மகவு
பார்த்தது சிலமுறை பேசியது வெறுஞ்சொல்
வேர்த்தது அதற்குள் நேசம் எங்கனம்?
முறைப் பெண்ணா
முறை தவறிய பெண்ணா
என்றவள் கேள்வியின் இறுகிய சீற்றம்
மறம் என்றுரைத்தல் மடமை என்றறிவேன்
எனினும் புழுப்போல் உணர்ந்து
புழுவென ஊர்கிறேன்
யாசிப்பு என்றுமென் இயல்பு அல்ல
யாசித்தாலும் பெறுதலின் உறுதி
பெறப்படாது
என்னுள் கரந்து கிளைத்த மகவு
யானே அறிந்த தாயின் முகத்தைத்
தானும் அறியும்
உலகறிவிக்க உவப்பும் இல்லை
மூலப்படிவம் முடிவாகாதது
குற்றமகவு கோணல்மகவு
கைக்கிளை பெருந்திணை
கூடவொழுக்கம் என்றே உரைப்பர்
ஏதாயினுமென்
அதுவென் மகவு
நெல்மணி ஊட்டிக் கொல்லல் நீசம்
குப்பைத் தொட்டியில் வீசலும் ஆகா
வேறார் வளர்ப்பர்…
இல்லையென்பதன் இடுங்கிய வலிக்கோர்
மருத்துவம் பார்க்க மார்க்கம் இல்லை
நோற்ற காமம் மறுத்தவர் ஒருக்கால்
ஆவணம் காக்கும் பேழையாய்த் தம்முள்
பேணிச் சுமக்கலாம் பிழையின் வலியை
சித்திரகுப்தன் ஏடுகள் புரளும்
முற்றத்து ஒலிக்கும் கூற்றுவன் காலடி
யானே இலாது மகவெவண் வாழும்
வாளால் மகவரிந்து ஊட்ட வல்லனும் அல்லன்
மகவும் எங்கணும் இரந்து நில்லாது
மரணம் என்பது தொடர்ச்சி அறுதல்
கனவின் வலியின் வாழ்தலின் தொடர்ச்சி
நீங்காத் துன்ப நிரந்தரம் அறுதல்
பேரின்ப வீடோ
பெறமிக அரியது.