தமிழ் கவிஞர்கள்
>>
நாஞ்சில் நாடன்
>>
விலங்கும் பறவையும் மீனும் அன்று
விலங்கும் பறவையும் மீனும் அன்று
அபசுரமற்ற இசை தேர்ந்து
வளரும் ஒரு பறவை
வெண்ணிலவின் ஒளி பருகிச்
சாதகம் களிக்கும்
மழையின் துளி உறிஞ்சி
ஐம்பூத வளி கலக்கும் ஒன்று
இணையின் இருப்பின் உறுதியில்
இருக்கும் அன்றில்
தன்னைச் சாம்பராக்கித்
தானுயிர்க்கும் ஃபீனிக்ஸ்
நீர் பிரித்து பாலுண்ணும் அன்னம்
கனலும் கங்கு விழுங்கிக்
கனைத்து நடக்கும் தீக்கோழி
தூது போகும் , கானம் இசைக்கும் ,
நடனமிடும் , வானிற் படகாகி நீந்தும் ,
பல புள்ளினங்கள்
பறவைக்கரசு , அண்டரண்டப் பட்சி ,
காசில் கொற்றத்து இராமன் சிற்றப்பன்
சடாயு ,
மயில் ராவணன் உயிர் கரந்து காத்த கிளி
என ஏராளம் தொன்மங்கள்
நினைவொன்றை நெடுகப் பேணி
நேசப் பெருவெளியில் நீந்தும்
விலங்கும் பறவையும் மீனும்
அல்லாத ஒன்று.