Blind Date

Blind Date என்ற வார்த்தையை
கூகிள் மொழிபெயர்ப்பில் இட்டுப்பார்த்தேன்
குருட்டு தேதி என வந்தது
இக்கவிதைக்கு குருட்டு தேதி எனப் பெயரிடுகிறேன்
குருட்டு தேதி

ஒரு அநாதியான நாளில்
முற்றிலும் புதியவனைத் தேர்ந்தெடுத்தேன்.
நேற்றோ. நாளையோ இல்லாத
இன்றானவன்.
அறிதல் இல்லாத அவன் தொடுதலில்
கேள்விகளும் இல்லை
பெயர், ஊர், வயது, முகவரி, படிப்பு, வேலை, சாதி,தந்தை பெயர்
பரிமாறிக்கொண்ட முத்தங்களில்
தகவல்கள் பொதிந்திருக்கவில்லை

கொள்தலின் கைவிடுதலின்
பதற்றங்கள் இல்லாத கலவி
அவனை வெறும் ஆணாக்கி
என்னை வெறும் பெண்ணாக்கி
இருவரையும் நனைக்கும்
மழையாய் பொழிந்தது
இறுதி மேகத்தை கலைக்க
வார்த்தைகள் அங்கிருக்கவில்லை


கவிஞர் : லீனா மணிமேகலை(2-May-14, 5:56 pm)
பார்வை : 0


மேலே