தூண்டில் இரை

நீ
கண்ணீர்த் துளிகளின்
கீரிடம் அணிந்து
புன்னகை என்னும்
அரியணையில்
அமர்ந்திருக்கிறாய்
*
உன் கிரணங்கள்
என் காட்டுக்குள்
ஊடுருவ முடியவில்லை
*
நீ விளையாடி
உடைப்பதற்காகவே
இதயங்கள்
படைக்கப்பட்டிருக்கின்றன
*
காதல் கவிதைகளைக்
கப்பல் செய்து
கண்ணீரில் விட்டுவிட்டேன்
*
என்னுயிரோ
உன்னிடத்தில்
உன்னுயிரோ
என்னிடத்தில்
மரணம் என்ன செய்யும்?
*
உன் கடிதம் வந்தது
திறக்காமலே
படித்து விட்டேன்
*
வயிற்றுக்காக
வாழ்ந்து
முகமிழந்து போனேன்
*
காதல் துயரமே!
வாழ்க
உன்னால்
மற்ற துயரங்களெல்லாம்
மறைந்துபோய்விட்டன
என்னைப் பிடிக்க
விதி
தன் தூண்டிலில் மாட்டிய
இரை நீ


கவிஞர் : கவிக்கோ அப்துல் ரகுமான்(21-Apr-12, 2:32 pm)
பார்வை : 104


மேலே