வாடிவாசல் - சிசுசெல்லப்பா

(Tamil Nool / Book Vimarsanam)

வாடிவாசல் - சிசுசெல்லப்பா விமர்சனம். Tamil Books Review
இரண்டு ஆண்டுகளாக சென்னை புத்தக கண்காட்சியில் என்னை வாங்க தூண்டிய புத்தகம் இது. தலைப்பும் திமிறி வரும் ஜல்லிக்கட்டு காளையின் படமும் என்னை தூண்டியது. ஆனால் சி.சு.செல்லப்பா என்ற எழுத்தாளரை பற்றி கேட்டிராத நான் அதை வாங்கவில்லை. சென்ற வருஷம் வாங்கித்தான் பார்ப்போமே என்று பொங்கலன்று வாசிக்க ஆரம்பித்தது தான் இந்த குறு நாவல். இந்த ரகத்தில் இதுவே எனது முதல் வாசிப்பு. இப்படி குறு நாவல் என்று ஒரு ரகம் இருக்கிறதே இப்போது தான் அறிவேன்.
ஒரு வேனல் மதியம் மதுரை பக்கம் செல்லாயி கோவில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. மாடு புடி வீரர்களின் சிம்மசொற்பனமான காரி என்ற ஜமீன்தாரின் காளை. தனது தந்தையின் மரணத்திற்கு காரணமான காரியை அடக்க அந்த ஜல்லிக்கட்டிற்கு வரும் பிச்சி. இவர்கள் இடையே நடக்கும் போட்டியே கதை.
தமிழர்களின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்று இந்த ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டிற்க்க்காக அணிதிரண்ட மக்கள் வெள்ளத்தை நாம் எல்லாரும் கண்டதே. ஆனால் ஜல்லிக்கட்டு என்றதை பற்றி நாம் அறிந்ததெல்லாம் தொலைக்காட்சியிலும் திரைப்படத்திலும் கண்டது மட்டுமே. கொஞ்சம் நீளமாக எழுத பட்ட சிறு கதை மாதிரி தெரியும் இந்த கதையில் அதையும் தாண்டி பல விஷயங்கள் சொல்கிறார் எழுத்தாளர். ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தின் அமைப்பு, மாடுகளின் வகைகள், எத்தனை வகை போட்டிகள் நடக்கும் என்பது முதல் வாடிவாசல் தாண்ட நிற்கும் காளைகளின் நோட்டம் இடும் சாத்திரம், அங்கு நிற்கும் மக்கள் மற்றும் மாடுகளின் எண்ணங்கள் வரைக்கும் இங்கு சொல்லப்படுகின்றது. மாடு புடி வீரர்களாக அந்த ஊருக்கு வரும் இரண்டு இளைஞர்கள், ஒரு பாட்டா, ஒரு ஜமீன்தார், அவரின் காளை - இப்படி சொல்ல போனால் ஒரு சில பாத்திரங்களே உள்ள போதிலும் ஒரு முழுமையான ஜல்லிக்கட்டு அனுபவத்தை தருவதில் செல்லப்பா அவர்கள் வெற்றி பெறுகிறார். ஒரு நேர்காணல் அனுபவம் என்று சொல்வதே சரி.
வீரம், விவேகம், ஜாதி அமைப்பு இதை பற்றி எல்லாம் பேசியிருப்பவர்; காளையின் வீரத்தையும் விவேகத்தையும் அதே முக்கியத்துவத்துடன் முன்வைக்கிறார். அப்பனின் பேரை காக்க துடிக்கும் இளைஞனாக பிச்சி வருகிறான். அவனது வீரம் மற்றும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் நடக்க வைக்கும் சாமர்த்தியம் ரெண்டும் ஒரு படத்தில் வரும் கதாநாயகனை நம்மக்கு காட்டுகிறது. ஜமீன்தார் பாத்திரமும் நன்கு வரையப்பட்டிருக்கிறது. காரி மாடு என்பது அவர் பெருமை. அந்த மாடை இது வரை யாரும் வென்றது இல்லை. அதை ஆட்டம் காட்டும் பிச்சியை பார்க்கையில்; தனது கெளரவம், பெருமை எல்லாம் இவனால் போய்விடுமோ என்று ஒரு பக்கம் நினைத்தாலும் மறு பக்கம் அவனது திறமையை கண்டு ஆமோதிக்கிறார். ஒரு மாட்டிற்கும் மனிதனுக்கும் நடக்கும் போட்டி இரு ஜாதிகளுக்கு நடக்கும் போட்டியாகிறதா என்று கேட்டால் ஆம் என்று தான் சொல்ல வைக்கிறது. அதனை கண்கூடாக காட்டாத போதிலும்!! வட்டார பேச்சு புரிய கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது. முதல் இரண்டு மூன்று பக்கங்கள் சுவாரஸ்யம் கொடுக்கவில்லை என்றாலும் அதன் பிறகு ஒரே வாசிப்பில் முடிக்க தூண்டிய புத்தகம் இது.
செல்லப்பா என்பவர் எழுதிய அற்புதமான படைப்பு இது. அவரை பற்றி படித்த வரையில் பெரும் புகழும் தேடி வந்த போதும் அதனை எல்லாம் மறுத்தவர். அவரை ஏன் இன்னும் மக்கள் அறியவில்லை என்று திகைப்பாக உள்ளது. 1959 கால அளவில் எழுதப்பட்ட படைப்பு இது. காலத்தை வென்றவை என்று சொல்லப்படும் படைப்புகளில் நிச்சயம் இந்த வடிவாசலுக்கு ஒரு தனி இடம் கொடுக்கலாம்.

எனது வலைப்பதிவு - https://kalaikoodam.blogspot.com/2019/01/blog-post_20.html

சேர்த்தவர் : Praveen KR
நாள் : 6-Jan-22, 11:42 am

வாடிவாசல் - சிசுசெல்லப்பா தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே