பிலம்

பிலம் ஒன்று கண்டுரைப்பீர்!

வாலிதன் வால்வலி அஞ்சிக் கரந்து
கார்த்தவீரியார்ச்சுனன் உறைந்த பிலம்
வள்ளிக் குறம்
ஒளிந்த குகை
கொத்துக் குண்டு தற்காத்து
பொடியன் பதுங்கு குழி
போன்ற‌

பிலம் ஒன்று கண்டு சொல்வீர்!

உணவுப் பங்கீடு வாக்காளர் அடையாளம்
ஓட்டுநர் உரிமம் கடவுச்சீட்டு
ஆகக் கனத்த ஆவணம் எரித்துக்
குழைத்துப் பூசி
மின்வெட்டு நீர்த்தட்டு
எரியெண்ணெய்ச் சொட்டு
எனப்பல புத்திமுட்டுக்
கடந்துறைய‌

பிலம் ஒன்று கண்டு வைப்பீர்!

சாயக்கடை குடிசை அழுகல் பட்டினி
ஓலம் நோய் நடைபாதைச் சாவு
பகற்கொள்ளை
பம்மாத்து கருணை மழை
காட்டிக் கொடுத்தல் பகட்டுக் கவிநடைகள்
செம்மொழி பேசித் தன்மொழித் துரோகம்
தலைகாட்ட இயலாத‌

பிலம் ஒன்று கண்டடைவீர்!

காசுக்குப் பொய்பரப்பும் நோய் வளர்க்கும்
திரைப்படங்கள் தொலைக்காட்சி
தினத்தாள்கள் பேசு பேசென்று
பேசும் கைப்பேசி
கடந்து வராப்

பிலம் ஒன்று காவல் கொள்வீர்!

கனியேனும் வறியசெங் காயேனும்
உதிர்சருகு கந்த மூலங்களேனும்
கனல் வாதை வந்தெய்தின் அள்ளிப்
புசித்து நான்கண் மூடி மெளனியாகித்
தனியே இருப்பதற்கு எண்ணினேன்

பிலம் ஒன்று கண்டு சொல்வீர்!


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 3:05 pm)
பார்வை : 0


மேலே