பச்சை நாயகி

எங்கெனத் தேடுவதுன்
எழிலார்ந்த பொன்முகத்தை?
காற்று வெளியதனுள் ககன விதானத்து
பைந்நாகப் பாய்விரித்த பார்க்கடலில்?
யாண்டு செவிப்படுமுன் தேமதுரத் தமிழோசை?
மைனா , கிளி , தேன்சிட்டு , கானக் கருங்குயில் ,
வால் நீண்ட கரிக்குருவி , குருகு , மீன்கொத்தி யாவும்
கீசுகீசெனக் கலந்த அரவத்து?
எவண் நுகரக் கிடைக்குமுன் மேனி நன்வாசம்?
வேங்கை , புங்கு , நுணா , வேம்பு , வனப்பிச்சி ,
கமுகு , புன்னை மலர்க்கூட்டம்
அடர்ந்து கிடக்கும் அருங்காட்டில்?
தானாய்த் தென்பட்டால் அன்றித்
தேடுவது எங்ஙனம்?
உன்னருளாலே உன்தோள் புல்லி
கூடுவதெப்போ சிலம்பார்க்கும் பூவடியை?
துள்ளும் துடியிடையும் தோகைமயில் நடையும்
பவள இதழும் என்று பார்ப்பேன் என
குணங்குடி மஸ்தான் தேடிய மனோன்மணி
இந்த மனதை வைத்துக் கொண்டு
ஒன்றும் செய்ய முடியாது எனப்
பதைத்த நகுலனுக்கு சுசீலா
கொடுங்காற்றினில் கடும் மழையதனில்
காய்ச்சும் கதிரொளியில்
கலங்கிக் கிடந்தவென் கண்ணுக்கு
கானகத்துப் பச்சைநாயகி!


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 2:53 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே