பாவனைகள்

மதுக்கோப்பைக்கும் உதடுகளுக்கும்
இடையே விழுந்த கண்ணீர்த் துளியில்
அன்பை யாசித்து நிற்கும்
என் பிரதிமையை கண்டதாக
அவன் சத்தியம் செய்தான்.
அது என் கண்ணீரை மேலும் பெருக்கியது
நான் எதுவும் சொல்லாமலேயே
எல்லாம் விளங்குகிறது
என்ற அவனை அப்போதைக்கு பிடித்திருந்தது
அவன் கொண்டு வந்த கோப்பையால்
மதுவும் தனக்கொரு துணையை தேடிக்கொண்டது
வாழ்க்கையின் போக்கில் போய்விடுவது நல்லது என்றான்
தலை நிமிர்ந்துப் பார்த்தால் தெரியும் காட்சிகளை
மட்டுமே நம்புவது சிறந்தது என்றும் சொன்னான்
என் தலையை ஆதுரமாக தடவிக்கொடுத்ததற்காகவே
அவன் சொன்னவற்றை ஆமோதித்தேன்
உள்ளங்கை ரேகைகளின் சிக்கல்களை விடுவிப்பவன் போல
கைவிரல்கள் வருடியதும்
தொடுதலுக்கு பசித்த உடல்
தாய்ப்பறவையை தொலைத்த குஞ்சு போல கேவியது
கோப்பைகள் நிறைந்தன
அன்னியத்திற்கும் பரிச்சயத்திற்கும்
இடையே எத்தனை வண்ண விளக்குகள்
இரவின் சாலைகளில் அன்பு அம்மணமாக ஒடுகிறது
தட்டப்படுவது உங்கள் வீட்டுக்கதவாகவும் இருக்கலாம்


கவிஞர் : லீனா மணிமேகலை(2-May-14, 5:56 pm)
பார்வை : 0


மேலே