எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மலையகம் புதைந்தது... எங்களுக்கென்ன... மூலைச் செய்தியாய் முந்தானை அவிழ்த்த...

மலையகம் புதைந்தது...

எங்களுக்கென்ன...

மூலைச் செய்தியாய்
முந்தானை அவிழ்த்த கதை....

பெட்டிச் செய்திகளாய்
தாலியறுத்த கதை..

தலைப்புச் செய்தியாய்
ஊர்கூடிக் கொள்ளையிட்ட கதை...

கிரிக்கெட்டில் சல்லாபம்
காவித்துணியில் களவாணி

இன்னும்... இன்னபிறவும்
திகட்டத் திகட்ட
கிடக்கிறது....

இன்னும் உச்சமாய்
உடையிலெது சிறப்பு...?
உயிர்த் தேவையான விவாதம்...

எந்தப் பேனாவும்
எழுதவில்லை... எல்லாக்
காணொளியும் குருடாகி
இருக்கிறது...

மலையகம்
புதைந்து விட்டது..........

இங்கும் சில்லறைகள்
புதைந்து போயிருக்குமடா...
தோண்ட வாருங்கள்..
பிணங்களும் வரும்....

நிர்வாணப் பிணங்கள்
புகைப்படமெடுத்து வக்கிரம்
தீர்த்துக் கொள்ளுங்கள்...

இடைவேளை விட்டோ..
எட்டாம் பக்கம் முடித்தோ
சிறப்பான தேநீறொன்று
குடியுங்கள்...

ரத்தச் சுவை
கலந்திருக்கும்.... கலக்கியது
அல்ல.. உறிஞ்சப்பட்டது..

எவனோ ஒரு
பெருவணிகனின் வருமான வரி
ஏமாற்றுக்காய்
போராட்டம் நடத்துவான்
தமிழ் உணர்வென முன்னிறுத்தி...

அப்போது
பேசுவோம்...

மனிதர்களைப் போலவா..
மண்ணும்.. கொல்லும்..?

யாரும் கருத்து சொல்ல வேண்டாம்... பகிருங்கள்..!! செய்தி பகிருங்கள்..!! துக்கம் பகிருங்கள்.....!! வலி பகிருங்கள்....!!! ஒன்றும் செய்ய இயலா நிலையில் இருக்கும் என்னை காறி உமிழுங்கள்...

பதிவு : கட்டாரி
நாள் : 31-Oct-14, 10:32 am

மேலே