சேர்த்தவர் : மாரியப்பன் S s, 25-May-16, 12:42 pm
Close (X)

தமிழக முதல்வர் காண விண்ணப்பம்

மீண்டும் ஆட்சி பொறுப்பில் அமரும் முதல்வருக்கு எனது வாழ்த்துக்கள்..

வாழ்த்துக்களுடன் நெல்லை சீமையில் இருந்து உங்களில் ஒருவனின் ஒரு சில கோரிக்கைகள்..

ஐம்பது சதவீத மானியத்தில் பெண்களுக்கு ஸ்கூட்டர் கொடுக்கப்டும் என்றீர்கள்
அதே மானியத்தை "எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு "கொடுத்திருந்தால் சூழல் மாசுபாடு குறைவதுடன் அத்தொழில் வளர்ச்சி கண்டு அந்த வண்டி நம் சாலைகளில் உலா வந்திருக்குமே..!

வீடுகளுக்கு நூறு யூனிட் இலவச மின்சாரம் என்றீர்கள் ..

அதற்கு பதிலாக ஒவ்வொரு வீடுகளுக்கும் மானிய விலையில் சூரிய ஒளி தகடு கொடுத்திருந்தால் மாதம் தோறும் இருநூறு யூனிட் மின்சாரம் நாங்களே உற்பத்தி செய்து பயன்படுத்திக்கொண்டிருப்போமே..!

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும் என்றீர்கள் வரவேற்க்க படவேண்டியதுதான்..

ஆனால்
ஏற்கனவே நீங்கள் மானியத்தில் கொடுத்த இரண்டாயிரம் சூரிய ஒளி மின்தகடு போல் எல்லா விசாயிகளுக்கும் கொடுத்தால் சூரியனே எங்களை போல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்து விடுமே..!

பட்டம் பெற்ற அனைவருக்கும் உடனடி வேலை வாய்ப்பு என்று அரசியல் கட்சிகள் கூக்குரலிடுகிறது இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்..

காரணம் நம் அடிப்படை கல்வி முறையே தவறு..

வருடத்தில் லட்சக்கணக்கானோர் பட்டம் பெற்று செம்பரம்பாக்கம் ஏரித்தண்ணீர் போல் சீரி வெளியே வரும் போது இங்கே சிறு ஓடையில் அனைவருக்கும் ஐடி துறையில் வேலை என்பது கானல்நீர்தான்..!

விவசாயிகளுக்கு மானியங்கள் தொடரும் என்றீர்கள்..

தயவு செய்து ரசாயன உரத்திற்கு நீங்கள் கொடுக்கும் மானியத்தை அடியோடு நிறுத்திவிடுங்கள்..

நிறுத்திய கையோடு ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு நாட்டு மாடு வாங்க மானியத்தில் நிதி உதவி செய்து அவனை ரசாயன பிடியிலிருந்து மீட்டு இயற்கை விவசாயத்திற்கு மாற்றி நஞ்சில்லா உணவுகளை உற்பத்தி செய்து நம் மக்களுக்கு கொடுத்து தற்சார்பு வாழ்கை வாழ வழிவகை செய்யுங்கள்.!

தயவு செய்து புட்டி தண்ணீர் பத்து ரூபாய்க்கு கொடுக்கிறோம் என்று பெருமை பேசாதீர்..

ஆற்றில் போன தண்ணீரை அப்படியே அள்ளிக்குடித்த காலம் போய் இப்போது ரசாயன நெடியுடனே வரக்காரணமாக இருக்கும் அத்தனை ஆலைகளையும் விரட்டி அடியுங்கள் எங்கள் ஏழு தலைமுறையும் உங்களின் புகழ்பாடும்..

படிபடியாக மது கடையை மூடுவோம்
என்றீர்கள்..

வாழ்த்துக்கள் ..

அப்படியே தென்னை, பனை, தொழிலார்களையும், விவசாயிகளையும் வாழ வைக்க மீண்டும் கள்ளுக்கடைகளை படிபடியாக திறங்கள்..
காரணம் "கள் " போதை பொருள் அல்ல..!!

ஆறுகளை இணைப்போம் என்றீர்கள்,
முதலில் தமிழக அணைகளிலும், ஏரி, குளங்களிலும் பல ஆண்டுகளாக தேங்கிக்கிடக்கும் வண்டல் மண்ணை குறைந்த கட்டணத்தில் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி கொடுங்கள் ..

பிறகு பாருங்கள் அணைகளில் நீர் அதிகமாக தேக்கி வைத்து,
அந்த மண்ணை விளை நிலங்களை கொட்டி வளமாக்கி விவசாயிகள் எப்படி முப்போகம் விளைய வைக்கிறார்கள் என்று..!

முதலில் குட்டை ரக நெல் பயிரிடுவதை குறைக்க வழிவகை செய்து சிறுதானியமான
கம்பு, சோளம், ராகி, தினை, சாமையும்
நம் பாரம்பரிய நெல்ரகங்களை பயிர் செய்ய விவசாயிகளை ஊக்க படுத்துங்கள்..

இப்படி செய்தால் அண்டை மாநிலத்தாரிடம் தண்ணீருக்கு நாம் சண்டை போட அவசியமில்லை,
ரசாயன பூச்சிக்கொல்லியும் தேவையில்லை,
நம் மக்களும் மருத்துவமனைகளுக்கு லட்சம் லட்சமாக பணம் செலவு செய்ய தேவையும் இல்லை..!

சிறுதானியம் பயிர்செய்தால் அதை அறுவடை செய்ய ஆட்களுக்கு எங்கே போவது என்று நீங்கள் கேட்பது என் காதில் கேட்கிறது..

நூறு நாள் வேலை வாய்ப்பு என்ற ஒரு திட்டம் நம் நாட்டில் வெற்றிகரமாக (!!) செயல்படுகிறது..
அத்திட்டம் வயது முதிர்ந்த மற்றும் பிள்ளைகளால் கைவிடபட்டவர்களுக்காக ஆரம்பிக்க பட்ட நல்ல திட்டம்..

அந்த திட்டத்தை இப்போது வசதி படைத்தவர்களும், இளம்வயதுகாரர்களும் தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள்..

பரவாயில்லை சம்பாதிக்கட்டும் ..

அந்த திட்டத்தில் படித்த வேலை இல்லாதவர்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்..

நூறு நாள் வேலை திட்டத்தை 365 நாள் வேலை திட்டமாக மாற்றுங்கள்..
அந்த திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு அரசு கொடுக்கும் சம்பளத்தில் பாதியை விவசாயிகளான நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்,
மீதியை அரசு ஏற்றுக்கொண்டு அவர்களை எங்களிடம் அனுப்புங்கள் ..
பிறகு பாருங்கள் வேலை ஆட்கள் பிரச்சனை குறைந்து சிறுதானியம் அதிகமாக உற்பத்தி செய்து,
வேலையில்லாத பட்டதாரிகளுக்கு வேலை கொடுத்து நாட்டை எப்படி முன்னேற்கிறோம் என்று..!

நிலகையகபடுத்தும் சட்டம் நிறைவேற்ற நடுவன் அரசு உங்கள் ஆதரவுக்காக காத்துகொண்டிருக்கிறது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்..

தெரிந்தோ தெரியாமலோ ரசாயன பிடியில் சிக்கி பல லட்சங்களுக்கு கடன்காரர்களாகி இப்போது வங்கியின் பிடியில் என்னை போல பல விவசாயிகள் சிக்கிதவிக்கிறார்கள்..

அப்படி ராஜசபாவில் உங்கள் எம்பிக்கள் ஆதரவு தெரிவித்துவிட்டால் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டு என்னை போல கடங்கார விவசாயிகளின் கடன்களை வசூல் செய்ய அம்பானிகளும், பிர்லாக்களும், அதானிகளும் எங்களது விளைநிலங்களை கைப்பற்ற வரிசையில் வருவார்கள்..

ஒரு சமயம் அதற்கு நீங்கள் ஆதரவு தெரிவித்து விட்டால்
நாட்டில் விவசாய தற்க்கொலைகள் அதிகமாக நடக்கும் மாநிலமான மஹாராட்ராவை பின்னுக்குத்தள்ளி பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தை பிடிக்கும்..!

விவசாயி வீழ்ந்து மற்றவர்கள் வாழ்ந்ததாக சரித்திரத்திலேயே இல்லை ..!
சற்றே பரிசீலனை செய்து முடிவெடுங்கள்..

பிள்ளையின் தேவை அம்மாவிற்க்கு தெரியும்..

இன்னும் ஐந்து வருடங்கள் உங்களை நம்பி நாங்கள்..

வாழ்த்துக்களுடன்
உங்களில் ஒருவன் மாரி சிவா

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 6 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

தமிழக முதல்வர் காண விண்ணப்பம் மனு | Petition at Eluthu.com



மேலே