தமிழ் கவிஞர்கள்
>>
வாணிதாசன்
>>
மழைக் காதலி!!
மழைக் காதலி!!
அலுவலகம் முடிந்தவுடன்
ஆசையாய் வீடு திரும்பினேன்,
உன்னை பார்ப்பதற்காக!
எனக்கு முன்பே
வந்துவிட்ட நீ,
குடையிருந்தும்
மழையில் நனைந்ததை
என்னிடம் மறைப்பதற்காக
குளித்துவிட்டு
ஈரக் கூந்தலோடு
அமர்ந்திருந்தாய்
ஜன்னலின் முன்பு,
ஜன்னலை திறந்தபடி- ஆனால்
கண்களை மூடியபடி!!
இதென்ன மழையோடு ஓர் கண்ணாமூச்சி?
மழையை பார்க்க வேண்டும், கேட்ககூடாதென்றேன் - மூடியிருந்த உன் கண்களை என் கைகளால் மூடியபடி!
நீ சொன்னாய்,
இல்லை,
சுழலுகின்ற பூமியின் மீது
மழையின் ஊசிக்கரங்கள்
தொடும்போதெல்லாம்
பூமி தன்னுள் ஒளிந்திருக்கும் மெல்லிசையை
வெளிப்படுத்துகிறது ஒரு
இசைத்தட்டைப் போல
என்றாய்!
இதை நீ சொல்லி முடித்தவுடன்,
பலத்த கைத்தட்டல் ஓசையோடு பொழியத் தொடங்கியது மழை
என் மனதிற்குள்ளும்!!