைப்பத்தி” என்ற பாடல்களில் மேலை (major) சங்கராபரணம் (நமது பாலையாழ்) மணப்பதை நுகர முடிகின்றது.
முதலில் அமைக்கப்பட்ட இசை வடிவில் இனிமையாக இன்னொரு இசைவடிவைத் தவழ விடுவது மேலை இசையில் ‘எதிர்வடிவு’(Counter Point) என்று அழைக்கப்படுகிறது. ‘பால் வண்ணம் பருவம் கண்டு’(பாசம்) பாடலில் இறுதியில் இலேசாக இவ்வடிவு அமைந்துள்ளது. இவ்வடிவைக் “காற்றினிலே வரும் கீதம்” என்று மிக நேர்த்தியாகக் கையாண்டவர் இளையராசா. (“நேற்று இல்லாத மாற்றம்”, “ஒரு மாலை இளவெயில் நேரம்” என்ற இப்போதைய பாடலிலும் இவ்வடிவு இனிமை பொங்கக் கையாளப்பட்டுள்ளது.)
ஒரு பதினாறாண்டு இவ்வாறு கடக்கிறது. காலம் எனும் அரக்கன் பொறுமை இழந்து விட்டான். தனது கணக்கைத் தொடங்க நினைத்தான்.


4. ஏ.ஆர்.இரகுமான் காலகட்டம் கலப்பு – இசைக்(Fusion) காலம்.
1992-இல் திடுமென ஓர் அதிர்ச்சி. தமிழ்த்திரைப்பட உலகில் ஓர் இளைஞர் ‘சின்னச் சின்ன ஆசையோடு’ திரைத்துறையில் நுழைகிறார். புதிய கணினித் தொழில் நுட்பத்துடன் அவர் இசையமைக்கத் தொடங்கியது, உலகின் பல்வேறு இசைவடிவங்களையும் எளிதில் கையாளும் ஏதுவை அவருக்கு அளித்தது.
“அழகான ராட்சசியே”(ரீதி கௌளை), “அஞ்சலி அஞ்சலி” (மாண்டு) என செவ்வியல் பண்களை நேர்த்தியாகக் கையாளத் தெரிந்தவர். “வெண்ணிலவே வெண்ணிலவே” என்று மெல்லிசையாக இழைக்கத் தெரிந்தவர்தான். ஆனாலும் கலப்பு இசையில்தான் அவர் அனேக பாடல்களில் பளிச்சிடுகின்றார். “நெஞ்சினிலே நெஞ்சினிலே” (மலைநாட்டு இசை) “இஞ்சாருங்கோ இஞ்சாருங்கோ” (ஈழத்து இசை) “தாண்டியா ஆட்டம் ஆட” (குஜராத்தி இசை) “கண்ணாளனே” (இந்துஸ்தானி – சூஃபி இசை-பண் கீரவாணி) என கலப்பு இசையில் ஒளி வீசியவர் ஏ.ஆர்.ஆர். பண்கலப்பும் அவருக்கு எளிதாக கைவந்த கலை.
“அம்மாப்பேட்டை அய்யம்பேட்டை” என்று ராப் இசையை (பேட்டைராப்) நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். “தீம்தனனா” “காதலெனும்” என தாளத்திற்கு முதன்மை தரும் சந்த(வண்ணம்)ப் பாடல் அவர் கைவண்ணத்தில் சிறந்துள்ளது. “பாம்பே ட்ரீம்ஸ்” என உலகெங்கும் நம் தமிழ் இசையைக் கொண்டு சேர்த்தவர் ஏ,ஆர்,ஆர். காலம்.
நா. மம்மதுவின் நாற்பதிற்கும் அதிகமான கட்டுரைகளின் கருத்துச்செறிவும் பொருண்மையும் ஆர்வலருக்கு, ஆய்வாளருக்கு சிந்திக்க தூண்டுவனவாகவும் தமிழிசை ஆராய்ச்சிக்கு நின்று பயன்படுவனவாகவும் உள்ளன.
நா. மம்மதுவின் வருங்கால ஆய்வுத்திட்டம்
 தொல்காப்பியம், அதன் உரைகள், யாப்பருங்கலம், காரிகை, விருத்தி, நன்னூல், பாட்டியல் நூல்கள் என தமிழின் பிரிவான இயல்தமிழுக்கு இலக்கணக் குவியலே நம்மிடம் உண்டு.
மொழிக்கு முன்பான தொன்மை கொண்ட தமிழ் இசைக்கு தொல்காப்பியம் போன்ற ஒட்டு மொத்த இசை இலக்கண நூல் வேண்டும்.
 கொற்றவைநிலை, கழல்நிலை, துடிநிலை என்று நம் கூத்து மரபைத் தொல்காப்பியம் பதிவு செய்கிறது. இன்னும் வாடாவள்ளி என்ற சடங்காடல் முதற் கொண்டு பல்வேறு நாட்டார் கூத்து, ஆடல், பாடல் என் இயற்றமிழுக்கான இலக்கண நூலான தொல்காப்பியம் பதிவு செய்கிறது.
குரவை, அம்மானை என மகளிர் ஆடல் பேசப் பட்டுள்ளது. இன்றைய நிகழ்த்து வடிவங்களான கதைப்பாடல், தெருக்கூத்து, என இக்காலம் வரை நம்மிடம் நெடிய கூத்து மரபு உண்டு. இதற்கான ஒரு முழுமையான இலக்கண நூல் உருவாக்க வேண்டும்.
 திராவிடமரபு (தமிழக மரபு) என்பது ஒட்டுமொத்த தொகை (தென்னிந்திய) மரபைக் குறிப்பது. நாட்டார் மரபு, இலக்கியம், இசை, ஆடல் ஏனைய கவின் கலைகள் யாவும் தென்னக மண்ணிற்குப் பொதுவானவை. எனவே இத்துறைகளின் ஆய்வுப்பரப்பை கேரளம், கன்னடம், தெலுங்கு, துளு ஆகிய பிற திராவிட மாநிலப் பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். ஒரு மண்ணில் துலங்காதது வேறோரு மண்ணில் துலங்கும். ஒரு வட்டாரத்தில் வழக்கிழந்தது மறுவட்டாரத்தில் வாழ்வு பெற்றிருக்கும். இழந்தவைகளை மீட்க முடியும். பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், தன்னார்வ அமைப்புகள், சான்றோர்கள், கலைஞர்கள், அகழாய்வு மற்றும் தொல்லியல் நிபுணர்கள் என பல்துறையினரும் ஒருங்கிணைந்து இப்பணியில் ஈடுபட வேண்டும். இந்த முயற்சியைத் தொடங்க உள்ளோம்.
 தாளம் என்பது நம் இசையின் பெருங்கடல். இனங்கள், வகைகள், நடைகள் என 5, 7, 35, 175 என இதன் விரிவாக்கம் மலைக்கச் செய்யும்.
இன்று நிலை மாறி சுருங்கி வருகிறது. 5 முதல் 10 தாளங்களையே நாம் இன்று பயன்படுத்துகிறோம். 108 தாளங்களில் பல மறைந்து விட்டன. சான்றாக, சிம்ம நந்தனதாளம் மறைந்து வருகிறது அல்லது மறைந்துவிட்டது என்று கூறலாம். குறைந்தது 100 தாளங்களை, அவை அமைந்த பாடல்களைப் பதிவு செய்து ஆவணப்படுத்த வேண்டும். நிகழ்காலத்திட்டமா, எதிர்காலத் திட்டமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
 இன்றைய சிற்றூர்களில் தாலாட்டுப்பாட, ஒப்பாரிபாட, ஆள் இல்லை. ‘கூலிக்கு மாறடிக்கிறாள்’ என்ற சொலவடையே உண்டு. ஆனால் இன்று கூலிக்கு ஒப்பாரி பாடக்கூட ஆள் இல்லை.
ஒரு நூறு வடிவங்களுக்கு மேல் நம்மிடம் நாட்டார் பாடல்களுண்டு, கால வெள்ளத்தில் கரைந்து போன கலைஞர்கள் தவிர இன்றும் சிலர் பழமை வடிவிலேயே நாட்டார் பாடல் பாடும் திறமை படைத்தவர்களாக உள்ளனர். தாலாட்டு, ஒப்பாரி, நடுகை, பொலி, வண்டிக்காரன் பாட்டு, ஓடக்காரன் பாட்டு, நையாண்டி, தெம்மாங்கு என்ற அனைத்து நாட்டார் பாடல் வகைகளயும் பாடவைத்து பதிவு செய்து ஆவணப்படுத்த வேண்டும். இந்த தலைமுறையில் இதை நாம் செய்யா விட்டால், மீட்கமுடியாத அளவு அவை அழிந்தே போகும் வாய்ப்பும் உள்ளது. இப்பணியை எடுத்து செய்ய முயற்சிக்கிறோம்.
நா.மம்மதுவின் இலக்கிய,மொழிவளர்ச்சியின் பங்கு
இசைத்தமிழின் தொன்மையையும், வரலாற்றையும் ஆராய்ந்து இலக்கியங்களாகவும், பேரகராதியாகவும் பதிவு செய்து ஆவணப்படுத்தியுள்ளதே தமிழ் இலக்கிய, மொழிவளர்ச்சிக்கு நா.மம்மது ஆற்றிய பெரும் பணியாகும். இந்த பேரகராதியில் பல இடங்களில் யாப்பிலக்கணச் செய்திகள் தரப்பட்டுள்ளன. மரபுத் தமிழிலக்கிய யாப்பானது இசையோடு பிசையப்பட்டது என்பதனை இந்த அகராதியைப் பயன்படுத்துபவர்கள் எளிதாகவே உணரமுடியும். இதில் காணும் தமிழிசைசார் சொற்களின் விரிவாக்கம் ஆய்விற்கு பெரிதும் பயனுள்ளவை.
“தமிழிசை பற்றிய ஆய்வில் இருபதாம் நூற்றாண்டில் மூன்று முக்கியமான நூல்கள் வெளிவந்தன. அவை ஆப்ரகாம் பண்டிதரின் ‘கருணாமிர்த சாகரம்’, சுவாமி விபுலானந்தரின் ‘யாழ் நூல், தமிழ் இசைச் சங்கத்தின் வெளியீடான “பண் ஆராய்ச்சியும் அதன் முடிவுகளின் தொகுப்பும்” (தொகுப்பாசிரியர்:இசைப்பேரறிஞர். ம.ப. பெரியசாமித்தூரன்). இந்நூல்கள் அனைத்தும் கருநாடக சங்கீதத்தில் இருந்து தமிழிசை பிறந்தது என்ற கூற்றுக்கான மறுப்புகளைத் தருவதில் முதல் இடத்தை வகித்தன. ஆனால் தமிழ் இசை என்பது இதுதான் என்று வலியுறுத்தும் அத்தகைய வரையறுப்புக்கான ஆதாரங்களைத் தமிழ் இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் இருந்து பிரித்து எடுத்து முறைப்படுத்துவதில் பின்தங்கியே நின்றன. அதனை நிறைவு செய்யும் விதமாக இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மூன்று முக்கிய நூல்கள் வந்துள்ளன. 1.வீ.ப.கா. சுந்தரத்தின் தமிழிசைக் கலைக்களஞ்சியம். 2.மு.அருணாசலத்தின் இசைத் தமிழ் இலக்கிய வரலாறு, இசைத் தமிழ் இலக்கண வரலாறு 3.நா.மம்மதுவின் தமிழிசைப் பேரகராதி” என்கிறார் எழுத்தாளர் பொ.வேல்சாமி.

மம்மது அவர்கள் கண்டுபிடித்த புதிய இசை(ஆய்வு)ச் செய்திகள்
தமிழ்ச் சொற்களில், ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் தரும் சொற்கள் அமைந்திருப்பதை பல பொருள் குறித்த ஒரு சொல் என்கிறோம். எடுத்துக்காட்டாக, இசை என்பதற்கு புகழ், சம்மதித்தல், சங்கீதம் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். அதே போல் தமிழிசை தொடர்புடைய சில சொற்களுக்கு நா.மம்மது அவர்களின் புதிய விளக்கங்களைக் காண்போம்.
 மருள்
மருள் என்ற சொல் வடுகு, தடவு, இந்தளம், மருள் இந்தளம், இந்தோளம் என பொருள்படும். நெடுநல்வாடையில் ஆடன் மகளிர் பாடும் பொருட்டு தடவில் (நெருப்பு மூட்டிக் கட்டை) நெருப்பிட்டு குளிர் காய்ந்து கொள்வார்கள் என்னும் குறிப்பு உள்ளது.
“பகுவாய்த் தடவில் செந்நெருப்பு ஆர ஆடன் மகளிர் பாடல் கொளப் புணர்மார்” (நெடுநல் 65)
தடவு என்பது இந்தள மரக்கட்டை. மாலையில் இந்தளக் கட்டையில் தீபம் ஏற்றிய, பின்னர் பாடப்பட்ட பண் பிற்காலத்தில் இந்தளம் எனப் பெயர் பெற்றது. இது தோடியின் கிளைப்பண். இந்தளப் பாணியை இன்று இந்தோள இராகம் என்பார்கள். இப்பண் இரங்கல் சுவையுடையது. குரல் முதல் கிளைமுறை தொடுக்க இப்பண் கிடைக்கிறது. (கிளைமுறை – ஐந்தன் முறை – மத்திம பாவம்). ச க1 ம1 த1 நி1 - இப்பண்ணினை முதன்முதல் சேக்கிழார், பெரியபுராணத்தில் இனிது விளக்கித் தமிழகத்திற்கு அருள்கின்றார். சிலப்பதிகாரத்தின் கானல் வரியில் 48, 49 பாடல்களில் மருள்மாலை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘தீத்துழைஇ வந்த இச்செல்லன் மருள்மாலை...’(சிலப்.7.51)
“மருள் இந்தளம் என்கிற பண்ணை வண்டுகள் பாட நின்ற”
(பெரிய வாச்சான் பிள்ளை) (பார்க்க த.பே.401)


 தன்
‘தன்’ எனும் சொல் சுருதி எனபதன் பழைய சொல். ‘தன் குரவை சீர் தூக்குந்து’- (புறநானூறு 24:6) (குரவை சீர்- குரவைப்பாடல்) என்ற சங்கப்பாடலில் வரும் வரியின் மூலம் குரவை ஆட்டத்திற்கான பாடலை சுருதி பொருந்த ஆடிப்பாடினார் எனபதாகும்.
சிலப்பதிகார அரங்கேற்று காதையில்,
‘தண்ணுமை முதல்வன் தன்னொடு பொருந்தி...’ (சிலப்: 3.62)
என்று குறிப்பிட்டுள்ளதின் பொருள் ‘தண்ணுமை முதல்வன் சுருதியோடு பொருந்தி’ என பொருள்படுவதாகும். (த.பே.268)
 தூக்கு – தாளம்
‘தூக்கு’ என்பது நாட்டியத்திற்கான தாளம் என்பது மம்மதுவின் கருத்து. பின்னர் தூக்கு எனபது நாட்டியம், நாடகம் மற்றும் கூத்து என்றும் பொருள் பெற்றுள்ளது.
 அடி
‘அடி’ என்னும் சொல்லுக்கும் தாளம் என்று பொருள் கொள்ளலாம். ‘தாள்’ கொண்டு தாளமிட்டதால் ‘தாளம்’
‘துடியின் அடிபெயர்த்து....’ (பரிபா.29:19)
‘நடுவூர் மன்றத்து அடிபெயர்த்து ஆடி’ (சிலப்.12:11)
இங்கு அடிபெயர்த்து என்பது காலினால் தாளமிடுதல் என்பதனை குறிப்பிடுவதாகும். நாட்டியத்தில் அடி (பாதத்தின் கீழ்ப்புறம்)யினால் தாளமிட்டதால், தாளத்திற்கு அடி என்று பெயர் வழங்கத் தொடங்கியது. நாட்டார் வழக்கில் ‘தாளம்’ என்பது ‘அடி’ என்றே குறிப்பிடப்படுகின்றது.


நா. மம்மது - நேர்க்காணல்
2014, செப்டம்பர் மாதம் 10-ஆம் நாளன்று, மதுரை மாநகர் பாரதி நகரில் தன் குடும்பத்தினரோடு வசித்து வரும் நா. மம்மதுவிடம் நான் (ஆ.ஷைலா ஹெலின்) பேட்டி கண்டவை:
* முத்தமிழாம் தமிழ்மொழியில் இயற்றமிழின் வளர்ச்சிக்கு ஒத்த வண்ணம் இசைத்தமிழின் வளர்ச்சி விகிதம் எவ்வாறு உள்ளதென்பதைக் கூறுங்கள்?
இசைத்தமிழின் வளர்ச்சி என்பது நிகழ்கலையான, இசைக்கலையின் வளர்ச்சியைப் பொறுத்து அமைந்துள்ளது. அதற்கு அதிக பயிற்சி வேண்டும். இது நூலிலிருந்து மட்டும் கற்றுக்கொள்வதால் வருவது அல்ல, நிகழ்த்துவதன் அடிப்படையில் அமைகிறது. எனவே அதனோடு விருப்பமும், ஈடுபாடும் உடையவர்களாலேயே முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்ல முடியும்.
* முத்தமிழ் மூன்றினுக்கும் தமிழர்களின் பங்கினைக் குறிப்பிட்டு கூறுங்கள்?
இயற்றமிழ் எனப்படும் இலக்கியங்களோடு எல்லாத் தமிழருக்கும், குறிப்பாக பாமர மக்களுக்கும் ஈடுபாடு குறைந்த அளவிலேதான் உள்ளது. “உலகம் என்பது நாடக மேடை, நாம் எல்லாம் நடிகர்கள்“ என்று ஷேக்ஸ்பியர் சொன்னது போல ஒவ்வொரு தனிமனிதன் வாழ்விலும் இசையும், பாவனையாம் நாடகத்தின் தாக்கமும் கலந்தே காணப்படுகிறது.
இசைத்தமிழினில் உயர்வு சங்க காலத்தில் இருந்ததைப் போன்று பிற்காலத்தில் இல்லை. இருப்பினும் 20ஆம் நூற்றாண்டிற்குப் பின்பாக தமிழிசையின் மறுமலர்ச்சிக் காலம் என்றே கூறலாம். நாடகத்தமிழும் சின்னத்திரை, சினிமா என மறு உருவமாக வளர்ச்சி பெற்றே வருகிறது.
* நெடுஞ்சாலைத் துறையில் பணிபுரிந்த உங்களுக்கு எவ்வாறு இசைத் தமிழ் மீது ஆர்வமும் பிணைப்பும் ஏற்பட்டு இசைத்தமிழ்ப் பேரகராதி உருவாக்கி கலைஞரிடம் பாரதியார் விருது பெரும் அளவிற்கு பெற்ற அனுபவங்களை கூறுங்கள்?
திருநெல்வேலி மாவட்டம் தென்காசிப் பக்கம் இடைகால் எனும் கிராமத்தில் 25 வருடமாக வாழ்ந்தேன். அங்கு ஆடல் பாடல்களுக்கு பஞ்சமே இல்லை. தாலாட்டுப்பாட்டு, நடுகைப்பாட்டு, வண்டிக்காரன் பாட்டு, பண்டாரங்கள், கோவில் கொடையில் பாடும் பாட்டு, கும்மிப் பாட்டு, வில்லுப்பாட்டு, கரகாட்டம், நாகசுர இசை என காதில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கும். அதற்கென்று தனியாக தேடிச்சென்று பாடல்களைக் கேட்க வேண்டியதில்லை.
பாளை சி.சு.மணி ‘சைவப் பெருங்கடல்’ என் அறியப்படுபவர் எனக்கு பண், தாளம், தேவாரத்தில் உள்ள பண், இக்கால இராகங்கள் குறித்து விளக்கி இசைத்தமிழை அறிமுகப்படுத்திய முதல் ஆசிரியராவார். தொடர்ந்து அங்கே கிடைத்த நண்பர்களான தொ.பரமசிவம், லூர்து சாமி, மற்றும் இசைத்தமிழ் ஆய்வு தொடர்பான நூல்களும் எனக்கு மேலும் ஆர்வமூட்டத் தொடங்கின.
கலைகளின் உறைவிடமாம் மாநகர் மதுரைக்கு பணியின் நிமித்தம் வசிக்க வந்த எனக்கு, என் ரசனைக்கேற்ற பாதைகள் அனுகூலமாய் அமைய இசைத்தமிழ் ஆய்விற்கு பெரும்பாதை அமைத்துத் தந்தது. மூன்று தாஸர்கள் என்னும் நாடக தந்தையர்களின் நாடகங்களும் பாடல்களும் சற்குரு சங்கீத் வித்யாலமும், பசுமலை இசைக்கல்லூரியும் மதுரை வானொலி நண்பர்களின் நட்பும் என் ஆர்வத்தை மேலும் ஊக்குவிப்பதாய் அமைந்திருந்தன. நாடக நடிகர் பாடகர் இராசபார்ட் ராசாவின் நட்பு எனக்குப் பேருதவியாக அமைந்தது. அவருடன் சேர்ந்தே இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறேன். இருப்பினும், 20-ஆம் நூற்றாண்டு இசைத்தமிழ் ஆய்வாளர் எனக் குறிப்பிடப்படும் வீ.ப..கா. சுந்தரம் அவர்களின் நெருங்கிய தொடர்பும், ஒரு குருகுலக் கல்விபோல் அவரிடம் நான் கற்றுத் தெரிந்து கொண்டவைகளுமே என் இசைத்தமிழின் அறிவையும், தொடர்ந்து ஆய்வு செய்யவும் பல்வேறு விருதுகளைப் பெறவும் இசைத்தமிழ் பேரகராதி எழுதவும் அடித்தளமாக அமைந்தன.
* இசைத்தமிழ் ஆய்வாளர் வீ.ப.கா. சுந்தரம் அவர்கள் குறித்து பேசமுடியுமா?
வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் இசைத்தமிழில் மிகவும் தேர்ச்சிபெற்ற அறிவினையும் தொடர்ந்து ஆய்வு செய்பவராகவும் காணப்பட்டார். சிலப்பதிகாரத்தில் இசைக் குறித்ததான நுணுக்கங்களுக்கு நல்லதொரு விளக்கம் அளித்தவர். சிலப்பதிகார உரையில் கூட கிடைக்காத ஆய்வுகளை அவர் செய்துள்ளார். அவரின் ‘தமிழிசைக் கலைக்களஞ்சியம்’ எனும் நான்கு தொகுதிகளின் அடியொற்றியே ஏழாண்டு கால பணிக்கு பின் தமிழிசைப் பேரகராதியை வெளிக்கொண்டு வந்தேன். இக் கலைக்களஞ்சியம் பேரகராதியும் எல்லோராலும் அணுக முடியாதது. அடிப்படையான இசைத்தமிழ் அறிவு பெற்றவராலேயே அதைத் தொடர்ந்து வாசித்து விளக்கம் பெற்றுக் கொள்ள முடியும்.
* இதுவரை நீங்கள் பதினைந்திற்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருந்தும், குறிப்பாக தமிழிசைப் பேரகராதி உருவாக்கியமைக்கு பெற்ற பாராட்டுகளைக் குறிப்பிடவும்?
ஏழாண்டு காலம் முயன்று தமிழிசைப் பேரகராதி வெளியிட பெரிதும் உதவிய குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரையும் இன்றும் நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன். பொருளுதவி செய்த திரு.பால் பாண்டியன் மற்றும் பேரா.கு.ஞானசம்பந்தன் ஆகியோர் என்றும் நினைக்கத்தக்கவர்கள்.
இசைத்தமிழ் ஆராய்ச்சியின் விளைவாக விருதுகளைப் பெறுவதற்கும் சொற்பொழிவை ஆற்றுவதற்கென்றும் தமிழ் நாடு, அயல்மாநிலங்கள் மற்றும் அயல்நாடான அமெரிக்கா, மலேசியா நாடுகளுக்கு சென்றிருந்தேன். கேரளத்தில் திருச்சூர், சக்தன் தம்புரான் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் கட்டுரை வாசிக்கச் சென்றிருந்த போது எனக்குத் தமிழக அரசின் பாரதியார் விருது கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்தது. அக்கல்லூரியில் எனக்கு பாராட்டு விழாவே நடத்தினார் அன்பு பேரா.கோவிந்த ராசவர்மா.
பாரதியார் விருதினை முதல்வர் மாண்புமிகு. கருணாநிதியிடம் பெறச் சென்ற பொழுது, அதனைக்குறித்து பாராட்டிய பொழுது சில கேள்விகளை என்னிடம் கேட்டார். அவர் தமிழிசை குறித்து நன்கு அறிந்திருந்தமையால், ‘இசைக்கலைச் சொற்கள் எல்லாம் வடமொழியில் இருந்தா மொழிபெயர்க்கபட்டது?’ என வினவினார். தனித்தமிழ் இசைச் சொற்களே என அதற்குரிய விளக்கத்தை நான் தரவே ‘தகுதியான நபருக்கே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது!’ எனக் கலைஞர் பாராட்டினார். (இதைக் கூறும்போது மம்மதுவின் கண்கள் ஆனந்தக் கண்ணீரால் நிரம்பியது).
* நிகழ்த்துக் கலைக்கும், நிகழ்ததுக் கலையின் ஆராய்ச்சிக்கும் உள்ள தற்கால வளர்ச்சியைக் குறிப்பிடவும்?
இக்காலத்தில் ஒரு புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இலக்கியத்தில் மட்டும் ஆய்வு செய்த இளைஞர்கள், தற்காலத்தில் கலைகளையும் ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொள்கிறார்கள்.இது வரவேற்கத்தக்கது. காலத்தால் தேவைப்படும் ஒன்று கூட. வழிகாட்டிகளான பேராசிரியர் பெருமக்களும், இப்புதிய நிலைக்குத் தங்களை ஆயத்தப்படுத்தி வருகிறார்கள். இது மெத்தவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்று.
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வும், அதன் நிகழ்த்து கலைகள் மற்றும் அதன் ஆய்வும் பெருமளவு மக்களையும், குறிப்பாக மாணவர்களையும் ஈர்த்து வருகிறது. இவையெல்லாம் தமிழ்ச்சூழலில் ஆரோக்கியமான போக்காக நான் கருதுகிறேன்.
* தமிழிசைக் கருவிகளின் மரபுகளையும், உபயோகத்தையும் குறிப்பிடுமாறு கேட்கிறேன்?
தமிழிசைக் கருவிகளின் காலம் 3000 ஆண்டு பழமை கொண்டது. தமிழிலக்கியங்கள், உரைகள், நிகண்டுகள், அகராதிகள் முதலியன 300 இசைக்கருவிகளைப் பேசுகின்றன. காலங்காலமாக நாம் பல கருவிகளை இழந்து வருகிறோம்.
ஆயினும் மீட்டுருவாக்கமும் நடந்துவருகின்றது. தப்பு - இன்று தப்பாட்டக் கலையாக மீட்சி பெற்றுள்ளது. ஆடலரசி அனிதா இரத்தினம், பரதக் கலையில் பறையை அறிமுகம் செய்துள்ளார்.
* கருநாடக இசை தமிழிசையே, என்று கூறுவது சரியா? விளக்கம் தரும்படி வேண்டுகிறேன்?
இதுகுறித்து நிறையவே பேசிவிட்டோம். கருநாடக இசை வேறு மண்ணிலிருந்து வந்தது என்றால், அதன் பிறந்த மண்(இடம்) ஏது?
‘கருநாடகம்’ என்ற தொன்மையாக தமிழகமே (தென் இந்தியா) அதன் பிறப்பிடம். ‘தொன்மையான இசை’ என்ற பொருளில் ‘கருநாடக இசை’ என்ற சொல்லாட்சி உருவாகியுள்ளது. ஆயினும் பண்டைய அரங்கிசை (வேத்தியல், வேத்திசை) வடிவமே இன்றைய கருநாடக இசையாகியுள்ளது.தமிழிசையின் ஒட்டுமொத்த வடிவம் மட்டுமே கருநாடக இசையாகாது. ஏனைய பலபிரிவுகளும் நம் இசைக்கு உண்டு.
* தாங்கள் மேற்கொண்டு வரும் அண்மைக்காலத் தமிழிசைப் பணிகளையும் எதிர்கால திட்டத்தையும் குறிப்பிடவும்?
தமிழ் இலக்கியங்களில், உரைகளில் எத்தனையோ பண்கள் (11, 991 பண்கள்) குறிப்பிடப்பட்டுள்ளது. காலங்காலமாக பல, பலப்பல பண்களை நாம் இழந்துவிட்டோம். நடப்பிலுள்ள பண்களும் வருங்காலத்தில் அழிய நேரிடலாம். அவற்றை நாங்கள் ஆவணப் படுத்தி வருகிறோம்.
இந்த நிலையே இசைக்கருவிகளுக்கும். அவையும் அழிந்து விடக்கூடாது. அவற்றின் இசை, பாகங்கள், செய்முறை குறித்து காட்சிக் குறுந்தகடாக ஆவணப்படுத்த உத்தேசித்துள்ளோம். அமெரிக்க தமிழ்ப் பற்றாளர், பண்பாளர் திரு.பால் பாண்டியன் அவர்கள் மகிழ்வுடன் உதவி செய்து வருகின்றார். எனவே இப்பணிகள் செவ்வனே ஈடேறும். இப்பணிகளுக்குப் பேரா.திரு.கு.ஞானசம்பந்தன் ஒருங்கிணைப் பாளராக உள்ளார். முதன்மை ஆய்வாளராக நான் வீற்றிருக்கும் மதுரை தியாகராசர் கல்லூரித் தமிழிசை ஆய்வுமையமும், கல்லூரித் தாளாளர், செயலாளர், முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், கல்லூரிப் பணியாளர்கள் மாணவர்கள், ஆய்வாளர்கள், இம்மையத்தில் பணியாற்றும் இசை ஆசிரியர்கள் எனப் பற்பலரும் இப்பணிக்குத் தங்களின் பங்களிப்பை ஆற்றிவருகின்றனர். மதுரை தியாகராசர் கல்லூரியில் அமைந்துள்ள ‘தமிழிசை ஆய்வு மையம்’ மேற்கண்ட பணிகளைச் செவ்வனே செய்துவரும் அமைப்பு ; இந்த அமைப்பில் நான் முதன்மை ஆய்வாளர்; எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை, நற் பேறாகக் கருதுகிறேன்.
* தமிழ் நாட்டிற்கும் அன்றைய சேர நாடான இன்றைய கேரளத்திற்கும் இடையிலான இசை, ஆடல் உறவினைக் குறித்து குறிப்பிடவும்?
தமிழகத்தில் ஏறக்குறைய மறைந்தே விட்ட முழவு, திமிலை, இடக்கை, பாணி முதலிய இசைக்கருவிகள் பல இன்றும் கேரளத்தில் தொடர்ந்து இசைக்கப்பட்டு வருகின்றன. பண்டைய இடக்கை தான் இன்றைய செண்டை மேளம்.
பாணர் மரபு தடம் தெரியாமல் தமிழகத்தில் மறைந்து விட்டது. மாரார், பாணர், வேலன், வேலத்தி, புள்ளுவன், மன்னான் என்று பண்டைய பாணர் மரபின் தொடர்ச்சி கேரளத்தில் தொடர்கின்றது. தொன்மைத்தமிழ்ச் சடங்குச் சமூகத்தின் பூசாரி அல்லது பூசாரிணிகளான வேலன், வேலத்தி ஆகியோர் இன்றும் கேரளத்தில் பற்பல சடங்கியல் சார்ந்த நிகழ்த்துக் கலைகளை (தெய்யம் முதலியன) ஆடிவருகின்றனர்.
தமிழிசையின் பழமையான பாடல் வடிவங்களை இன்று நாம் கேரளத்தில் தான் கேட்க முடிகின்றது.
இசை, ஆடல் பற்றி தமிழக்த்தில் மட்டும் ஆய்வு செய்தால், அது நிறைவுடையதாக இருக்காது. ஏனென்றால் பழமரபுத் தொடர்ச்சி என்ற சங்கிலியின் அறுபட்ட கண்ணிகள் பல கேரள மண்ணில் நமக்குக் கிடைக்கின்றன.
தமிழக, கேரளப் பல்கலைக்கழகங்கள் நிகழ்த்துக் கலைஞர்களுடன் கருத்தரங்குகளை, கள ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த வழியே மெய்யான ஆய்வுக்கு வழிவகுக்கும். எந்தச் சார்பும் இல்லாத, தமிழ்ப் பாரம்பரியத்தில் பெறும் பற்றுக்கொண்ட கேரள அறிஞர் பெருமக்களை நான் அறிவேன். அவர்களின் பங்களிப்புகளையெல்லாம் நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
* தமிழிசை வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களையும், பாடுபடுபவர்களையும் பற்றிக் கூறுங்கள்?
சடங்கு பாடகர்களான வேலன், வேலத்தி, கட்டுச்சி, அகவன்மகள், தேவராட்டி; பின்பு பாணர், பாடினி; அதன் பின்பு புலவர் மரபு; தமிழிசை ஆதி மும்மூர்த்திகள் உள்ளிட்ட சைவ சமயக் குரவர்கள்; திருமாலிய ஆழ்வார்கள்; சித்தர்மரபு; அருணகிரியார்; இசுலாமியச் சூஃபியர்; கிறித்துவ அருட்தந்தையர்/ பாடகர்; தமிழிசை மூவர்; கருநாடக இசை மும்மூர்த்திகள்; தமிழிசையில் பாடிய பிறமொழிப்பாடகர்;பட்டினத்தார்; தாயுமானவர்; சுத்தானந்த பாரதி; குஞ்சரபாரதி என்ற பாரதி வரிசை; நீலகண்ட சிவன்; இராமசாமி சிவன்; பாபநாசம் சிவன் என்ற சிவன் வரிசை; திருவனந்தபுரம் இலக்குமணப்பிள்ளை; நாட்டாரிசைப் பாடகர்; திரைஇசையாளர்; தெய்வ இசையாளர்; கருவியாளர் என தமிழிசைக்குத் தொடர்ந்து ஒரு மூவாயிரம் ஆண்டுகாலம் பணிசெய்த பெரியோர்களை நாம் மறக்கலாகாது.
பாடுமுறை சில மாறி இருக்கலாம்; அது காலத்தின் இயல்பு; ஆனால் பண்முறை மாறவில்லை; நம் இசை பல்லாயிரம் ஆண்டுக்காலமாக பண்ணிசையாகவே தொடர்ச்சி பெற்று வந்திருக்கிறது.
இந்த மரபுகளை அடுத்தடுத்த கால கட்டங்களுக்குச் எடுத்துச் சென்ற/சென்றுவரும் அன்றைய இசையாளர்/ இன்றைய இசையாளர் ஆகிய இவர்களே நம் இசையின் மானிடத் தெய்வங்கள்.
இந்த மரபை விட்டுவிடாது தொடர்ந்து எடுத்துச் செல்வது இன்றைய நமது கடமையாக உள்ளது.


முடிவுரை
இலக்கியப் படைப்புகள் ஊக்கத்தையும் தாக்கத்தையும் அளிப்பன. அங்ஙனம் நா. மம்மதுவின் தமிழிசைசார் இலக்கியப் படைப்புகள் புதியச் சிந்தனையையும், விளக்கங்களையும், தெளிவினையும் தருகின்றன.
நா.மம்மது எளிமையும், கனிவுமானவர். ஏற்ற காலத்தில் உதவும் கரம். சமயோசித புத்தி உள்ளவர். பல்துறை வித்தகர், தமிழிசை ஆய்வுப் பணியில் ஆர்வலர். தொல்காப்பியர் காலம் தொட்டு இக்காலம் வரை தமிழிசையின் மாற்றங்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றவர். அதன் தெளிவுகளை இலக்கியங்கள், கட்டுரைகள், நிகழ்ச்சிகள், பேட்டிகள் வாயிலாக விளக்கியுள்ளவர். தமிழ்த்துறை, இசைத்துறைசார் ஆய்வு மாணவர்களுக்கு உதவும் எண்ணுக்கடங்கா தகவல்கள் இவரின் இலக்கியங்களிலும், அகராதியிலும் காணக்கிடக்கின்றன. அகராதியினை உருவாக்குவதே ஆராய்ச்சியாய் இருக்க, பேரகராதி உருவாக்கம் என்பது பல நூறு ஆராய்ச்சிக்குச் சமம். 21-ஆம் நூற்றாண்டில், இசைத்தமிழிலும் தமிழிசையிலும் களைபிடுங்கி, வேலியிட்டு, நீர்பாய்ச்சி வரும் நா.மம்மது அவர்கள் ஆய்வாளர் தகுதிக்குத் தன்னை உயர்த்தியுள்ளார்.
இவ்வாறு தமிழிசைக் காவலர்களால் தமிழர்க்கென்றுள்ள தனி இசைமரபு உண்மை பலரால் அறியப்பட்டு வருகிறது. அவ்விசையை முழுநிலையில் மீட்டுருவாக்கல் தமிழரிஞர்தம் கடமையாகும்.

சேர்த்தவர் : ஆஷைலா ஹெலின்
நாள் : 12-Sep-15, 1:07 pm

தமிழறிஞர் நாமம்மது தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே