"ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை "
இந்தக் குறளில், "ஈன்றாள் -சான்றோர்" என்பதை விட ''ஈன்றோர் -சான்றோர்" என்றிருந்தால்
இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும். அப்படி வார்த்தைகளை அமைக்க வாய்ப்பிருந்தும் வள்ளுவர் தந்தையை ஒதுக்கித் தாயை மட்டும் சொல்லியதற்குக் குறிப்பாக ஏதேனும் காரணம் இருக்குமோ என்று ஒரு ஐயம் மனத்தை உறுத்திக் கொண்டே இருந்தது.
இரண்டு குழந்தைகளின் தகப்பன் என்ற முறையில் இந்த உறுத்தல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
அந்த உறுத்தலைப் போக்கிக் கொள்ள எனக்கு நானே சில சமாதானங்களைச் சொல்லிக் கொண்டேன்.
சமாதானம் 1
------------------------
அந்தக் கால கட்டத்தில் பெற்றோர் என்பதற்குச் சமமான சொல்லாக இன்று பயன்படுத்தப்படும் ""ஈன்றோர்" என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. ஈன்று புறந்தருதல் தாய்க்கு மட்டுமே உரிய சிறப்பு என்பதால் அது தாய் தொடர்பான செய்திகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
சமாதானம் 2
------------------------
குழந்தை பிறந்தவுடன் அதன் பசியை ஆற்றும் செயலைத் தாயால் மட்டுமே செய்ய முடியும்.
எவ்வளவு வசதிகள் படைத்தவனாக இருந்தாலும் ஒரு தந்தையால் அதைச் செய்ய முடியாது.
அதனால் பசி சம்பந்தப்பட்ட இந்தத் கருத்தில் தந்தையை ஒதுக்கித் தாயை மட்டும் வள்ளுவர் குறிப்பிட்டார்.
மேலே உள்ள சமாதானங்களை வெட்டிய , ஒட்டிய , கருத்துகளும் , வேறு சமாதானங்களும்
வரவேற்கப்படுகின்றன.