ஒரு தாயின் தாலாட்டு!

* "பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சி,
உயவொடு வருந்தும்மனனே! இனியே
புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே!
உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு
மான் உளை அன்ன குடுமித்
தோல் மிசைக் கிடந்த புல் அண லோனே."

(புறநானூறு பாடல் : 310 பாடியவர் : பொன்முடியார்)

பொருள் விளக்கம்:
மடுப்ப = உண்ணுமாறு செய்ய. செறாஅது = செல்லமாகக் கோபித்து. உயவொடு = கவலையுடன். மனனே = மனமே.
களிறட்டு ஆனான் = களிறுகளைக் கொன்றவனானான்.
உரவோர் = மூத்தோர் (தந்தை). உன்னி = கவனித்தல்.
மான் உளை அன்ன குடுமி = குதிரை மயிர் போன்ற அடர்த்தியான குடுமி.
தோல் = கேடயம். புல் = புல்லிய. அணலோன் = தாடியுடையவன்.

பகைவெல்லச் சென்றிருக்கும் கணவனது
பனைவைர நெஞ்சத்தின் வீரத்தை நினைத்தவாறு

பகல்முழுதும் குடும்பத்தின் பணிமுடித்துச் சற்றுப்
படுத்துறக்கம் கொள்வதற்குச் செல்லும் முன்னர்

பாசமுடன் மகனைக் கூவியழைத்துக் "கண்ணா!
பாலமுதம் இதோ பருகிட வாடா;" என்பேன்!

"வரமாட்டேன் போ" என்று நிலாவெள்ளி ஒளியினிலே
வட்டமிட்டு விளையாட ஓடிடுவான் எதிர்வீட்டுப் பிள்ளையுடன்!

வந்துவிடும் எனக்குக் கோபடம் - கோலொன்றை எடுத்தோங்கி
"வரமாட்டேன் என்றா சொன்னாய்? இதோ வந்துவிட்டேன்" எனத்

துரத்திடுவேன்; அடிக்கமாட்டேன்! ஆனாலும் என்
தூயமகன் அஞ்சி நடுங்கிப் பதுங்கிடுவான்!

கோலுக்கே இந்த பயம் கொள்கின்ற பிள்ளாய்; நீ - நாளை
வேலுக்குப் போர்முனையில் என்ன பதில் சொல்வாய் என்பேன்!

இழுத்து வந்து செல்லமாய்க் கன்னம் கிள்ளிப்
பழுத்திருக்கும் கோவைக்கனியாம் அவன் இதழில்;

தேன்கலந்த பாலின் கிண்ணம் மெல்லக் கவிழ்த்து
தெம்பாக இருப்பதற்கு முழுவதையும் அருந்தென்பேன்!

அழகுதமிழ் மழலைச்செல்வன் அதனை மறுக்காமல்
அச்சத்தின் காரணமாய் அனைத்தும் பருகிடுவான்!

பிறைபோல இருந்த பிள்ளை முழுநிலவாக உருவெடுத்து
குறையில்லாத் தோற்றமுடன் குன்றம் போல் வளர்ந்து விட்டான்!

தாலாட்டப் பிள்ளையொன்றைத் தந்துவிட்டுப்
போராட்டக்களம் சென்ற என்னவரோ;

தமிழ் மண்ணின் பண்பாட்டுக் கேற்றவாறு
தட மார்பில் வேல்தாங்கி நடுகல்லாய் நின்றுவிட்டார்!

நானும் கல்லாக மனத்தை ஆக்கிக்கொண்டு
வானதிரப் புவி வாழ்த்துகின்ற மானத்தை

ஊனமின்றிக் காப்பதற்கு உறுதிபூண்டு
உயர் வீரக்குடிமகனாய்ப் பிள்ளைதனை வளர்த்தேன்!

கட்டியணைத்துக் களித்த என் கணவனது நெஞ்சகத்தை
வெட்டிப்பிளந்து வீழ்த்திவிட்ட பகைப்புலத்தை;

எட்டியுதைத்துத் துரத்தி ஏற்றிடுக வெற்றிக்கொடி யென்றும்,
எதிரிகளின் கோட்டையிலே நம் முரசு முழங்கிடுமென்றும்,

உச்சிமோந்து திலகமிட்டுக் குடுமிதனைக் கோதிவிட்டு
உடைவாளைக் கையில்தந்து, "சென்றுவா மகனே" என அனுப்பி வைத்தேன்

அவனோ:

கொடுவாளால் களிறுகளைக் கொன்றுபோட்டுக்
குன்றுகளைப் பந்தாடுதல் போல் அவற்றை உருட்டிவிட்டுப்

படுகளத்தில் விளையாடி வினை முடிக்கின்றான் என்றும்,
நெடுமரம் போல் பகைப்படை வீழ்கின்றதென்றும்,

அடுக்கடுக்காய்த் தித்திப்புச் செய்திகள் வந்திடவே
அடக்கவொண்ணா ஆவலுடன் அது காணக் களம் புகுந்தேன்!

ஐயத்திற் கிடமேயில்லை வெற்றி நமக்கேதான்...
ஆனால் ஒன்று; அங்கே என் மகனைத்தான் காணவில்லை!

குருதி மணம் கமழுகின்ற போர்க்களத்தில்
குமுத மலர் மொட்டுக்களாய் முளைக்கும் தலைகள்!

வீழ்ந்துள்ள வீரர்தம் உடல்களோக கவிழ்ந்துவிட்ட படகுகளாம்!
வெட்டுண்ட கைகால்கள் வேலையின்றி மிதக்கின்ற துடுப்புகளாம்!

சூழ்ந்துள்ள பிணக்குவியல் நடுவில் சென்றேன்.
"ஆழ்ந்துள்ளேன் கவலையினில்; அருமை மகனே! நீ

போர்க்களத்துப் பிணமாகி வாழ்கின்றாயா? அன்றி
புறமுதுகிட்டோடிச் செத்துத் தொலைந்தாயா? எனக்கேட்டுத் துடித்திட்டேன்!

"வாழ்கின்றேனம்மா வீரனாக!" என்றொரு குரல்
தாழ்கின்ற என் தலையை நிமிர்த்திற்றாங்கே!

குரல் வந்த திசைநோக்கிப் பறந்துபோனேன்! - "உள்ள
உரம் வாய்ந்த மகனே! நீ எங்கே?" என்றேன்.

"இங்கே" என்றான்; கண்டு கொண்டேன்! ளவலம்புரிச்
சங்கே!" என்றவாறு தழுவிக்கொண்டேன்! கையில்;

தாங்கிப் போரிட்ட கேடயம் தரையில் கிடக்க; அதில்,
தங்கமகன் மார்பில் அம்புதாங்கி வீழ்ந்து கிடந்தான்!

"வெற்றியம்மா வெற்றி" என்றான் - அவன்
நெற்றியிலே முத்தமிட்டு, "என் நித்திலமே!

போர்முனையில் உயிர்விட்டு மானம் காத்த தந்தைக்கு
நேர்வழித் தோன்றலாய் வந்துதித்தாய் வாழ்க!" என்றேன்!

"ஊடுருவியிருக்கின்றதே மார்பில் அம்பு - வலி
உனக்குத் தாங்காதே மகனே!" என்றேன்; அழுதுவிட்டேன்!

"உண்மையா அம்மா? உன் கண்ணால் கண்டு நீ எனக்கு;
உரைக்கும் வரை நான் உணரவில்லையம்மா!" என்றான்!

உயிர்விட்டான் மடிமீது! போய்விட்டான்;
உயிரோடு எனைமட்டும் விட்டுவிட்டு!

ஊர்ப்பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டு
உண்பதற்குப் பிடிவாதம் பிடித்தபோது - நான்

ஓங்கிய கோல் கண்டு ஓடிய என் மகனா; மார்பில்
தாங்கிய கணையுடனே தாயகத்தை மீட்கும் போரில்

தன்னுயிரைத் தருவதற்கும் துணிந்து நின்றான்!
என்னுயிரே! என்மகனே! நீ வாழ்க என வாழ்த்துகின்றேன்!


கவிஞர் : கருணாநிதி(18-Mar-11, 10:59 pm)
பார்வை : 176


மேலே