வாழ்வில் உயர்வு கொள்

சுயமரி யாதைகொள்தோழா! - நீ
துயர்கெடுப்பாய் வாழ்வில் உயர்வடைவாயே! -

உயர்வென்று பார்ப்பனன் சொன்னால், - நீ
உலகினில் மக்கள் எலாம்சமம் என்பாய்;
துயருறத் தாழ்ந்தவர் உள்ளார் - என்று
சொல்லிடுந் தீயரைத் தூவென் றுமிழ்வாய்!
அயலொரு கூட்டத்தார் ஆள்வோர் - சிலர்
ஆட்பட்டிருப்பவர் என்று சொல்வோரைப்
பயமின்றி நீதிருந் தச்சொல்! - சிலர்
பழமைசொன் னால்புது நிலைநலம் காட்டு!

சேசு முகம்மது என்றும்! - மற்றும்
சிவனென்றும் அரியென்றும் சித்தார்த்தனென்றும்,
பேசி வளர்க்கின்ற போரில் - உன்
பெயரையும் கூட்டுவர் நீஒப்ப வேண்டாம்!
காசைப் பிடுங்கிடு தற்கே - பலர்
கடவுளென் பார்!இரு காதையும் மூடு!
கூசி நடுங்கிடு தம்பி! - கெட்ட
கோயிலென் றால்ஒரு காதத்திலோடு!

கோயில் திருப்பணி என்பர் - அந்தக்
கோவில் விழாவென்று சொல்லியுன் வீட்டு
வாயிலில் வந்து னைக் காசு - கேட்கும்
வஞ்சக மூடரை மனிதர் என்னாதே!
வாயைத் திறக்கவும் சக்தி - இன்றி
வயிற்றைப் பிசைந்திடும் ஏழைகட்கேநீ
தாயென்ற பாவனை யோடும் - உன்
சதையையும் ஈந்திட ஒப்புதல் வேண்டும்.

கடவுள் துவக்கிக் கொடுத்த - பல
கவிதைகள், பதிகங்கள் செப்பிய பேர்கள்,
கடவுள் புவிக்கவ தாரம், - அந்தக்
கடவுளின் தொண்டர்கள், லோக குருக்கள்,
கடவுள் நிகர் தம்பிரான்கள் - ஜீயர்,
கழுகொத்த பூசுரர், பரமாத்து, மாக்கள்
கடவுள் அனுப்பிய தூதர் - வேறு
கதைகளினாலும் சுகங்கண்டதுண்டா?

அடிமை தவிர்ந்ததும் உண்டோ? - அன்றி
ஆதிமுதல் இந்தத் தேதிவரைக்கும்,
மிடிமை தவிர்த்ததும் உண்டோ? - அன்றி
மேல்நிலை என்பதைக் கண்டதும் உண்டோ?
குடிக்கவும் நீரற் றிருக்கும் - ஏழைக்
கூட்டத்தை எண்ணாமல்; கொடுந்தடி யர்க்கு
மடங்கட்டி வைத்ததி னாலே - தம்பி!
வசம்கெட்டுப் போனது நமதுநன்னாடு.

உழக்காத வஞ்சகர் தம்மை - மிக
உயர்வான சாதுக்கள் என்பது நன்றோ?
விழித்திருக் கும்போதி லேயே - நாட்டில்
விளையாடும் திருடரைச் 'சாமி' என் கின்றார்!
அழியாத மூடத் தனத்தை - ஏட்டில்
அழகாய் வரைந்திடும் பழிகாரர் தம்மை
முழுதாய்ந்த பாவலர் என்பார் - இவர்
முதலெழுத் தோதினும் மதியிருட் டாகும்!


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 3:26 pm)
பார்வை : 28


மேலே