போம் காலம்

வலக்கை மடித்துத் தலைக்கடை வைத்து
அலுத்த துயிலின் கனவுகள் போக்கிக்
கிடந்தவன் புறங்கடைச் சிகையில்
பூப்போல் உராய்ந்து
தீப்போல் எரிவது
எவர் குறுமூச்சு?

குருதி கொதித்துக் கதிக்க நடக்கையில்
ஏங்கியும் வாராக் காமினிப் பெண்ணா?

புலன் உணராத கொல்பகையாக
நிலத்தில் இறங்கிக் காலும் பரத்தி
பலிபறித்தெடுக்கும் நுண்ணுயிர் நோயா?

அந்தக வாகனம் ஆள்மாறாமல்
ஆய்ந்த சுடு மூச்சா?

கட்டை அரிவாள் சங்கிலி
ராம்பூர் சூரி சுழற்றிய காடையர் அடைந்த
பதிவெண் அற்ற
ஆட்டோப் புகையா?

சூதும் அறியா வாதும் பயிலா
எளிய மகனை இரங்கிக் குனிந்த
பச்சை நாயகிப் பரிவின் சொரிவா?

எவர் குறுமூச்சு எவர் நெடுமூச்சு
உறக்கம் கொன்று
கலக்கம் சேர்ப்பது?


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 3:06 pm)
பார்வை : 0


மேலே