சோழநங்கை நாவல் விமர்சனம்

(Tamil Nool / Book Vimarsanam)

சோழநங்கை நாவல் விமர்சனம் விமர்சனம். Tamil Books Review
சோழநங்கை நாவல் விமர்சனம்

முனைவர் கை. அறிவழகன்,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி,
நன்னிலம்.

இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் வளர்ந்த புதிய இலக்கிய வகைகளுள் குறிப்பிடத்தக்கது புதினம் ஆகும். இதனை நெடுங்கதை என்று தமிழில் வழங்குவர்: ஆங்கில வழியே ‘நாவல்’ என்றும் அழைப்பர். இந்தப் புதின நூல்கள் கதைப் போக்கிற்கு ஏற்பப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவற்றுள் வரலாற்றுப் புதினங்கள் என்பவை குறிப்பிடத்தக்கவை ஆகும். தமிழில் வெளிவந்த முதல் வரலாற்றுப் புதினம் மோகனாங்கி என்பதாகும். இதனை எழுதியவர் இலங்கையிலுள்ள திரிகோண மலையில் வாழ்ந்த சரவணமுத்துப்பிள்ளை என்பவராவார். வரலாற்றுப் புதினப் படைப்பில் என்றென்றும் தமிழ் மக்களின் மனங்களில் அரியாசனமிட்டு அமர்ந்து இருக்கக்கூடியவர் கல்கி அவர்களே ஆவர். கல்கி படைத்த பொன்னியின் செல்வனுக்கு இணையான வரலாற்றுப் புதினம் இன்று வரை தோன்றவில்லை என்று தான் கூறவேண்டும். வரலாற்றுப் புதினப் படைப்பாளர்களுள் சாண்டில்யன், விக்ரமன், கோவி. மணிசேகரன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். அகிலன், நா.பார்த்தசாரதி, செகசிற்பியன் போன்றோரும் பல்வேறு வரலாற்றுப் புதினங்களைப் படைத்துள்ளனர்.
முன்னோர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றித் தற்காலத்தில் புதினங்களைப் படைத்து வருபவர் புனிதாலயம் இராமபாரதி ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தை அடுத்துள்ள திருப்பாலைத்துறை என்னும் ஊரில் வாழ்ந்து வருகிறார். . வறுமை வந்து வாட்டிய போதும்; வாழ்க்கைத் துயரைக் காட்டிய போதும்; தடுமாறாமல், தடம் மாறாமல்; நெஞ்சுரம் கொண்டு; நிமிர்ந்து எழுந்து, தானும் ஓர் படைப்பாளி என்பதைத் தமிழுலகில் மெய்ப்பித்துக் காட்டியவர். எழுத்தாளர் இராமபாரதியின் மூன்றாவது படைப்பு சோழநங்கை என்னும் இந்த வரலாற்றுப் புதினம் ஆகும். இந்நூல் தற்காலத் தமிழ் உலகிற்குக் கிடைத்த அரிய படைப்பாகும். இந்த நூலின் கதைக்களம் தஞ்சாவூரை மையமிட்டுத் திகழ்கின்றது. பிற்காலச் சோழப் பேரரசின் தன்னிகரற்ற பெரும் பேரரசன் முதலாம் இராசராசன் ஆவான். இவனுடைய வரலாற்றோடு பின்னிப் பிணைந்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாமன்னனை ஒரு போர் மறவனாக, வெற்றி வீரனாக மட்டுமே வரலாற்றில் நாம் பார்த்திருப்போம். அந்த மறவனின் மனம் எவ்வளவு மென்மையானது; அந்த மனதுக்குள் அன்பும் நட்பும் எவ்வாறெல்லாம் துளிர்த்திருந்தது; நட்புக்காக அவன் எப்படி எல்லாம் தியாகம் செய்தான் என்பதை நூலாசிரியர் மிக நேர்த்தியாகப் படைத்துக் காட்டியுள்ளார்.

இந்த வரலாற்றுப் புதினத்தைப் படித்துவிட்டுத் தஞ்சைப் பெரிய கோவிலுக்குச் செல்லுகின்ற ஒவ்வொரு மனிதருடைய நினைவிலும் நிற்கக் கூடியவள் இந்தச் சோழநங்கை ஆவாள். சோழப் பேரரசை ஆட்சி செய்த மாமன்னன் இராசராசனுடைய அகவாழ்க்கையை ஆசிரியர் அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இந்தப் புதினத்தின் வாயிலாகச் சோழநாட்டு காவிரிக் கரையின் இரு மருங்கிலும் அமைந்துள்ள சிவத்தலங்களில் சிறப்புகளையெல்லாம் ஆசிரியர் ஆங்காங்கே எடுத்துக் கூறுவது வாசகருக்குப் பெரும் பயன் அளிப்பதாக இருக்கின்றது. சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தைப் படைக்கும் போது, அவர் தமிழகமெங்கும் சென்று வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்தார்; பல்வேறு கல்வெட்டுகளைப் படித்தார்; செவிவழிச் செய்திகள், மரபுவழிச் செய்திகள் முதலானவற்றை ஆய்வு செய்து தம் காப்பியத்தைத் தமிழுக்குத் தந்தார். அதேபோன்றுதான் எழுத்தாளர் இராமபாரதி அவர்களும் இந்தச் சோழநங்கை என்னும் நெடுங்கதையை ஏதோ ஒரு கற்பனை கதையாக எழுதி விடவில்லை. சோழர்களைப் பற்றிய பல்வேறு வரலாற்றுத் தரவுகளைத் தொகுத்தார். வரலாற்று நூல்கள், கல்வெட்டுகள், செவிவழிச் செய்திகள், மக்களிடத்தில் வழங்கக்கூடிய கதைகள் எனப் பல்வற்றைத் தொகுத்து இந்த நூலை அவர் உருவாக்கியுள்ளார். பொன்னியின் செல்வன், நந்திபுர நாயகி, உடையார் என, இதற்கு முன்னரே வெளி வந்த வரலாற்றுப் புதினங்களில் சொல்லப்படாத பல்வேறு தரவுகளையும் புதிய செய்திகளையும் ஆசிரியர் தம் படைப்பில் செவ்வனே வெளிப்படுத்தியுள்ளார். நாவல் படைப்புக்குரிய பல்வேறு விதிமுறைகளை ஆசிரியர் மிகச்சரியாகக் கையாண்டுள்ளார். சிற்சில இடங்களில் கால முரண் காணப்பட்டாலும் கூட கதை ஓட்டத்தில் அவை தடைபடாமல் செல்வதைக் காணமுடிகின்றது. பொதுவாக நாவல்களில் வெற்று வர்ணனைகளும் தேவையற்ற கற்பனைகளும் மிகுதியாகக் காணப்படுவது இயல்பாகும். ஆனால் , இந்நூல் அவற்றிலிருந்து மாறுபட்டுள்ளது. பயன்பாட்டுச் சொல்லாட்சிகளும் பண்பாட்டு விழுமியங்களும் ஒருங்கமைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
ஆண் பெண் உறவென்பது ,காதல் உணர்வாக. காம உணர்வாக மட்டுமே படைக்கப்படுகின்ற புனைகதை வரலாற்றில் ,அவற்றை உடைத்தெறிந்து புதிய பாதையை ஆசிரியர் புனரமைத்துள்ளார். இக்கதையில் பாலியல் வன்மங்கள், பண்பாட்டைத் தகர்க்கும் கட்டமைப்புகள் என்று எவற்றையும் காண முடியாது. அன்பின் வழியது உயிர் நிலை, அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்னும் இரு குறட்பாக்களின் விளக்க உரை என்றோ, விருத்தி உரை என்றோ இக்கதையை உரைப்பின் அது மிகையாகாது. எதிர் பாலின நட்பின் ஏற்றத்தை எழில் ஓவியமாக ஆசிரியர் தீட்டியுள்ளார்.

மொழிநடை:

இனிமையும் எளிமையும் கலந்த மொழி நடையில் இந்நூலின் போக்கு அமைந்துள்ளது. வரலாற்றுக் கால நிகழ்வை எடுத்தியம்பிய போதினும் முழுவதுமாகச் செந்தமிழ் நடை கையாளப்படவில்லை. கதை மாந்தர்களின் உரையாடல்களில் பெரும்பாலான இடங்களில் பேச்சு வழக்கு நடையே பின்பற்றப் பட்டுள்ளது. குறிப்பாகத் தஞ்சை வட்டார வழக்கின் ஆளுமையை அறிய முடிகின்றது. கதைக்கருவின் அடிப்படையில் இந்நூலை வரலாற்றுப் புதினம் என்று வர்ணித்தாலும் கூட, மொழிநடைக் கூறுகளின் அடிப்படையில் வட்டார வழக்குப் புதினம் என்று கூடச் சொல்லலாம். நூலாசிரியர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் தஞ்சைத் தமிழ் தவிர்க்க இயலாததாக நூலுள் மிகுதியாக உள்ளது. ஆயினும் கதைக்களத்திற்குப் பொருத்தப்பாடு உடையதாகாவே அது காணப்படுகின்றது.
பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே தாங்கியுள்ள இந்தப் புதினத்தைத் தமிழ் கூறு நல்லுலகம் வரவேற்றுப் போற்ற வேண்டும். நூலாசிரியர் மென்மேலும் பல்வேறு படைப்புகளைத் தர தவள வெண் நகையாள் அருள் புரியட்டும்.
நன்றி !!

நாள் : 14-Apr-20, 8:20 pm

சோழநங்கை நாவல் விமர்சனம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே