மயக்கம்

மேகம் கலங்கா அடர்நீல
வானின்று இழிந்த மின்கொடி
நெஞ்சத்து இறங்கிற்று.

அம்முகம்

என்றோ கனவோ காப்பியப் பாத்திரங்களோ
வனைந்து காட்டியதும்
சங்கப்புலவன் குறுந்தொகையில்
கரந்து வைத்ததுவும் அல்ல

காணக்கூசியது நேராய்
அபாயச் சங்கொன்றும் அகாலத்தில்
ஊதியது
கண்ணவிந்த கால்கை முடப்பட்ட
சிந்தை சிதைந்த
கரிக்கட்டையாகிக் கான்சுனை மிகுந்த
மொழியின் தொன்மங்களை ஊடறுத்தன

செழுந்சீதச் சந்தம் மணத்த
உள்ளங்கை முத்தியதும்
அனிச்சப்பூவென கன்னம் முகர்ந்ததுவும்
குமிழ்வாயின் கமலப்பூ நாற்றமும்
கருத்தில் கள்ளூறி நின்றதுவும்
கனவென தோற்றிற்று

கனவே தானெனில்
மையலில் துளிர்த்து
முகமுரசிச் சென்ற மென்வாசம்
ஏதெனப் பரவுகிறது
முளைத்தும் கிளைத்தும்.


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 2:54 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே