சங்க காலம் - தமிழர்களின் கலை இலக்கிய பண்பாட்டு வரலாறு

(Tamil Nool / Book Vimarsanam)

சங்க காலம் - தமிழர்களின் கலை இலக்கிய பண்பாட்டு வரலாறு

சங்க காலம் - தமிழர்களின் கலை இலக்கிய பண்பாட்டு வரலாறு விமர்சனம். Tamil Books Review
தமிழர்களின் கலை இலக்கிய பண்பாட்டு வரலாறு.

வரலாறு பேசப்படும் போதும் எழுதப்படும்போதும் சுவாரசியங்களின் சிலிர்ப்பாய்ச் சொல்லப்பட்டால் அது வாசிப்பவர்களை வசிகரிக்க தவறாது என்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட, இந்நூலாசிரியர் முனைவர்.பா. சரவணனின் ஆழ்ந்த முயற்சியின் விளைவுதான் ’சங்க காலம்’. இந்நூலின் தமிழர்கள் வரலாற்று நிழலை அடையாளப்படுத்த விரும்புவர்கள் ஒருவரான பேராசிரியர் ராஜ் கௌதமன் ( தமிழ் பண்பாட்டு ஆய்வாளர். பழந்தமிழ் பண்பாட்டு வரலாறு சார்ந்து முன்னோடியான ஆய்வுகளைச் செய்தவர் ) அவர்கள் வழியில் சிந்திக்கிறார் ...

”தமிழனத்தின் அறிவியல் பலத்தால் அகழ்ந்து ஆய்ந்து உலகத்தின் பார்வையில் நிலை நிறுத்துவதும் அதன் மூலம் வீரியத்தை உள்ளார்ந்த இனக் குழு கட்டமைப்பினை கண்டறிவதுவும் கடமையாகிறது (பக்.12) ”

அந்த கடமையை செயலாற்ற ஒவ்வொரு தமிழரும் முனைப்புடன் செயலாற்றவேண்டும் என அழைப்பும் விடுக்கிறார் இந்நூலாசிரியர் ஆசிரியர்.

சங்க காலம் என்பதை கி.மு 600 முதல் கி.பி 200 வரையுள்ள 800 வருடங்கள் என்பதாக தனது ஆய்வில் எடுத்துக் கொள்ளும் ஆசிரியர் , தமிழ் இனம் அதன் வளம், பண்பாடு ,பாரம்பரியம் பற்றிய மிகப் பெரிய விருந்தாய் வாசகர்களுக்கு படைக்க இன்றைய தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் 156 படைப்புகளின் ( நூல்களின் ) மேற்க்கோள் பாதைகள் மூலம் நீண்ட தனது பயணத்தை இங்கு பதிவு செய்து இருந்தாலும் தமிழனின் வரலாற்று சான்றாக கலித்தொகை, பட்டிணப்பாலை,அகநானூறு, புறநானூறு ,ஐங்குறுநூறு,பதிற்றுபத்து ,நெடுநல்வாடை,பெரும்பாணுற்றுப் படை,சிலப்பதிகாரம்,திருக்குறள் , மதுரை காஞ்சி,நற்றிணை,குறிஞ்சிப்பாட்டு,தொல்காப்பியம்,பரிபாடல்,பத்துப்பாட்டு நூல்கள்,பெறு நகராற்றுப்படை ,திருமுருகாற்றுப்படை போன்ற துடுப்பை மட்டுமே நம்பி தனது நூல் பயணத்தை தொடர்கிறார் .

இவர்களைப் பற்றி மிக விரிவாக பக்கம் 196 லிருந்து 220 வரை வாசிக்கும் போதே பெருமையாக இருக்கிறது .அதை இயற்றிய நம் தமிழ் மூதாதையர்களின் ஆத்மார்த்த உறவு ஏற்படும் சிலிர்ப்பு வருகிறது.இன்றைய தமிழ் எழுத்து , உருவ எழுத்தில் தொடங்கி அசையெழுத்தின் நின்று ,தமிழி என்ற வரியெழுத்தில் சிறந்த பயணத்தின் சான்று ’நடுகல்’ எழுத்துக்கள் எனது பிறந்த ஊரான திண்டுக்கல் அருகேயுள்ள நிலக்கோட்டையில் கண்டெடுக்கப் பட்டதை அறியும் போது இந்நூலை படிக்கும் என் சுவாரசியம் கூடுகிறது .

இன்றைய விஞ்ஞானம் தனது அறிவால் உயிரின வரலாற்றை தேடிக் கொண்டு இருக்கும்போது இலக்கியப் பாடல்கள் அவர்களின் பூர்வீகம் மலைகளில் தொடங்கி அங்குள்ள உணவுகள் அவர்கள் தொழில்கள் ,வாழ்விடத் தன்மை கடவுளின் அவசியம் சமுதாயம் இன குழுத் தலைவர்கள் பிறகு அவர்கள் மன்னரானது அயல் நாட்டுக்காரர்கள் வருகை ,அதனால் மதங்கள் இறக்குமதியானது ,அடிமைப்பணி உருவான விதம் ,மொழி ,எழுத்து போன்றதோடு இல்லாமல் காதல், விலைமகளிர் அவர்கள் உருவான விதம் ,உறசாக பானங்கள் , ஆடைகள் ,காலங்கள் கணக்கு,நெருப்பு ,வானியல் ,,சேர சோழ பாண்டிய ஆட்சி போர்கள் புலவர்கள் ,முத்தமிழ் என தனது 23 பிரிவுகளின் கீழ் தெளிவாக சொல்வதை வாசிக்கும் போது சங்க காலத்தில் நாம் வாழும் அனுபவத்தைத் தருகிறார் ஆசிரியர் பல இடங்களில் படங்களை பயன் படுத்திச் சான்றுகளை தருவது இன்னும் புரிதலை இலகுவாக்குகிறது. மொத்த தமிழனின் வாழ்வியலையும் சுவை படச் சொல்கிறார் ஆசிரியர்

ஆசிரியரின் சமூக அக்கறை.

• சமூகம் என்பது செயல் பாடுள்ள ஒரு குழுவாகும் தொழில்சார் மக்கள் சில தனித்த சொற்களால் விலை மகளிர் உட்பட 45 பிரிவுகளாக பிரித்து அறியப்பட்டன.அவர்கள் சமூகத்தி9ன் நன்மைக்காக கொண்உம் கொடுத்தும் வாழ்ந்தனர்.ஆனால் பின்னாளில் இச்சொற்களே திரிந்து அம்மக்களின் சாதியின் பெயராக உருவெடுத்தன என வருந்துகிறார் ஆசிரியர் ( பக் 106 )

• பசுக்களை வளர்க்க நாட்டமில்லாத கூட்டம் வேட்டையாடுதலை கொள்ளையாக மாற்றிக் கொண்டது – இது மனித குல வளர்ச்சியில் ஏற்பட்ட மாபெரும் பிழை என்று கண்டிக்கிறார் ஆசிரியர் ( பக் 39 )

• நெருப்பினை ஊதிப் பெருக்கி அதன் வெப்ப நிலையை உயர்த்தத் தெரிந்து கொண்ட பின்னர் இரும்பினை உருக்கிப் கருவிகள் ஆயுதங்கள் உருவாக்க தொடங்கினார்கள் இவற்றினை பாதுகாப்புக்காக பயன்படுத்தி எதிரிகளை கொன்றதோடு பலருக்கும் எதிரியாகவும் மாறினர் ஆயுதத்தால் தான் ஆளும் நிலப்பரப்பினை விரிவு படுத்தினர் அதனால் போர்மோகம் அவர்களைப் பற்றிகொண்டது மண்மீதான பேராசை தணிந்து இருந்தால் தமிழர்களின் யே சங்க காலம் பொற்காலமாக மிளிர்ந்து இருக்கும் .தம் மண்ணை தொடர்ந்து காப்பாற்றத் தவறிய வேந்தர்களால் தமிழகம் சிதறியது .சிறப்பான சங்க காலம் தொய்வுக்கு இதுவே முதற் காரணம் என்ற தனது ஆய்வின் முடிவை வருந்தி சொல்கிறார் ஆசிரியர் ( பக்.240 )

புதிய தகவல்கள் .(அசைவ உணவின் விழிப்புணர்வு )

இதுவரை வாசித்து அறியாத விசயமாய் ‘மீன் பறவைகளுடன் பசு அக்கால தமிழருக்கு சிறந்த அசைவ உணவாக இருந்துள்ளது ( பக் 82 )
என்பதை அறிந்த போது அதிர்ச்சியளித்தது.இது உண்மையா என்ற என் தேடல் நீட்சியில் வரலாற்று ஆய்வாளரான டி.என்.ஜா மிக முக்கியமான புத்தகம் ஒன்றை இது பற்றீ தந்துள்ளார் என்பதை அறிந்தேன் . மேட்ரிக்ஸ் புக்ஸ் நிறுவனத்தின் பதிப்பில் ஆங்கிலத்தில் வெளி வந்துள்ள “The Myth of Holy Cow” எனும் புத்தகத்தை பாரதி புத்தகாலயம் “பசுவின் புனிதம் என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளது. வேத காலத்தில் மக்கள் பசுவை முக்கிய உணவாக உண்டு வந்தது மட்டுமில்லாமல், மதிப்பிற்குரிய உணவாகவும் கருதி வந்தனர். யாகங்களில் பசுவை பலி இடுவதும், பசுவின் கறியை கொண்டு சமைத்த உணவை பிரசாதமாக உண்டதையும் வேதங்களும், பிற பார்ப்பனிய நூல்களும் பதிவு செய்துள்ளன. அவை தொடர்பான ஆதாரங்கள் மிகவும் விரிவாக புத்தகத்தில் சுட்டி காட்டப்பட்டுள்ளன என்பதை அறிய முடிகிறது

ஆனால் நாம் இன்று இயற்கையின் அனைத்து படைப்புகளையும் நமக்கேற்ற வகையில் விஞ்ஞான அறிவுடன் மாற்றிப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம் இப்போது உயிர்கொலை அவசியமற்றது என்பதை மிகவே உணர்ந்து இருக்கிறோம். சைவ உணவு உட்கொள்கின்ற மனித மற்றும் விலங்கினங்களின் குடல் அவைகளின் உடல் நீளத்தைப் போல 10 மடங்கு அதிகமாக அமையப் பெற்றிருக்கிறது. தாவர உணவினில் இருந்தும், பெறப்பட வேண்டிய வெவ்வேறு உயிர்ச் சத்துக்கள் , தாதுக்கள், உடலில் முழுமையாக சேரும் வண்ணம் அந்த உணவு உண்ட பிறகு நீண்ட நேரம் குடலில் தங்குகிறது. அவ்வாறு தங்குவதால் தாவர உணவினை தவிர வேறு கடினமான மாமிச உணவை எடுத்துக் கொள்ளும்போது அந்த உணவு நீண்ட நேரம் குடலில் தங்குவதால் விஷத் தன்மை பெற்று அந்த விஷம் சிறிது சிறிதாக உடலில் சேர்வதால் பல வித நோய்களுக்கு மனிதன் ஆளாகின்றான். என்ற ஆய்வுகள் நமக்கு விஞ்ஞான பூர்வமாக விளக்குகிறது .எனவே அந்த பகுதிக்கு இன்றைய காலத்தில் பெரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
வரலாறுகள் உண்மைகளைச் சொல்லும்போது சில வலிகள் நிரந்தரமாக தங்கிவிடுவதுண்டு .அதில் இதுவும் ஒன்று .

பரவசமூட்டும் அனுபவம் .

வெகு நாளாய் ஓர் ஆய்வேட்டின் தரிசனத்தை பெற வேண்டும் என்ற மனத்தேடல், மதிப்புரை தந்த ’சங்க காலம்’என்ற தமிழர் வாழ்வியல் வாசித்த அனுபவத்தில் மூலம் மலர்ந்து இருக்கிறது.ஆராய்சி நூல் வாசிப்பவனின் கருத்தில் கூர்மை கவனிப்பின் ஆழம் காலத்தின் பொது நோக்கு கூட்டுகிறது வாசிப்பின் தளம் இந்த அனுபவத்தால் விசலாமாகிறது இம்மாதிரி நூல்கள் ஆய்வேடுகள் கவனித்து வாசித்து பழகும்போது வேறு எழுத்துக்களில் அதனுள் பதிந்துள்ள கருத்துக்கள் மிக லேசாக இருப்பதாக உணர முடிகிறது .

முடிவாக ஒரு ரகசியம் ..(உங்களுக்கு மட்டும் !)

தமிழ் மேலும் தமிழர் வாழ்வு மேலும் தீராத காதல் கொள்பவர்களுக்கும் ,கவிதை எழுத கருப்பொருள் தேடுபவர்களுக்கும் கதை எழுத உருப்பொருள் தேடுபவர்களுக்கும் ஆசிரியரின் இலக்கிய நிகழ்வுகளை விவரிக்கும் அழகியலில் கற்பனை ஊற்றுப் பொங்கிப் பரவுகிறது கற்பனைக் காட்சி மனதுக்குள் விரிகிறது உதாரணத்திர்க்கு ’தேவதைகள் காத்து இருக்கிறார்கள் ‘ ( பக் 57 ) போன்ற பகுதிகள் நம் மூதாதையரின் அற்புதமான வாழ்க்கை பற்றி பேசப்படும்போது அந்த சந்தோசமும் கர்வமும் நடு மண்டைக்குள் அழையா விருந்தாளியாக ஆக்கிரமிக்கிறது .. நம்மை எழுத தூண்டுகிறது.

(என் வருத்தம் .
இந்நூலாசிரியர் தமிழின் மிகப்பெரிய வரமான சித்தர்கள் சங்க காலத்தின் வளர்ச்சியில் பலர்ச்சியில் எங்குமே குறிப்பிடப் படாது தன் பாதையில் விலகிப் போவது ஏன் என்ற கேள்வியோடு நிறைவு செய்கிறேன் .)

சேர்த்தவர் : krishnamoorthys
நாள் : 9-Feb-16, 8:52 pm

சங்க காலம் - தமிழர்களின் கலை இலக்கிய பண்பாட்டு வரலாறு தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே