ஹைக்கூ முதற்றே உலகு

(Tamil Nool / Book Vimarsanam)

ஹைக்கூ முதற்றே உலகு விமர்சனம். Tamil Books Review
'பலரும் அத்துப்படி; இருந்தாலும் ஒரு நாளும் அத்து மீறாதவர்'. நான் இரவியை 'புலிப்பால் ரவி' என்று அழைக்கத் தொடங்கினேன்' – இது இந்தக் கவிஞரைப் பற்றிய முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களது மனந்திறந்த பாராட்டு!
‘இரவியின் குருதியோடு உறுதியாகவும் உயர்வாகவும் உண்மையாகவும் கலந்திருக்கும் தமிழ் மொழி’ – இது தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களது சீராட்டு.
வானதி பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு கவி நூலைத் தான் மேற்சொன்ன தோரணங்கள் அலங்கரிக்கின்றன
நல்நண்பர் கவி இரவி அவர்களது 15ஆம் குழவி - தமிழ் தழுவி, கவி குலவி, இதம் விரவி வந்திருக்கும் 'ஹைக்கூ முதற்றே உலகு' எனும் பிறவி!
‘மலர்கள் முதல் பூங்கொத்து’ வரை, ‘புத்தகம் முதல் நூலகம்’ வரை, ‘வறட்சி முதல் புரட்சி’ வரை பல சாலைகளில் பறக்கிறது 'இரவி விடு புரவி'!
ஏச்சுப் பதமாக இருந்த ‘பகற்கனவை’ பெருமிதமாக மாற்றிய இந்தியாவின் உலக முகம், அப்துல் கலாம் அவர்களைப் பற்றியும் இதில் பொருத்தமாக பாடியிருக்கிறார்.
விஞ்ஞானத்தின் விந்தை
மெய்ஞானத்தின் தந்தை
கலாம்! [பக்: 23]

நான்கு சுவற்றுக்குள் தான் சுழல்கிறது இன்றைய உலகம்; ஆதலால் இயற்கை பற்றிய கவிதைகள் இயற்கையானது இன்று! கவிஞர் இதில் பாடியிருக்கும் இயற்கை, இனிமை. குறிப்பாக -

குளத்தில்
தன் அழகை ரசித்தது
மரக்கிளை


இவ்வளவு அழகாய்
பவளம் அடுக்கியது யாரோ
மாதுளம் பழம்! [பக்: 39]

இந்நூலின் மிகச் சிறப்பான ஹைக்கூவும் இயற்கை சார்ந்ததே.
அது ...

புள்ளிகள் உண்டு
கோலம் இல்லை
நட்சத்திரங்கள்! [பக்: 41]

சொல்லாடல், வடிவம், உத்திகள், பிற கவி அம்சங்கள் எல்லாம் முக்கியம் என்றாலும் கவிதையின் ஆன்மா என நான் கருதுவது புதிய கற்பனை! [Unprecedented Imagination]. மேற்சொன்ன ‘நட்சத்திரங்கள் ஹைக்கூ’ மகிழ்ச்சி தருகிறது!

சமூக அவலத்தையும் தற்காலச் சூழலையும் பாடாமல் போவாரா கவிஞர்?

தோட்டம் அழித்து
கட்டிய வீட்டில்
செயற்கை மலர்கள்!

ஏரிகளில்
ஏறி நின்றன
கட்டிடங்கள்

மீண்டும் துளிர்த்தது
பட்ட மரம்
மனிதன்? [பக் 107]


லிமரைக்கூ, துளிப்பா, லிமர்புன், பழமொன்றியு என்று நவீன வடிவங்களையும் இந்நூலில் முயன்றிருக்கிறார். அருமை!
கவிஞர் இறையன்பு அவர்கள் தோரண வாயிலில் வர்ணித்திருப்பதைப் போலவே மனங்களை சேகரிக்கத் தெரிந்தவர் கவிஞர் இரா. இரவி அவர்கள். அவைகளை இணைக்கவும் செய்வார் - இணையம் போல. இந்நூலின் தோரண வாயிலில் இது போன்றே தெரிவித்திருக்கும் கவிஞர் இறையன்பு அவர்களின் இணைப்பையும் தந்தார். 'மழையின் மனதிலே' என்ற எனது புதிய கவி நூலுக்கு அவர் வாழ்த்துரை வழங்குவதற்கு நண்பர் கவிஞர் இரா. இரவி அவர்களும் ஒரு காரணியானதை எண்ணி மகிழ்கிறேன்.
சரி, நூலை வாங்கிப் படித்தால் என்ன கிடைக்கும்? இதோ சாராம்சம் ஹைக்கூ வடிவிலேயே - இந்த நூலுக்கும், இவருக்கும்!
எளிய மொழி
புதிய வடிவம்
ஹைக்கூ முதற்றே உலகு!

பகுத்தறிவுப் பார்வை
மனிதநேய விழிகள்
கவிஞர் இரா. இரவி!

இந்த நூலுக்கும் இவரது நாளைய நூல்களுக்கும் இன்றே எனது பாராட்டுகள் - வாழ்த்துக்கள்
சிநேகமாய்
புதுயுகன்,
இலண்டன்


நூல் கிடைக்குமிடம்:

வானதி பதிப்பகம்
23, தீனதயாளு தெரு
தியாகராய நகர்
சென்னை - 600 017
Ph: 2434 2810, 2431 0769

விலை: 100

சேர்த்தவர் : pudhuyugan
நாள் : 11-Jan-16, 12:09 am

ஹைக்கூ முதற்றே உலகு தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே